சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரி- முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்
- இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.
- நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சென்னை:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு கட்டப்படுகிறது.
6.5 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அதிநவீன ஆஸ்பத்திரியில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.
குழந்தை மருத்துவ முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோயறிதல் மற்றும் உள்நோயாளிகள் வார்டுகள் கட்டிடம் போன்றவற்றின் கட்டுமானம் ஏ.பிளாக்கில் இடம்பெறும். இது ரூ.125 கோடியில் கட்டப்படுகிறது.
பி.பிளாக்கில் வெளி நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சிறப்பு வார்டுகள் கட்டிடம், காத்திருப்பு கொட்டகை, பம்ப் அறை, உயர் மின்னழுத்த அறை போன்றவை ரூ.119 கோடியில் கட்டப்படுகிறது.
சி.பிளாக்கில் பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகம், முதுகலை மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தங்குமிட வளாகம் மற்றும் பிற வசதிகள் கொண்ட கட்டிடங்கள் ரூ.94 கோடியில் கட்டப்படுகிறது.
இதன் மொத்த மதிப்பு ரூ.338.70 கோடி ஆகும். தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த ஆஸ்பத்திரி அமைகிறது.
இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.