null
தினகரன், சசிகலாவிடம் கொள்ளையடித்த பணம் உள்ளது என்று பேசியது உண்மை- திண்டுக்கல் சீனிவாசன்
- 3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
- நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர். மகளிருக்கு ரூபாய் 1000 கொடுத்துவிட்டு டாஸ்மாக், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ரூ. 5 ஆயிரம் செலவு செய்யக்கூடிய குடும்பம் தற்போது ரூ.10 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
தி.மு.க. அளிக்கும் ரூ.1000 சென்று சேரும்பொழுது நாங்கள் கொடுக்கும் ரூ.2000 சென்று சேராதா? சென்ற தேர்தலில் ரூ.1500 அறிவித்து அது மக்களிடம் சென்று சேரவில்லை அதனால் தற்போது அறிவித்துள்ளார். கட்டாயம் இல்லங்களுக்கு சென்று சேரும்.
ஆளும் கட்சியாக தி.மு.க. உள்ளது. யாரை உருட்டுவது, மிரட்டுவது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. பா.ஜ.க.வுடன் ஏற்கனவே இருந்த கூட்டணி தான், டி.டி.வி. அவருடன் தான் இருந்தார். தற்போது வந்துள்ளார். பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மக்களிடம் வரவேற்பும் உள்ளது. ஆளுங்கட்சியிடம் பணம் உள்ளது. பல தவறான வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.
ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது ஊதியத்தின் 10 சதவீதம் பிடித்தம் செய்து பின்பு கொடுப்பது. அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க.வில் உள்ள சிலர் இனிப்பு வழங்கி வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகின்றனர். இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இப்படி இருக்க எப்படி வெற்றியடையும்.
கஞ்சா விற்பவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக அமைச்சர் பேசுகிறார். அனைவருக்கும் பங்கு செல்வதால் யாரும் கண்டு கொள்வதில்லை.
காவல்துறையினரே கஞ்சா விற்பனை செய்தார் என செய்தி வருகிறது. அரசாங்கமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் என சான்றிதழ் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு எங்கு உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி வெளிவரும். லாட்டரி வியாபாரி மார்ட்டின் மருமகனை அருகில் வைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாக பேசி வருகிறார். லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் இருப்பதாக பேசிய பேச்சுகள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது இணைந்து விட்டதால் எல்லாம் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.