கோமிய ஆராய்ச்சிக்கான அங்கீகாரம் - காமகோடி குறித்து காங்கிரஸின் கிண்டலும், ஸ்ரீதர் வேம்புவின் பதிலடியும்!
- உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
- ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர்
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 பேருக்கு, ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகளை அரசு அறிவித்துளது.
இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுதொடர்பாக பதிவிட்ட காங்கிரஸ், "பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடிக்கு வாழ்த்துகள். ஐஐடி மெட்ராஸில் கோமியம் குறித்த உங்கள் அதிநவீன ஆராய்ச்சியை அங்கீகரித்து, கோமியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக நாடு உங்களுக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கேரள காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி கொடுத்துள்ளார். காமகோடி மைக்ரோ-புராசஸர் வடிவமைப்பில் நிபுணர் என்றும், ஐஐடி மெட்ராஸை சிறந்த முறையில் வழிநடத்தி வருவதால் அவர் இந்த விருதுக்கு முழு தகுதியானவர் என்றும் கூறி காங்கிரஸின் கருத்தை "காலனித்துவ மனநிலை" என்று விமர்சித்துள்ளார்.
கோமியம் குறித்து காமகோடி கூறியது என்ன?
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் காமகோடி பேசியிருந்தார்.
ஒரு முதன்மையான தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் இதுபோன்ற அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்நிலையில் இதனை காங்கிரஸ் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.