இந்தியா

இனி 'வந்தே மாதரம்' இசைக்கும்போதும் எழுந்து நிற்க வேண்டுமா? - புதிய விதி குறித்து மத்திய அரசு விளக்கம்

Published On 2026-01-27 05:11 IST   |   Update On 2026-01-27 05:11:00 IST
  • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
  • தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை போல, வந்தே மாதரம் பாடப்படும்போதும் எழுந்து நிற்பது உள்ளிட்ட புதிய விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படும், புதிய விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.  இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு அளித்த விளக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதமான ஜன கண மன பாடலுக்கு இணையான அந்தஸ்து தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் உண்டு.

தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.

எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது என்றும், ஆனால் அதற்குரிய கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News