பத்ரிநாத்-கேதார்நாத் ஆலயங்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை!
- முக்பா பகுதிக்கும் இந்த தடை நீட்டிக்கப்படும்
- இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என பாஜக தலைவர் கருத்து
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி தாமிற்குள் (இந்துக்கள் புனித யாத்திரை தலம்) இனி இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஸ்ரீ கங்கோத்ரி கோயில் குழு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களைத் தொடர்ந்து, கங்கா தேவியின் குளிர்கால இருப்பிடமான முக்பா (கோயில் அருகில் உள்ள கிராமம்) பகுதிக்கும் நீட்டிக்கப்படும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கோயில் குழுவின் தலைவர் சுரேஷ் செம்வால், கங்கோத்ரி மற்றும் முக்பா பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பா.ஜ.க தலைவரும், ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவருமான ஹேமந்த் திவேதி, பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் BKTC-யின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு, குழுவின் அடுத்த வாரியக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "வரலாற்று ரீதியாக, கேதார்நாத் மற்றும் மானா பகுதிகள் முழுவதும் உள்ள கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பாஜக அல்லாத ஆட்சிக் காலங்களில், இந்த மரபுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. இப்போது இந்த மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.