உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்தவருக்கு பத்ம விருதா? மத்திய அரசை சாடிய சஞ்சய் ராவத்
- ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தைக் கவிழ்த்தார்.
- உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார்.
மத்திய அரசு நேற்று பத்ம விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோசியாரிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உத்தவ் தாக்கரே (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான MVA அரசை கவிழ்த்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சஞ்ச் ராவத் கூறுகையில் "பகத் சிங் கோஷியாரி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை கொலை செய்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தார். உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மை அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, மாநிலத்தில் பாஜக ஆட்சியை நிறுவ விரும்பினார். உச்சநீதிமன்றம் கூட, அவரது பதவிக் காலத்தில் கோஷியாரி செயல் சட்டவிரோதம் என சுட்டிக்காட்டியது.
முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்பட மகாயுதி அரசு கூட, இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பகத் சிங் கோஷியாரி 2019 முதல் 2023 வரை மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்தார். உத்தவ் தாக்கரே பரிந்துரை செய்தவர்களை மேலவை உறுப்பினராக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். மேலும், சத்திரபதி சிவாஜி மகாராஜா பழைய காலத்து சின்னம் எனக் கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.