இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கான முக்கிய நோக்கம் என்ன?- கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

Published On 2026-01-26 17:52 IST   |   Update On 2026-01-26 17:52:00 IST
  • 12-வது கேள்வி முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
  • மத்திய அரசு அரசியல் கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.

அதன்பிறகு மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பாளரான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-

நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, முதல் பகுதி வருகிற செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு ஆகும். 2-ம் கட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இமாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் 2027 பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து மக்களை தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

வீட்டுக்கணக்கெடுப்பு படிவத்தின் 12-வது கேள்வியில் குடும்பத்தினர் தலைவர் பட்டியலினத்தினரா, பழங்குடியினரா எனக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டவரா அல்லது பொதுப்பிரிவனரா? என்பது தெளிவாக கேட்கப்படவில்லை.

இந்த 12-வது கேள்வி பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்வி மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் மற்றும் ஒரு விரிவான, நியாயமான, நாடு தழுவிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அதன் அர்ப்பணிப்பு குறித்ததாகும்.

மோடி அரசு இது தொடர்பாக உடனடியாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News