குடியரசு தின விழாவில் மாரடைப்பால் சரிந்து போலீஸ் அதிகாரி உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ
- திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
- அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு போலீஸ் அதிகாரி உயிரிழந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா நகரில் நேற்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற நிகழ்வில் மாநில கலால் துறையில் பணிபுரிந்து வந்த காவல் துணை ஆய்வாளர் மோகன் ஜாதவ் பங்கேற்றார்.
தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது, சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வரிசையில் மோகன் ஜாதவ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனத் நிலைகுலைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள் உமர்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்திற்குத் தார்மீகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விழாவின் போது அவர் நிலைகுலைந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.