அழகுக் குறிப்புகள்
null

கிளியோபாட்ரா அழகுக்கு ஷியா வெண்ணெய் காரணமா?

Published On 2025-10-25 15:00 IST   |   Update On 2025-10-25 15:00:00 IST
  • பெண்களின் தங்கம் என ஷியா வெண்ணெய் அழைக்கப்படுகிறது.
  • நீச்சல் வீரர்கள் பலர், ஷியா வெண்ணெயை தலையில் தடவிக்கொண்டுதான் தண்ணீரில் இறங்குகின்றனர்!

ஷியா வெண்ணெய் என அழகு சாதனப் பொருட்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிரிக்காவில் ஏராளமாகக் காணப்படும் ஷியா மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். ஷியா மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் எடுக்கப்பட்டு, அவை நசுக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இந்த வெண்ணெய் எடுக்கப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஷியா வெண்ணெய் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம். கிளியோபாட்ராவின் காலத்தில் இருந்து ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளியோபாட்ரா, தனது அழகின் ரகசியங்களில் ஒன்றாக இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெண்களின் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தோல் மட்டுமின்றி முடி பராமரிப்பிற்கும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஷியா வெண்ணெயில் உள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான பல நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். 

சருமத்திற்கு தரும் நன்மைகள்

ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன. ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன. குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன. 


பல அரசிகள், தங்கள் சரும பராமரிப்பிற்கு ஷியா வெண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!

முடிக்கு தரும் நன்மைகள்

ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது. முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர். காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.

ஆரோக்கிய நன்மைகள்

ஷியா வெண்ணெய் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க மருத்துவத்தில் தசை வலி மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாத நோய் போன்றவைகளுக்கு நன்மை பயக்கும். வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, தோல் ஒவ்வாமைகளை ஆசுவாசப்படுத்தவும், பூச்சி கடிக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவான தோல் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகிறது. 

Tags:    

Similar News