சமையல்

கறிவேப்பிலை கோழி ரோஸ்ட்! தேங்காய் எண்ணெயில் வறுத்துப்பாருங்க! ஒரு பிடி பிடிக்கலாம்!

Published On 2025-10-21 15:00 IST   |   Update On 2025-10-21 15:01:00 IST
  • ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
  • கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.

சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.

கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை

* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.

* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.

* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.

* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.

* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.

சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.

Tags:    

Similar News