null
இந்த தீபாவளிக்கு மீன் சமைக்கலாம்! செட்டிநாடு ரெசிபி!
- வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
- செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.
செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.
செய்முறை
* முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)
* ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
* அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.
* வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
* மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.
* இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.
* கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.
ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்
ஆரோக்கிய நன்மைகள்
1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.