என் மலர்tooltip icon

    உலகம்

    • இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு.
    • நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த நிலையில் நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகும்படி இம்ரான்கான் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக இம்ரான்கானின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடிக்கு போராட் டத்திற்குத் தயாராகும்படி நான் ஒரு செய்தியை அனுப்பியுள்ளேன். முழு தேசமும் அதன் உரிமை களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த ஆதாரமும் இல்லாமல், சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நீதிபதியால் அவசரமாக வழங்கப்பட்டது. இவ்வழக்கில் எனது சட்டக் குழுவின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை" என்று தெரிவித்து உள்ளார்.

    • சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
    • தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.

    இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.
    • அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுவெளியில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அதில் இருந்த 16 முக்கியமான கோப்புகள் மாயமாகியுள்ளன.

    இதில் டொனால்ட் டிரம்ப் தொடர்பான புகைப்படங்களும் அடங்கும் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    ஆனால், சனிக்கிழமை காலையில் பார்த்தபோது, அதில் குறைந்தது புகைப்படங்கள் உள்ளிட்ட 16 கோப்புகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    மாயமான கோப்புகளில் ஒன்று, ஜெப்ரி எப்ஸ்டீன், டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமாகும்

    நிர்வாணப் பெண்களின் படங்கள் மற்றும் எப்ஸ்டீனின் இடத்தில் எடுக்கப்பட்ட சில ரகசிய புகைப்படங்களும் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    இந்தக் கோப்புகள் எதற்காக நீக்கப்பட்டன அல்லது தவறுதலாக நீக்கப்பட்டனவா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

    இன்னும் என்னவெல்லாம் மறைக்கப்படுகின்றன? அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.

    இதையும் படியுங்கள்: கம்போடியா உடனான மோதல் எதிரொலி: 1,000 பள்ளிகளை மூடியது தாய்லாந்து

    2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.

    2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

    'எப்ஸ்டீன் கோப்புகள்'

    ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.

    • இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர்.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர்கள் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதனால் வங்காளதேசத்தில் கடந்த 11-ந்தேதி இரவு இளைஞர்கள் போராட்டங்களில் குதித்தனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது. அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வர் என்பதால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். நேற்று மாலை பாராளுமன்றத்தை கைப்பற்ற இளைஞர்கள் முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். வங்காளதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாரும், தொழில் அதிபருமான பெலால் ஹொசைன் பபானிகஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே நேற்று அதிகாலை பெலால் ஹொ சைன் வீட்டுக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பினர். இதில் பெலால் ஹொசைனின் 7 வயது மகள் ஆயிஷா அக்தர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    மேலும், பெலால் ஹொ சைனும், அவரது மற்ற 2 மகள்களான சல்மா அக்தர் (வயது 16), சாமியா அக்தர் (14) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சுட்டு கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடி உடல் அடக்கம் நேற்று மதியம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்.

    மாணவர் இயக்க தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசும்போது, வங்கா ளதேசம் இருக்கும் வரை ஷெரீப் உஸ்மான் அனைத்து வங்காளதேச மக்களின் இதயங்களிலும் நிலைத்திருப்பார். நீங்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

    அவரது வார்த்தைகளும் தொலைநோக்குப் பார்வையும் தேசத்தின் நினைவில் நிலைத்திருந்து எதிர்கால சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றார்.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரங்கள், விசா மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது.
    • ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

    உலக பணக்காரர்களில் முதலிடத்தில் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் உள்ளார். இதற்கிடையே சமீபத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.54.46 லட்சம்) எட்டியது. இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்தை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்தார்.

    இந்த நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான வழக்கில் எலான் மஸ்க்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.67 லட்சம் கோடி) உயர்ந்தது.

    கடந்த அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது.

    இதற்கிடையே, 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டு சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இம்மாதத்தின் 2-வது வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலரை எட்டியது. தற்போது ஒரே வாரத்தில் சொத்தின் மதிப்பு 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்து எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

    • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    கம்போடியா உடனான மோதல் எதிரொலியாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தாய்லாந்து அரசாங்கம் மூடி உள்ளது.

    தாய்லாந்து-கம்போடியா எல்லையான தா முயென் தாம் என்ற இந்து கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

    இதனால் அடிக்கடி எல்லை பிரச்சினை நிலவுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனையடுத்து மலேசியாவில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கடந்த 7-ந்தேதி இந்த மோதல் மீண்டும் வெடித்தது. இதனால் தாக்குதலை தூண்டியதாக ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் பரஸ்பரம் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்து எல்லை பகுதியில் வசித்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி புரிராம் உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தற்காலிகமாக மூடுமாறு தாய்லாந்து கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    • செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது.
    • ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், "செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது. இருப்பினும் இந்தநிலை வருங்காலத்தில் நீடிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்வேன். ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது. இதில் அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளும் உயருமா என்று கேட்டால் வாய்ப்பில்லை. ஆகையால் முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்கு தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார்.
    • ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெற்ற முதல் பிரேசில் அதிபர் இவர் ஆவார்,

    பிரேசிலியா:

    பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

    இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வி அடைந்ததை போல்சனரோ ஒப்புக் கொள்ளவில்லை.

    எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் போல்சனரோவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் போல்சனரோவுக்கு 27 ஆண்டு தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, இந்த தண்டனையை எதிர்த்து புதிய மேல்முறையீட்டு மனுவை போல்சனரோ தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், போல்சனரோவின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    • சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த ஹாதி கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.
    • இதனால் கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தின் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் இளம் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கான மாணவர் எழுச்சி போராட்டம் மூலம் பிரபலமடைந்தவர். இவர் வரும் 2026 பிப்ரவரியில் நடக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.

    கடந்த 12-ம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற ஹாதியை பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த ஹாதி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.

    இதையடுத்து, கடந்த 2 நாளாக வங்கதேசத்தில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. ஹாதியின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரி நடக்கும் இப்போராட்டம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கும் எதிரானதாகவும் நடந்து வருகிறது. ஹசீனா ஆதரவு பத்திரிகைகள், ஊடக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறையால் கடந்த 2 நாளாக தலைநகர் டாக்காவில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாதியின் உடல் டாக்காவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

    அவரது குடும்பத்தினர் விருப்பப்படி, தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பிளாசா பகுதியில் தேசியக் கவி காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்வில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸ் பங்கேற்றார்.

    நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது.
    • சீனாவின் அத்துமீறலை கண்காணித்து வருகிறோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

    தைபே நகரம்:

    சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது.

    ஆனால், தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

    ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தைவான் அதனை மறுத்து வருகிறது.

    இதற்கிடையே தைவான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.

    இந்நிலையில், தைவான் கடற்பகுதியில் 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்தன.

    சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
    • ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை வலிமையை தீர்மானிக்கின்றன.

    ஒரு நாட்டில் பாஸ்போர்ட் வலிமையை வைத்தே உலக நாடுகளில் அந்நாட்டின் முக்கியத்துவம் அளவிடப்படுகிறது.

    அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் பாஸ்போர்ட் வலிமை ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index 2025) மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்றவுடன் விசா  பெற்று நுழைய முடியும் என்பதே இந்த தரவரிசையின் அடிப்படை.

    அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் தரவரிசையில் ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

    முதலிடத்தில் சிங்கப்பூர். உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.

    தென் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் பாஸ்போர்ட்டுடன் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

    டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 189 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன.

    ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் நான்காம் இடத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்களுக்கு 188 நாடுகளில் விசா இல்லாத அனுமதி கிடைக்கும்.

    சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் அனுமதியோடு பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளன.

    இந்த ஆண்டுப் பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை ஓரளவு மேம்படுத்தியுள்ளது.

    இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது 'விசா ஆன் அரைவல்' முறையில் பயணம் செய்ய முடியும்.

    சமீபகாலமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது இந்தியாவின் தரவரிசைக்கு வலு சேர்த்துள்ளது.

    அதேநேரம் அண்டை நாடான பாகிஸ்தான் பட்டியலில் 102-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மிகக் குறைவான நாடுகளுக்கே பாகிஸ்தான் குடிமக்கள் எளிதாகச் செல்ல முடியும்.

    சுவாரஸ்யமாக சீனா 58-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகி இருந்தபோதிலும் சீனா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து தனித்து உள்ளதால் அதன் தரவரிசை பிந்தங்கி உள்ளது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா தனது தூதரக உறவுகள் மூலம் தனது தரவரிசையை வேகமாக உயர்த்தி வருகிறது.      

    ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் கடைசியாக உள்ளது.

    ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பிற நாடுகளுடனான தூதரக உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படுகிறது.

    இந்தியா பல நாடுகளுடன் விசா இல்லாத பயண ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 

    ×