என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

    அதன்படி, அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

    • SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
    • சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.

    இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.
    • கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.

    பேராசிரியர் க.அன்பழகனின் 103-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத்துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!

    என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.

    கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார்.

    மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூந்தமல்லி மின்சார பேருந்து பணிமனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக ரூ.214.50 கோடி மதிப்பிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதன பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என 125 பேருந்துகள் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம்ஜடக் சிரு, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், மாநகர் போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குனர் இராம.சுந்தர பாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட னர்.

    • கொலை குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • சுடலைமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை முத்து (வயது 25). கூலி தொழிலாளி.

    இவர் இன்று காலை தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் திடீரென சுடலைமுத்துவுடன் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மீண்டும் அதே பகுதிக்கு வந்து சுடலை முத்துவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த சுடலைமுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

    ஆனாலும் 2 பேரும் துரத்தி சென்று ஓட ஓட விரட்டி சுடலை முத்துவை வழிமறித்து தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுடலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    உடனே அவரை வெட்டிய வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அங்கு சுடலைமுத்துவின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் சுடலைமுத்து உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை அங்கிருந்து எடுக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

    சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் (பொறுப்பு) டி.எஸ்.பி. ராமச்சந்திரன், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுடலைமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தான்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சாத்தான்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
    • மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

    கோவை:

    'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.

    சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.

    இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.

    உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.

    அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.

    ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார்.
    • அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

    ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார். அதில் கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும், உள்கட்சி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக (ஒன் டூ ஒன்) வரவழைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    இதுவரை 49 நாட்களில் 112 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.

    • கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
    • கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறை வசதிகள், தங்கும் விடுதிகள், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.

    இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 21 நாட்களும் கண்டுகளிக்கும் வகையில் இந்த யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது 2 மகள்களுடன் கடந்த 10-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.

    பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் வகையில் அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நிவாஸ் ஊழியர்கள் அந்த அறைக்கு முன்பாக நின்றுகொண்டு பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அத்துடன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    உணவில் விஷம் கலந்து அவர்கள் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
    • புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள பாறையில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

    அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள், பெயிண்ட் மூலம் பாறையில் இந்தியில் ராம் என எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில் புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடமாநிலத்தவர்களை வைத்தே அரசு அதிகாரிகள் இந்தி எழுத்துகளை அழித்தனர்.

    • போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.

    இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
    • கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று காலையில் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் பயங்கர சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 11 மணி வரை தொடங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, 'கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் - அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் 'மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் 24.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×