search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொப்புள் கொடி"

    மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த திரைப்பட கலைஞர், குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டாததால் அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்துரை அடுத்த இடைகாலைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவரது மனைவி ஜெயலட்சுமி (25) ரமேஷ் மனைவியுடன் சென்னையில் தங்கி இருந்து திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு தொழில் நுட்ப கலைஞராக பணியாற்றி வருகிறார். சென்னையில் இருக்கும் போதே ஜெயலட்சுமி தாய்மை அடைந்தார். ரமேஷ் அவரை எந்த ஆஸ்பத்திரிக்கும் அழைத்துசெல்லாமல், வீட்டில் வைத்தே இயற்கை உணவு, போக பயிற்சி அளித்து வந்தார். மனைவி நிறைமாத கர்ப்பிணி ஆனதும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரமேஷ் தனது சொந்த ஊரான இடைகாலுக்கு மனைவியை அழைத்து வந்தார்.

    இங்கு வீட்டில் வைத்து அவரே பிரசவம் பார்க்க ஏற்பாடுகளும் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ஜெயலட்சுமிக்கு சுகப்பிரசவம் ஆனது. ரமேசும் அவரது பெற்றோரும் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண்குழந்தைக்கு தொப்புள் கொடியை அகற்றாமல் அப்படியே வைத்து பாலூட்ட செய்துள்ளார்.

    இது குறித்து அருகில் வசித்து வந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு இலத்தூர் போலீசாரும், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும், நர்சுகளும் வந்தனர்.

    அவர்கள் தாய்க்கும்,குழந்தைக்கும் சிகிச்சைஅளிக்க முயன்றனர். ஆனால் அதற்கு ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார், வீட்டில் வைத்து பிரசவம் பார்க்க அரசு தடை விதித்துள்ளதால் உடனடியாக தாயையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் சேர்த்து தொப்புள் கொடியை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிடில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    இதனால் ரமேஷ் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் பிறந்த குழந்தையை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறினார். அங்கிருந்து ஆம்புலன்சில் அவர்கள் புறப்பட்டதும் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் நெல்லைக்கு செல்லாமல் சுரண்டை பகுதிக்கு சென்றது. இதனால் போலீசார் ஆம்புலன்சை மறித்து சுரண்டை அரசு ஆஸ்பத்திரியில் தாய் ஜெயலட்சுமியையும், பெண் குழந்தையையும் அனுமதித்தனர்.

    அங்கு பிறந்த பெண் குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டது. தாய் ஜெயலட்சுமிக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஜெயலட்சுமிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உடல் சோர்வுற்றதால் உடனடியாக அவரையும், குழந்தையையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஜெயலட்சுமிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த சம்பவம் நெல்லை, தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×