search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரக்கர் சித்தர்"

    • புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் கோரக்கர்.
    • அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர்.

    பதினெண் சித்தர்களுள் புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் "கோரக்கர்". இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16-வது இடத்தில் உள்ள இவர், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.

    இவர் தமது இளம் வயதை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாதசைவத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் 880 வருடம், 11 நாள் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் தென், வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் இவரின் வரலாறு அறியப்பட்டுள்ளது.

    இவரின் ஜீவசமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குபொய்கை நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது. வடக்குபொய்கை நல்லூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1233-ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்கு பின்னும் வாழ்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதிய மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (மானாமதுரை), பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் இவரது ஜீவசமாதிகள் உள்ளன.

    இவற்றில் வடக்குபொய்கைநல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிகை மலை, ஆனை மலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக் நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள ஜீவசமாதிக்கு சித்ரா பவுர்ணமி அன்று பொங்கலிட்டு படையல் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேப்போல், உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'கோரக்நாத் மந்திர்" என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.

    வரங்கள் அருளும் 'கோரக்கர்'

    இவருடன் தொடர்புடைய பிற மடங்களாக பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.

    ஐப்பசி பவுர்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்த இவரை வடக்குபொய்கை நல்லூரில் சென்று வழிபடுபவர்களுக்கு வரங்கள் பல அருள்வதாக இன்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

    ×