என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

'கோரக்கர் சித்தர்' தோன்றிய வரலாறு
- பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம்
- ‘என்ன சித்தரே’ என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.
கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியில் இருந்து பிறந்தவர் தான் 'கோரக்கர்'.
மச்சேந்திரன்
ஒரு முறை சிவபெருமானும்- பார்வதி தேவியும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சிவபெருமான், பார்வதி தேவிக்கு மந்திர உபதேசம் செய்து கொண்டு இருந்தார். கடலுக்குள் இருந்த மீன்களுள் ஒன்று அந்த மந்திரத்தை கிரகிக்க சிவனின் அருளால் அந்த மந்திரம் மீனின் வயிற்றில் இருந்து மனிதனாக உருவெடுத்தது. சிவனின் அருளால் பிறந்த அவனுக்கு மச்சேந்திரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
திருநீறு
சித்தனாக விளங்கிய மச்சேந்திரன் ஒரு முறை அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏன் அழுகிறாய்? என கேட்க அந்த பெண்ணோ குழந்தையின்மை காரணமாக தான் என்றாள். மலடியான அப்பெண்ணின் துன்பம் தீர்க்க மச்சேந்திரன், தாயே! இது திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய் என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். இதனை கண்ட அவரது தோழி யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய் எனக்கூறி, அதனை வீசி எறிந்து விடு, என்றாள். தோழியின் பேச்சை கேட்டு பயந்து போன அந்த பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.
கோரக்கா...
சில ஆண்டுகள் கடந்தன. மீண்டும் மச்சேந்திரரை சந்திக்கும் வாய்ப்பு அந்த பெண்ணுக்கு கிடைத்தது. அவள் அழுது கொண்டே நடந்ததை கூறினாள். மேலும், இதுவரை தனக்கு குழந்தை இல்லை என்பதையும் கூறினாள். அவளது நிலைமையை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்காமல் சரி பெண்ணே, உன் வீட்டு அடுப்பு சாம்பலை எங்கே கொட்டுவீர்கள்? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என கேட்டார்.
அதற்கு அந்த பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்த சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது என்றாள். இதனை கேட்ட மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகம் இருக்கிறது எனக்கூறி கொண்டு எருக்குழிக்கு அருகே சென்று 'கோரக்கா.. கோரக்கா...' என குரல் கொடுத்தார்.
வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை...
'என்ன சித்தரே' என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா என்றார் சித்தர். அப்போது சாம்பலை கொடுத்த நாளில் இருந்து, இதுவரை 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 10 வயது சிறுவன் ஒருவன் தெய்வீக லட்சணங்களுடன் உள்ளிருந்து எழுந்து வெளியே வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர்.
சுவாமி! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமையை அறியாமல் அதனை வீசி எறிந்து, இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேனே... எனக்கூறி கதறி அழுது கொண்டே மகனை அரவணைத்து கொண்டாள். ஆனால், அவளது மகன் அவளை உதறி தள்ளிவிட்டு தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாயே.
என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன் என்றான். இருப்பினும் என் தாய் என்ற முறையில் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.
சித்தி பெற்றார்
தான் செய்த தவறுக்கு வருந்திய அந்த தாயோ செய்வதறியாது வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின், கோரக்கர் மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் ஆனார். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞானநெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாலா திசைகளிலும் அலைந்து சித்தி பெற்றார்.






