search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல் முகாம்"

    • தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
    • 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர்.

    மிச்சாங் புயல் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசால் நடத்தப்பட்ட 6 ஆயிரம் முகாம்கள் மூலம் மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். 6 ஆயிரம் பேருக்கு காய்ச்சல், 70 ஆயிரம் பேருக்கு சளி, இருமல் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அக்டோபர் 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மழைக்கால காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. 7 லட்சம் பேர் பருவ மழை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1-ந்தேதி முதல் (நாளை) ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இந்த காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும்.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக டெங்கு பாதிப்பை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது.

    அதன்படி, டெங்கு பாதிப்பை கண்காணிக்க 2 இணை இயக்குனர்களும், 7 கூடுதல் இயக்குனர்கள் என மொத்தம் 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 45 சுகாதார மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிக்கும் 4 முதல் 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.

    மதுரை:

    உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்.

    மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். இதை தடுப்பது தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017-ல் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் எந்த கடையில் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாக மாறுகிறது. எங்கே தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லை.

    மதுரை எய்ம்ஸ் பொருத்தவரை தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், கட்டிடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்க உள்ளனர் என்ற போதிலும் செய்தியாளர்கள் இதனை ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூரியகுமார் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெரும் தீக்காயம் அடைந்தார்.
    • சிறுவனுக்கு 6 அறுவை சிகிச்சையினை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சூரியகுமார் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெரும் தீக்காயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, குணமடைந்துள்ளார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை ஓமந்தூரார் பன்நோக்கு ஆஸ்பத்திரி கூட்டரங்கிற்கு வரவழைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார். சிறுவனிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர் அமைச்சர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுவன் சூரியகுமார் குடும்பத்தினர் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வழங்கினேன். அவர்கள் அதில் கடந்த ஓராண்டு தங்கி சிகிச்சை பெற்றனர். சிறுவனுக்கு வலது காது, இடது, வலது கைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடி வயிற்று ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது சிறுவன் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் சிறப்பு சிகிச்சையினை அளித்திருந்தனர்.

    சிறுவனுக்கு 6 அறுவை சிகிச்சையினை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருக்கிறார்.

    கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவில் உச்சத்தை தொட்டிருந்த நேரத்தில், முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த எண்ணிக்கை தினமும் ஒன்று அல்லது இரண்டு அளவிற்கு குறைந்து வந்தது. பின்னர் முழுவதுமாக குறைத்தோம்.

    மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பைக்கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இந்தநிலையில் இன்புளுயன்சா காய்ச்சலை தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 1,558 இடங்களில் அமைக்கப்பட்டு அதில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம்கள் நடமாடும் ஆஸ்பத்திரிகளை கொண்டு தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில் சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட 1558 முகாம்கள் நடத்தப்பட்டன.
    • மக்கள் தேவையில்லாமல் பதற்றம் அடைய அவசியமில்லை.

    சென்னை:

    நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.

    அதன்படி சென்னையில் 200 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தது. இந்த முகாம்கள் மூலம் பயன்அடைந்த பயனாளிகள் விபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட 1558 முகாம்கள் நடத்தப்பட்டன. மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவ குழுக்கள் 2 ஆயிரத்து 888 பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்த முகாம்கள் மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 347 பயனாளிகள் பலன் அடைந்துள்ளார்கள். அவர்களில் 2 ஆயிரத்து 663 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    9 ஆயிரத்து 840 பேருக்கு காய்ச்சலுடன் இருமல், சளி ஆகியவற்றுக்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டன. எவரும் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் தேவையில்லாமல் பதற்றம் அடைய அவசியமில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மருத்துவ ரீதியாக காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்து உள்ளார்கள்.
    • ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல்.

    சென்னை:

    பருவ காலங்களில் வழக்கமாக வைரஸ் காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது 'எச்.3 என்2' என்ற புதிய வகை வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி காய்ச்சலை உருவாக்குகிறது.

    இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளாலும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    இந்த காய்ச்சல் பரவுவது பற்றியும், கட்டுப்படுத்துவது பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தியது.

    தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவது பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது.

    இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வேகமாக பரவி வருவது தெரிய வந்திருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்து உள்ளார்கள். ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல்.

    இதில் சி-டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

    சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்றிரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு அனைத்து இடங்களிலும் முகாம்கள் தொடங்கியது. சைதாப்பேட்டை ரசாக் தெருவில் காய்ச்சல் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர். காய்ச்சல் இருந்தவர்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மற்றவர்களிடம் இந்த காய்ச்சல் வந்தால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? எப்படி முன்எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    சாதாரணமாக ஜூரம், தலைவலி என்றாலே மாத்திரையை தேடக்கூடாது. உடலில் நீர்சத்து குறைவதால் கூட காய்ச்சல் வரும். பயணம் செய்யும் போதோ, அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போதோ நீர்சத்து குறைந்து உடல் சூடாகி, சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் போல்தான் இருக்கும்.

    இதற்கும் நாமே மாத்திரை எடுத்துக் கொண்டால் பாதிக்கும். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாக கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரலுக்கும், கிட்னிக்கும் நாமே ஆபத்தை தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

    பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தால் முதலில் நீர்சத்து நிறைந்த ஏதாவது உணவை எடுத்துக் கொண்டு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் சரியாகாவிட்டால் மாத்திரையை தேடலாம்.

    உடலில் கிருமித்தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல் தான் வரும். எனவே காய்ச்சல் எதனால் வந்திருக்கிறது என்பதை அறிந்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது என்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

    காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் ரைவஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை.

    காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் 3, 4 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் குணமாகும். இந்த பாதிப்புடன் வெளியே வந்தால் இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அதில் இருந்து வெளியே வரும் நீர்துவாளைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடும். அதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் கொரோனா மிதமான பாதிப்பு கூடி வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புதான். தமிழகத்தில் கொரோனா தொற்று கூடினாலும் பாதிப்பு பெரிதாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு 2ஆக குறைந்தது. தற்போது 20, 25 ஆக உயர்ந்து இருக்கிறது. மிதமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான். அதனால் பதட்டம் அடைய தேவையில்லை.

    தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தனிப்பட்ட ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து வெளியில் சென்றால் நல்லது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தால் 380 நடமாடும் மருத்துவ வாகனம் பயன்படுத்தப்படும். தேவை ஏற்பட்டால் முகாம்கள் 1500ஆக அதிகரிக்கப்படும். இந்த வைரஸ் சமூக தொற்றாக மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ராணிப்பேட்டை பகுதியில் நடைபெறும் முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    • காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற் கொள்ள உள்ளனர்.
    • இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள காய்ச்சல் முகாம்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் இடம்பெற உள்ளனர். இதை தவிர காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற் கொள்ள உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ப்ளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதார துறை இயக்குனர் சில முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.

    அதன்படி சமூகத்தில் பரவி வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப் படுத்துவதுடன் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும், காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    இதை தவிர குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து வினியோகித்தல், உணவு பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் வரும் 10-ந் தேதி நடை பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
    • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.

    சென்னை:

    நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் 'எச்.3 என்-2' வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும்.

    தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும்.

    காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.

    பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×