search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை குண்டுவெடிப்பு"

    இலங்கைகுண்டு வெடிப்பு எதிரொலியால் சேலம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts

    சேலம்:

    இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டுகள் வெடித்ததில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

    இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ரெயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இலங்கையை போன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் பிளாட் பாரங்களில் ரெயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தானம், பாலமுருகன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது பெங்களூருவில் இருந்து கோவை சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெட்டிகளில் ஏறி போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் நுழைவு வாயில்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த சோதனை மதியம் வரை நடைபெற்றது. அங்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    போலீசாரின் திடீர் சோதனையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. #SrilankanBlasts

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியால் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts

    மதுரை:

    இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

    இதையடுத்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி தமிழகத்தில் விமானநிலையம், வழிபாட்டு தலங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இலங்கை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க தமிழக கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். கடல் பாதுகாப்பு குறித்து கடலோர காவல் படை டி.ஐ.ஜி. ராமேசுவரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரையில் கடந்த 2 நாட்களாக முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 5 கோபுர நழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மதுரை விமான நிலையத்தில் மத்திய படை போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாகம், தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று சோதனை நடத்தினர்.

    மேலும் மதுரையில் இருந்து புறப்படும் ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #SrilankanBlasts

    சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். #SriLankablasts
    மங்களூரு:

    இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஓட்டல் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 359 பேர் மரணம் அடைந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த குண்டுவெடிப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூரை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் சரபத்கட்டே பகுதியில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இந்த நிலையில் அவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்கள் கடந்த 21-ந்தேதி இலங்கைக்கு சென்றனர். அந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அவர்களுக்கு இலங்கை கொழும்பு நகரில் உள்ள ‘தி சின்னமோன் கிராண்ட்’ (குண்டு வெடித்த ஓட்டல்) என்ற ஓட்டலில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே சுற்றுலா நிறுவனம், அவர்களுக்கு அந்த ஓட்டலுக்கு பதிலாக அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் அறையை பதிவு செய்து கொடுத்தது. இதனால் அவர்கள் அந்த ஓட்டல் அறையில் இருந்தனர். அப்போது தான் ‘தி சின்னமோன் கிராண்ட்’ ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த ஓட்டலில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    தனியார் சுற்றுலா நிறுவனம் கடைசி நேரத்தில் ஓட்டலை மாற்றியதால் கர்நாடக தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் உயிர் தப்பிய தகவலை கேட்டு வேனூரில் உள்ள தம்பதியின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடவுள் அருளால் கேசவராஜூம், ஸ்ரீதேவியும் உயிர் பிழைத்து உள்ளனர்’ என்றனர். #SriLankablasts
    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #SriLankablasts
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

    இந்த நிலையில் இலங்கையில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 310 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, போலீசார் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #SriLankablasts

    இலங்கையில் ஈஸ்டர் விடுமுறையை கழிக்கலாம் என்று தன் குழந்தைகளுடன் கொழும்பு வந்த டென்மார்க் பணக்காரர் குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SriLankablasts
    கொழும்பு:

    டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (வயது 46). இவருக்கு நான்கு குழந்தைகள்.

    போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர். பல்வேறு தொழில் நிறுவ னங்கள் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி.

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து இருந்தார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

    இந்த தகவலை ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்’ஸ் பே‌ஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.

    ‘இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்’ என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.



    குண்டு வெடிப்புக்கு 3 குழந்தைகளை பறி கொடுத்த ஆன்ட்ரசனுக்கு ஸ்காட்லாந்து நாட்டில் 2 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1 சதவிகிதம் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது.

    இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜான்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமானவை. #SriLankablasts



    இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். #SriLankablast #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பு தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் தயாராகி வருவதாக கடந்த 4-ந் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது.

    இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில், “கொழும்பில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

    இந்தியாவின் இந்த எச்சரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்களும், ராணுவ தளபதிகளும் சற்று அலட்சியமாக கருதினார்கள். என்றாலும் இலங்கை போலீஸ் தலைவர், பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பினார்.

    அதில் அவர், “கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர் போலீசார் அதன் பிறகும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.



    போலீசாரின் அலட்சியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டப்படி தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டனர். 

    இந்த நிலையில் “கவனக்குறைவாக இருந்து விட்டோம்” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    கொழும்பில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறிய பிறகும் நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். உண்மையில் நாங்கள் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம்.

    சர்வதேச உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்”

    இவ்வாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இந்தியா உதவியுடன் போரில் தோற்கடித்த இலங்கை அதன்பிறகு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக கெடுபிடிகள் செய்யப்பட்டன.

    கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறைக்கப்பட்டன. இந்த பாதுகாப்பு குறைபாடு இலங்கைக்கு நேற்று மிகப் பெரிய இழப்பை கொடுத்து விட்டது. #SriLankablast #RanilWickremesinghe
     
    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் 8-வதாக மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில் மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இதற்கிடையில், இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast
    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ColomboAttack

    சென்னை:

    முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இயேசு பிரான் மானுடத்தை மீட்க தன்னையே சிலுவையில் பலியாக்கிக் கொண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மகத்தான விழாவான புனித ஈஸ்டர் பெருவிழா நாளில், அவ்விழாவினைக் கொண்டாட இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தி கேட்டு சொல்லொண்ணா வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.

    பெரும்பாலும் தமிழ் கிறிஸ்தவ பெருமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அப்பாவி பொதுமக்கள் ஆண்டவனை வழிபட கூடியிருக்கும் போது, அவர்களை தாக்கியவர்கள் எத்தனை இரக்க மற்றவர்களாக இருப்பார்கள் என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம். அவர்தம் குடும்பங்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில், சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல்களுக்கு மீண்டும் எங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ColomboAttack

    இலங்கையில் இன்று 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், குண்டுவெடிப்புக்கு கொஞ்சம் முன்னரே தான் அங்கிருந்து புறப்பட்டதாக ராதிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar
    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் திரண்டு இருந்த நிலையில், இன்று காலை 8.45 மணியளவில் அங்குள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம், ஷாங்ரிலா, சினமான் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது.


    இந்த குண்டுவெடிப்பில் சுமார் 129 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த ராதிகா சரத்குமார், குண்டுவெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு கிளம்பியதன் மூலம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

    இதுகுறித்து ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SriLankaBlasts #RadikaaSarathkumar

    ×