search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EPS condemns"

    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ColomboAttack

    சென்னை:

    முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இயேசு பிரான் மானுடத்தை மீட்க தன்னையே சிலுவையில் பலியாக்கிக் கொண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மகத்தான விழாவான புனித ஈஸ்டர் பெருவிழா நாளில், அவ்விழாவினைக் கொண்டாட இலங்கையில் உள்ள தேவாலயங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தி கேட்டு சொல்லொண்ணா வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.

    பெரும்பாலும் தமிழ் கிறிஸ்தவ பெருமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அப்பாவி பொதுமக்கள் ஆண்டவனை வழிபட கூடியிருக்கும் போது, அவர்களை தாக்கியவர்கள் எத்தனை இரக்க மற்றவர்களாக இருப்பார்கள் என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் நித்திய இளைப்பாறுதலை வழங்க பிரார்த்திக்கிறோம். அவர்தம் குடும்பங்களுக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அருள வேண்டி நிற்கிறோம். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    முற்றிலும் மனிதாபிமானமற்ற முறையில், சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல்களுக்கு மீண்டும் எங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ColomboAttack

    ×