search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு கடைகள்"

    • திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளது. நவீன வசதியுடன் அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

    இதனால் திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் திருவள்ளூரில் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. குறுகிய சாலைகளே உள்ளன. அதுவும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடைபாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள ஜெ.என் சாலை, சி.வி. நாயுடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. காந்திபுரம் நகர பஸ் நிலையத்திற்கு உட்புறமும் வெளிப்புறமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள், குளிர்பானக்கடைகள் என பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 20 கடைகளை இடித்து அகற்றினர். அப்போது கடையின் உரிமையாளர்கள் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • தரைக்கடைகள் தினசரி வாடகை ரூ.41 ஆக குறைப்பு

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரையில் சாலையோரம் ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர்.

    குறிப்பாக அந்த பகுதியில் உள்ள நடைமேடைகளை தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் தினந்தோறும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் வெங்கடேசன் தலைமையில் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணா சாலையில் நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமித்து எந்த கவித காரணத்தைக் கொண்டும் கடைகள் வைக்கக்கூடாது பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ஏற்கனவே தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    எச்சரிக்கை

    அந்த இடத்தில் பழக்கடைகளை வைக்க வேண்டும் என மீறி சாலைகள் கடை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் இந்த சம்பவத்தால் இன்று காலை அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன .இந்த இடத்தில் வியாபாரம் ஆகாததால் வியாபாரிகள் மண்டி தெரு, லாங்கு பஜார் மற்றும் அண்ணா சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது சாலைகளில் கடை வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் இருந்து தரைக் கடைகளுக்கு தினசரி வாடகை ஒரு 100 வசூலிக்கப்பட்டு வந்தது இந்த கடைகளுக்கு தற்போது தினசரி வாடகை ரூ.41 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது.
    • கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் சாக்கடை கால்வாயை மூடி கட்டப்பட்டுள்ள கடைகள் ஆகியவற்றை அகற்ற மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பூர் காந்தி நகர் 80 அடி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் அதிகாரிகள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    • மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
    • மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

    இங்கு பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பூதூர், வேடந்தாங்கல், பாக்கம், உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இருந்து, மதுராந்தகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்ட கடைகளை அகற்ற மதுராந்தகம் நகராட்சி, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் மதுராந்தகம் கோட்டாட்சியர், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாநில நெடுஞ்சாலை துறை மதுராந்தகம் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    மதுராந்தகம் நகரில் நேற்று முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • சாக்கடை கழிவுநீர் சரிவர செல்வதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
    • உழவர் சந்தை அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்த முட்புதர்களை அகற்றி அதனை சரி செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாகவும் சாக்கடை கால்வாய்களை அடைத்து கடைகள் போடுவதால் சாக்கடை கழிவுநீர் சரிவர செல்வதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து இன்று காலை 1வது மண்டல உதவி கமிஷனர் சுப்ரமணியம் தலைமையில் உதவி பொறியாளர் ஹரி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை உழவர் சந்தையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். 

    மேலும் சாக்கடை கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். மேலும் உழவர் சந்தை அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்த முட்புதர்களை அகற்றி அதனை சரி செய்தனர்.

    • புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.
    • ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையோர நடைபாதைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை புரசைவாக்கம் தானா தெரு சாலையில் திடீரென ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் பெருகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் புரசைவாக்கம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நடைபாதை பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சாலை ஓர பகுதிகளில் நடந்து செல்ல பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலால சிறுசிறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் புரசைவாக்கம் பகுதி முழுவதும் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இந்த திடீர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் உழவர் சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.

    பழனி:

    பழனி உழவர் சந்தையில் சுமார் 60 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் உழவர் சந்தையின் பின்புறம் மற்றும் முன்புறத்தில் சாலையோரம் காய்கறி கடைகள் ஏராளமானோர் அமைத்திருந்தனர்.

    இதனால் சந்தைக்குள் வராமல் வெளியிலேயே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் உழவர் சந்ைத வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு காய்கறி கடைகள் இன்று அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்ப ட்டது.

    இதனைத் தொடர்ந்து பெரும்பாலான கடைகள் இன்று அமைக்கப்பட வில்லை. குறைந்த அளவு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.

    இதேபோல் மீண்டும் இங்கு கடைகள் அமைக்கா தவாறு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆக்கிரமிப்பு கடைகளால் தி.நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது.
    • சாலையோர பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தி.நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் திடீரென ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் பெருகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் தி.நகர் பஸ் நிலையம் முதல் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நடைபாதை பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள், வறுகடலை, பொரி கடைகள், பானிபூரி கடைகள், செருப்பு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதனால் சாலையோர பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் அங்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் தி.நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது.

    எனவே இந்த கடைகளை உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த வாரம் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    இந்த நிலையில் தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனை திருத்தணி தாசில்தார் வெண்ணிலா பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் வெண்ணிலா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ×