search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur Robbery"

    • சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மர்மநபர்கள் அரிவாள் முனையில் மிரட்டினர்.
    • கொள்ளை குறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37 ) விவசாயி. இவரது மனைவி சிவசங்கரி (32). சம்பவத்தன்று இரவில் கணவன்-மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டினர். எழுந்து சென்று ஜெயராஜ் கதவைத் திறந்தார். சட்டென்று வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளை காட்டி ஜெயராஜை மிரட்டினர்.

    சத்தம் கேட்டு எழுந்த சிவசங்கரியையும் மிரட்டினர். பின்னர் தம்பதியை கயிறால் கட்டி போட்டனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாள் முனையில் மிரட்டினர்.

    இதையடுத்து சிவசங்கரியின் கழுத்தில் கிடந்த 4 முக்கால் பவுன் தங்க தாலி செயின், 30 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் வீட்டில் இருந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதனைத் தொடர்ந்து கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்த ஜெயராஜ் அந்த மர்மநபர்களை துரத்தி சென்றார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கீழ சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போன் மற்றும் ரூ.300 பணத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து பிரபு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாரியம்மன்கோவிலை சேர்ந்த நாகராஜ்(22), நாடியாப்பிள்ளை தெருவை சேர்ந்த குருமூர்த்தி(24) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.300 பணமும் மீட்கப்பட்டது. மேலும் வழிப்பறிக்கு உபயோகப்படுத்திய மோட்டார் சைக்கிளிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
    தஞ்சையில் மூதாட்டியின் வாயை பொத்தி நகையை பறிக்க முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சை:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரெனால்ட். இவரது மனைவி மரகதம்மேரி (வயது 65). இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

    முனிசிபல் காலனியை சேர்ந்த அண்ணன் -தம்பிகளான கிளமன்ட்டேவிட் (25), ஜேம்ஸ் கேம்ரோன் (23) ஆகியோர் மரகதத்திற்கு சுகர் டெஸ்ட் எடுக்க அடிக்கடி சென்றுள்ளனர். இவர்கள் மீது மரகதமேரிக்கு நம்பிக்கை வந்துள்ளது. இதனால் அனைத்து வேலைகளையும் அவர்களிடமே சொல்லி பார்த்துள்ளார்.

    சம்பவத்தன்று மரகதம் மேரியை வாயை பொத்தி கழுத்தில் கிடந்த செயினை பறிக்க கிளமன்டேவிட், ஜேம்ஸ்கேம்ரோன் ஆகியோர் முயன்ற போது அவர் கத்தியுள்ளார். உடனே இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து மரகதம் மேரி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் வழக்குப்பதிவு செய்து கிளமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
    கும்பகோணத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம், மார்ச்.15-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வலங்கைமான் ரோட்டில் உள்ள ராஜமீனா நகரில் வசித்து வருபவர் தொல்காப்பியன் (வயது 55). இவர் பட்டுக்கோட்டையில் மின்வாரிய உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (50). இவர் பருத்தி சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது 2-வது மகள் காவ்யாவும், பிரதீப் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் மகளையும், மருமகனையும் பார்ப் பதற்காக தொல்காப்பியன் தனது மனைவியுடன் கடந்த 10-ந்தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

    வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தொல்காப்பியன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. பின்னர் மாடி வீட்டுக்கு சென்று அவர் பார்த்த போது, அங்கும் பீரோவில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    பூட்டி கிடந்த வீட்டை மர்ம கும்பல் நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ள சம்பவம் பற்றி நாச்சியார் கோவில் போலீசில் தொல்காப்பியன் புகார் செய்தார். திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுனர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன், மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது. * * * கொள்ளை நடந்த மின்வாரிய அதிகாரி வீட்டை படத்தில் காணலாம்.

    கபிஸ்தலம் அருகே வீடு புகுந்து ஐம்பொன் சிலை என நினைத்து சாமி சிலைகளை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 50) இவர் தன் வீட்டில் காளி சிலை, காயத்ரி சிலை, புவனேஸ்வரி சிலை, ஆகிய மூன்று பித்தளை சிலைகளை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இதனை கவனித்து வந்த மூன்று நபர்கள் ஐம்பொன் சிலை என நினைத்து கடந்த 8-ந்தேதி அவர் வீட்டிற்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி 3 பேரையும் வீட்டிற்குள் ரவிச்சந்திரன் அனுமதித்துள்ளார். உள்ளே புகுந்த அவர்கள் ரவிச்சந்திரனை தாக்கி அறையில் வைத்து பூட்டி விட்டு சிலைகளை திருடிச் சென்றனர்.

    இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சம்பத்குமார், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர். அப்போது தஞ்சாவூரில் சுற்றித்திரிந்த 3 பேரையும் பிடித்து 3 சிலைகளை மீட்டனர்.

    அவர்கள் 3 பேரும் துவாக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளிவேல் மகன் கார்த்திக் (26), வடக்கூர் வடக்கு தெரு முருகேசன் மகன் இன்பநாதன் (29) என்பதும் தஞ்சாவூர் அண்ணாநகரை சேர்ந்த கதிரவன் வினோத் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அம்மாபேட்டை அருகே தொழிலாளி வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை-நாகை மெயின் ரோட்டில் உள்ள பல்லவராயன் பேட்டையில் வசிப்பவர் கூலி தொழிலாளி முருகேசன் (வயது 38). இவர் பிப்ரவரி 5-ந்தேதி தனது உறவினர் திருமணத்திற்காக தேனி மாவட்டம் சென்றார்.

    பின்னர் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவும், பீரோவின் கதவும் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவில் வெள்ளிக் கொலுசு, ரொக்கப் பணம் 2 ஆயிரம், வங்கி ஏ.டி.எம் கார்டு ஆகியவை திருட்டுப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வெள்ளி - பணத்தை திருடிசென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் முருகேசன் மனைவி சத்யா புகார் செய்தார்.

    இதன் பிறகு தனது பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம் கார்டு மூலம் அம்மாபேட்டையில் 4 முறை சுமார் ரூ.15 ஆயிரத்து 500 வரை பணத்தை கொள்ளையர்கள் எடுத்திருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இந்த தகவலை உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் ஆசியர் வீட்டு கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை கீழமேல் புதுத் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது52). இவர் அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 4-ந்தேதி இரவு திருப்பதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 3 பீரோக்களையும் உடைத்து பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி போலீசார் கணேசுக்கு போன் செய்து வீட்டில் திருட்டு நடந்திருப்பதாகவும். வீட்டில் இருந்த பொருட்கள் பற்றியும் விசாரித்தனர். அப்போது பீரோவில் 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்தாக கணேஷ் தெரிவித்தார்.

    அதன் மூலம் 30 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் வீட்டின் சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் மோப்பநாய் கொண்டு துப்பு துலக்க முடியாதவாறு இதனை தூவி சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×