search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ripkarunanidhi"

    திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

    இதேபோல் தமிழகம் முழுவதிலும் தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் புகைப்படங்கள், பேனர்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

    அவ்வகையில் மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கம் சார்பில் கருணாநிதிக்கு கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் இரா.கண்ணன் தலைமையில் சங்க செயலாளர் எட்வின் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    சென்னை:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜிஅரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாமையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பிற்பகல் 2.20 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  #Karunanidhidath #RIPKarunanidhi #dmk #rajajihall
    கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கில் திரண்ட தொண்டர்களால் கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவர்களை கலைந்துசெல்லும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். #karunanidhideath #dmk #ripkarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளனர். நேரம் செல்லச்செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. 

    கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 26 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து தொண்டர் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு வந்ததால், அவர்களை கட்டுப்படுத்தி இறுதி ஊர்வலத்தை அமைதியாக நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. 

    எனவே, மு.க.ஸ்டாலின் உடனடியாக தொண்டர்களிடையே மைக்கில் பேசினார். கருணாநிதியின் மறைவு, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பட்ட தடைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர், அமைதியாக கலைந்துசெல்லும்படி கூறினார்.

    “கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும்படி முதல்வரை சந்தித்து கேட்டபோது, தர முடியாது என்று மறுத்தார்கள். இதையடுது கலைஞரை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை போராடி பெற்றுள்ளோம். கூட்ட நெரிசலை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். எனவே, கலவரம் ஏற்பட இடம் தராமல் அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். அமைதியாக கலைந்து சென்றால்தான் சரியாக 4 மணிக்கு தலைவருடைய இறுதிப்பயணத்தை தொடங்க முடியும். 

    உங்கள் சகோதரனாக கேட்கிறேன் தயவு செய்து கலைந்துசெல்லுங்கள். தயவு செய்து யாரும் சுவர் மற்றும் படிக்கட்டு வழியாக ஏறி வந்து கலைஞரின் முகத்தை பார்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். என் வார்த்தையை நீங்கள் கேட்பீர்கள் என நம்புகிறேன்”  என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    அவரது அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்ட தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துசெல்லத் தொடங்கினர்.  #karunanidhideath #dmk #ripkarunanidhi
    தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த சாதனை தலைவராக திகழ்ந்த கருணாநிதியை அடையாளம் காட்டிய திருவாரூர் பள்ளி. #karunanidhideath #dmk

    திருவாரூர்:

    தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த சாதனை தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சக்திமிக்க தலைவராக திகழ்ந்தார். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்றாலும், தன்னை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிக்கொண்ட ஊர் திருவாரூர்.

    திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அப்போது அரசு பள்ளியாக இருந்தபோது தனது பள்ளி படிப்பை கருணாநிதி அங்குதான் தொடங்கினார். பள்ளியில் தன்னை சேர்க்க மறுத்தபோது கமலாலய குளத்தில் குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தேறி உள்ளது. இவருடைய நெருங்கிய நண்பராக இருந்தவர் தென்னன்.

    பரந்து விரிந்த கமலாலய குளத்தில் கருணாநிதியும், தென்னனும் நீச்சல் அடித்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல முயன்றனர். பாதி தூரத்தில் உடல் சோர்வடைந்த நிலையில் இனி செல்ல வேண்டாம், திரும்பி விடுவோம் என தென்னன் கூறியுள்ளார். அப்போது பாதி வந்து விட்டோம். திரும்பி செல்வதை விட மறுகரைக்கு சென்று அடையலாம் என தன்னம்பிக்கையுடன் நீச்சல் அடித்து தனியே எதிர்கரைக்கு சென்று அடைந்தவர் கருணாநிதி. சிறுவயதிலேயே தன்னம்பிக்கையும், சோதனையையும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது திருவாரூர்.

    பெரியார் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்து தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அண்ணா தொடங்கிய தி.மு.க.வில் இணைந்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கி சிகரத்தை தொட்டவர்.

    தாய் மீது அதிக பாசம் கொண்டவர். தாய் அஞ்சுகத்தம்மாளுக்கு திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் நினைவிடத்தை அமைத்தார். எந்த முக்கிய நிகழ்ச்சியானாலும், தேர்தலின்போதும், தனது தாயார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு தாயின் ஆசி பெற்றுத்தான் எந்த பணியையும் தொடங்குவார். திருவாரூர் கடைவீதி வீ.ஆர்.எம். ரோட்டில் உள்ள கருணாநிதி அச்சகத்தில் தான் முதன் முதலில் கையேடாக முரசொலி பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. karunanidhideath #dmk

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததையொட்டி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப் புரம்-புதுவை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை, திருநாவலூர், மரக்காணம் உள்பட பல இடங்களிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மற்றும் பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    புதுவையில் இருந்து இன்று காலை சென்னைக்கு சென்ற ரெயில் விழுப்புரத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் சென்னைக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.

    பஸ்கள் ஓடாததால் பல ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

    இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கடலூர் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை உள்பட பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின.

    பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு கூடிய பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆட்டோக்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல ஊர்களின் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

    பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள ஐஎன்எஸ் அடையாளர் கடற்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் வந்தடைந்த அவர், கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #ModiTributesKarunanidhi

    மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பைக் கேட்டதும் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனிருந்த நிர்வாகிகள் கண்ணீர்விட்டு அழுதனர். #RIPKarunanidhi #Marina4Karunanidhi #StalinCried
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார். 

    தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

    இந்த தீர்ப்பு குறித்த தகவல் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். அவரைப் பார்த்த மற்றவர்களும் அழுது, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர்.பின்னர் அனைவரும் கண்ணீர் மல்க, தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினர்.

    உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரத்தை துரைமுருகன் மைக் மூலம் தொண்டர்களுக்கு அறிவித்தார். அதன்பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். உயிருடன் இருந்தபோதும் தொடர் வெற்றிகளைக் குவித்த கருணாநிதி, மறைந்தபிறகும் வெற்றி பெற்றிருப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.  #RIPKarunanidhi #Marina4Karunanidhi #StalinCried
    புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புதுச்சேரியிலும் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார். #RIPKarunanidhi #KarunanidhiStatue #PuducherryCM 

    ×