search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு கருணாநிதியை அடையாளம் காட்டிய திருவாரூர் பள்ளி
    X

    தமிழகத்துக்கு கருணாநிதியை அடையாளம் காட்டிய திருவாரூர் பள்ளி

    தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த சாதனை தலைவராக திகழ்ந்த கருணாநிதியை அடையாளம் காட்டிய திருவாரூர் பள்ளி. #karunanidhideath #dmk

    திருவாரூர்:

    தமிழக அரசியலில் சரித்திரம் படைத்த சாதனை தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழக அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சக்திமிக்க தலைவராக திகழ்ந்தார். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்றாலும், தன்னை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிக்கொண்ட ஊர் திருவாரூர்.

    திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அப்போது அரசு பள்ளியாக இருந்தபோது தனது பள்ளி படிப்பை கருணாநிதி அங்குதான் தொடங்கினார். பள்ளியில் தன்னை சேர்க்க மறுத்தபோது கமலாலய குளத்தில் குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தேறி உள்ளது. இவருடைய நெருங்கிய நண்பராக இருந்தவர் தென்னன்.

    பரந்து விரிந்த கமலாலய குளத்தில் கருணாநிதியும், தென்னனும் நீச்சல் அடித்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல முயன்றனர். பாதி தூரத்தில் உடல் சோர்வடைந்த நிலையில் இனி செல்ல வேண்டாம், திரும்பி விடுவோம் என தென்னன் கூறியுள்ளார். அப்போது பாதி வந்து விட்டோம். திரும்பி செல்வதை விட மறுகரைக்கு சென்று அடையலாம் என தன்னம்பிக்கையுடன் நீச்சல் அடித்து தனியே எதிர்கரைக்கு சென்று அடைந்தவர் கருணாநிதி. சிறுவயதிலேயே தன்னம்பிக்கையும், சோதனையையும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது திருவாரூர்.

    பெரியார் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்து தனது பொது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அண்ணா தொடங்கிய தி.மு.க.வில் இணைந்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கி சிகரத்தை தொட்டவர்.

    தாய் மீது அதிக பாசம் கொண்டவர். தாய் அஞ்சுகத்தம்மாளுக்கு திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் நினைவிடத்தை அமைத்தார். எந்த முக்கிய நிகழ்ச்சியானாலும், தேர்தலின்போதும், தனது தாயார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு தாயின் ஆசி பெற்றுத்தான் எந்த பணியையும் தொடங்குவார். திருவாரூர் கடைவீதி வீ.ஆர்.எம். ரோட்டில் உள்ள கருணாநிதி அச்சகத்தில் தான் முதன் முதலில் கையேடாக முரசொலி பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. karunanidhideath #dmk

    Next Story
    ×