என் மலர்
நீங்கள் தேடியது "Karunkulam"
- தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது.
- ஏக்கருக்கு 6 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கருங்குளம் வட்டாரத்தில் நடப்பு பிசான மற்றும் நவரை கோடை பருவத்தில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:-
தாக்கப்பட்ட இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெள்ளை நிற காகிதம் போல் காணப்படும். இலைகளின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களை சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும். கத்தரிகோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெ ண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
தூர்களிலிருக்கும் புழுக்களை கீழே விழ செய்ய, இளம் பயிர்களின் குறுக்கே கயிறு போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலில் உள்ள நீரை வடிய செய்யலாம். பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஏக்கருக்கு பென்தோயேட் 50 சதவீதம் ஈசி 400 மிலி அல்லது கார்போபியூரான் 3 சதவீதம் சிஜி 10கிலோ தூவ வேண்டும்.
இலை சுருட்டுபுழு தாக்கப்பட்ட நெற்பயிரின் தோகைகள் மற்றும் இலைகளில் புழுக்கள் சுரண்டி திண்பதால் இலைகளில் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து அவற்றினுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி திண்ணும். மேலும் தோகைகளை பிரித்து பார்த்தால் பச்சை நிற கண்ணாடி போன்ற புழுக்களும் அவற்றின் கழிவுகளும் காணப்படும்.
பொதிப்பருவத்தில் இலைசுருட்டுபுழு தாக்குதல் ஏற்பட்டால் நெல் மகசூல் இழப்பு ஏற்படும். வயலில் வெள்ளை நிற தாய்ப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டு இருக்கும். வயல் வரப்புகளை சீராக்கி அதனை சுத்தாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா போன்றவற்றை தேவைக்கு அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.
பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுதலை தவிர்க்க கார்போபியுரான் அல்லது போரேட் குருணைகள் மற்றும் பைரித்ராய்டு வகை பூச்சிகொல்லிகளான சைபர்மெத்ரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் பயிர் நடவு செய்த 37, 44, 51-வது நாட்களில் மொத்தம் 3 முறை ஒரு எக்டருக்கு 5 சிசி (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்டவும், விளக்கு பொறிகளை வைத்து தாய்பூச்சிகளை கவர்ந்து அதனை அழிக்கலாம். மேலும் வயலில் தழை வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி உண்ணும் பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஒரு எக்டருக்கு கார்டேப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி ஒரு கிலோ அல்லது அசார்டியாக்ஷடின் 0.03 சத ஒரு லிட்டர் கைத்தெளிப்பான் காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கருங்குளம் திருத்தலத்தை ‘தென்திருப்பதி’ என்று அழைக்கிறார்கள்.
- உறங்கா புளிய மரம் உள்ளது. இந்த மரம் பூக்கும், ஆனால் காய்க்காது.
கோவில் தோற்றம்
வகுளகிரி சேத்திரம் என அழைக்கப்படும் தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் திருத்தலத்தை 'தென்திருப்பதி' என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் உருவம் இல்லாத சந்தன கட்டையில் வெங்கடாசலபதி மூலவராக உள்ளார்.

அரியும் சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வண்ணமாக உருவமற்ற நிலையில் வெங்கடாசலபதி உள்ளார். பலநூறு வருடங்களாக நெய், சந்தனம், பால் போன்ற திரவத்தினால் அபிஷேகம் செய்தும், சந்தன கட்டையில் உள்ள இந்த மூலவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவே இறைவனின் அருள் கடாட்சமாகும்.
திருபாற்கடலில் விஷ்ணுவைக் காணச் சென்றார், நாரதர். அங்கு அவர் இல்லை. நாரதர் தனது மனக்கண்ணில் விஷ்ணு இருக்கும் இடத்தைப் பார்த்தார். விஷ்ணு கருட வாகனத்தில் லட்சுமியோடு தாமிரபரணிக் கரையில் வகுளகிரியில் இருந்தார்.
ஆதிசேஷன் வகுளகிரி உருவத்தில் இருக்க பகவானை சுற்றி மலை மீது தேவர்கள் வீற்றிருந்தனர். உடனே நாரதரும் இங்கே வந்து வணங்கி நின்றார். இங்கு ஒரு உறங்கா புளியமரம் உள்ளது. இந்த மரம் பூக்கும்; ஆனால் காய்க்காது.
வடநாட்டில் சுபகண்டன் என்ற அரசன், கண்டமாலை நோயால் பாதிக்கப்பட்டான். அவனுக்கு கழுத்தில் புழு வந்து நாற்றம் எடுத்தது. நோயைத் தீர்க்க பெரிய வைத்தியர்களாலும் முடியவில்லை. திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வணங்கினான். அவன் கனவில் வெங்கடாசலபதி தோன்றினார்.

"சந்தனக் கட்டையால் ஒரு தேர் செய். அதில் இருந்து உருவம் இல்லாமல் ஒரு கட்டை மிச்சமாகும். அதை தாமிரபரணிக் கரையில் உள்ள வகுளகிரி மலையில் வைத்து வழிபடு. உன் நோய் தீரும்" என்றார். அதுபோலவே செய்து, கருங்குளம் வகுளகிரி மலையில் உருவமற்ற சந்தன கட்டையை மூலவராக பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
சிங்கநாதன் என்னும் அரசன் தனது 30-வது வயதில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டான். பல இடங்களில் வைத்தியம் பார்த் ததும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முடிவில் மன வருத்தம் அடைந்து, நாரதரை சந்தித்து தனது நிலையை கூறி அழுதான்.
அப்போது நாரதர், "அரசே நீ சென்ற பிறவியில் கார்முகன் என்னும் வேடனாகப் பிறந்தாய். ஒரு முறை காட்டில் வேட்டையாடச் சென்றபோது, மான் வடிவில் தன் துணைவியோடு விளையாடிக் கொண்டிருந்த முனிவரை அம்பு கொண்டு தாக்கினாய்.
அந்த முனிவர் இறக்கும் தருவாயில், 'இதே போல் வலியால் நீ துடித்து ரணப்படுவாய்' என்று சாபமிட்டு விட்டு சொர்க்கம் அடைந்தார். அந்த முன் ஜென்ம சாபமே தற்சமயம் உன்னை பீடிக்கிறது.
இந்த சாபம் தீர வகுளகிரி மலைமேல் உள்ள வெங்கடாசலபதியை தரிசனம் செய்" என்றார். அரசனும் அவ்வாறே செய்து தனது சாபத்தை நீக்கிக் கொண்டான்.
வேதவிற்பன்னர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளோடு கங்கை சென்றார். முன்னதாக தனது உடமைகளை அவ்வூரில் இருந்த செல்வந்தனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். திரும்பி வந்து கேட்ட போது, அந்தச் செல்வந்தன் "நீ என்னிடம் எதுவும் தரவில்லை" என கையை விரித்தான்.

அந்த வேதியர் கொடுத்த சாபத்தால் செல்வந்தனுக்கு, தீராத வயிற்று வலி உண்டானது. பாவம் செய்ததை அறிந்து அது நீங்க பகவானிடம் உருகி வேண்டி நின்றான், அந்த செல்வந்தன். பின்னர் இத்தலம் வந்து தன் நோய் நீங்கப் பெற்றான்.
திருமாலின் பக்தர்களான கோதரன்- மாலதி தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் வருத்தத்தில் வாழ்ந்தனர். ஒரு முறை வேதியர் வடிவில், திருமால் அவர்களின் இல்லம் சென்றார்.
வகுளகிரி மலை வந்து விஷ்ணுவை வணங்கி பணிவிடை செய்ய கூறினார். தம்பதியினர் அவ்வாறே வணங்கி பிள்ளை பேறு அடைந்தனர். இப்படி பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக, இந்த கருங்குளம் வெங்கடாசலபதி ஆலயம் திகழ்கிறது.
முன்காலத்தில் மலை மீது ஏறிச்செல்ல சாலை வசதி எதுவும் கிடையாது. ஒரு முறை கும்பாபிஷேகப் பணிக்காக வண்டியில் கல்லைக் கொண்டு செல்ல அதிகமான கூலி கேட்டார், வண்டிக்காரர். மலை மீது இருப்பதால் கோவில் நிர்வாகத்தினரும் 'சரி' என ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அந்த வண்டி, உறங்கா புளிய மரம் அருகே வந்தபோது அச்சு முறிந்தது. வண்டிக்காரரும், மாடும் அதிசயமாக உயிர் தப்பினர். சோதித்த போது வண்டியின் அச்சாணி மலையின் அடிவாரத்திலேயே விழுந்து கிடந்தது.

அச்சாணி இல்லாமல் மலை மீது வண்டி வந்ததை எண்ணி வண்டிக்காரர் அதிர்ந்து போய் விட்டார். பகவானின் சக்தியை எண்ணி 'எனக்கு கூலியே வேண்டாம்' என கூறிச் சென்று விட்டார்.
சைவம், வைணவம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த பெருமாள் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அடிவாரத்தில் உள்ள சிவபெருமானை வணங்கி விட்டுத்தான் மலை மீது ஏறுகிறார்கள்.
மார்த்தாண்டேஸ் வரர் என்ற அரசன், இந்த சிவன் கோவிலைக் கட்டினார். எனவே சிவனுக்கு 'மார்த்தாண்டேஸ்வரர்' என்றும், இவ்வூருக்கு 'மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம்' என்றும் பெயர் இருந்தது.
தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் தாயாரையும், சிவனையும் வணங்கி விட்டு, தம்பதி சகிதம் இருக்கும் நவக்கிரகங்களை வணங்கி விட்டு எம்பெருமான் வெங்கடா சலபதியைக் காண படியேற வேண்டும். மலையின் பின் பகுதியில் இருந்து வாகனம் ஏறிச்செல்ல தனிவழி உண்டு.
ஆனாலும் படி ஏறிச்செல்வதே உத்தமமாகும். கோவிலுக்குச் சென்று அங்கே பிரதான தெய்வமாக விளங்கும், சந்தனகட்டையில் உள்ள எம் பெருமானைத் தரிசித்து விட்டு, அவரின் வலது புறம் உள்ள உறங்கா புளியமரத்தைத் தரிசித்து விட்டு வலம் வரவேண்டும்.
அதன்பிறகு முதன்மையான கோவிலாக விளங்கும் பழைய கோவிலுக்கு வரவேண்டும். இங்கு பெருமாள் எதிரே கருடன் அமர்ந்திருக்க, கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடாசலபதி காட்சி அளிக்கிறார். அவர் முன்பே உற்சவர்கள் உள்ளார்கள்.
இங்குதான் பக்தர்களுக்கு ஜடாரியாக நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும். முன் வாகனத்தில் ஆஞ்சநேயர் உள்ளார். அவரிடம் பக்தர்கள் தங்களின் பிரச்சினையை எழுதி, அதனுடன் 'ஸ்ரீராம ஜெயம்' எழுதி மாலையாக அணிவிக்கிறார்கள்.
இந்தக் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும். மற்ற மாதங்களில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இந்த கோவில் அமைந்த கருங்குளம் பகுதி, நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விரைவு பேருந்து இங்கு நிற்காது. நெல்லை சந்திப்பில் இருந்து 15 என்ற எண் கொண்ட டவுண் பஸ்கள் கோவில் அடிவாரம் வரை செல்லும்.
விரைவு பேருந்துகளில் செய்துங்கநல்லூர் வந்து அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். கருங்குளம் மெயின்ரோட்டில் இருந்தும் ஆட்டோ வசதி உண்டு.
- தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார்.
- செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 32). இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராமு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கருங்குளம் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி இசக்கிராஜ் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிராமங்களில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சி நடந்தது.
- கள ஆய்வில் 46 மாணவ மாணவிகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலின்படியும் உதவி திட்ட அலுவலர் பெர்சியால் ஞானமணி, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோரின் ஆலோசனையின் படி கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சி நடந்தது.
இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி, வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார், மரிய ஜெயசீலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்சிநர்கள் சிவசங்கரி, பிபேகம், வெயிலுமுத்து, சிறப்பாசிரியர்கள் கிரேனா, காளியம்மாள், கலைச்செல்வி, நிஷாமேரி, ஜான்சிராணி, தலைமை ஆசிரியர்கள் பேச்சியம்மாள், பிரேமகுமாரி ஆகியோர் கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பு நடத்தி மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். இந்த கள ஆய்வில் 46 மாணவ மாணவிகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
- பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
- வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இருப்பினும் விதை பாதிப்படைவதில்லை
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பூங்கா ரக நெல் விதை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கருங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23 -ம் ஆண்டு நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் பூங்கார் ரக நெல் விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
பூங்கார் நெல் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று. இது நெல் வகைகளில் குறுகிய கால பயிராகும். பாரம்பரிய நெல் வகைகளில் மாறுபட்ட ரகமான இந்த பூங்கார் நெல் 40 நாட்களுக்கு விதை உறக்கத்திலிருந்து அதற்கு பிறகு முளைக்கக் கூடிய திறன் கொண்டதாகும். சிவந்து காணப்படும் நெல் பயிர் அரிசியும் சிவப்பாகவே இருக்கும். இதன் வயது 70 நாட்கள் என்றாலும் பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யும்போது 70 லிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது.
விதைப்பு செய்த நாற்றங்கால் வயலில் 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிப்படைவதில்லை. இதன் நெல் கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும் அது முளைக்காது.
இந்த பூங்கார் ரக நெல் விதை பெற்று இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், கணினி பட்டா மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






