search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்குளம் வட்டாரத்தில் கூண்டுப்புழு -இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் -வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
    X

    கருங்குளம் வட்டாரத்தில் கூண்டுப்புழு -இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் -வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

    • தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது.
    • ஏக்கருக்கு 6 லிட்டர் அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் வட்டாரத்தில் நடப்பு பிசான மற்றும் நவரை கோடை பருவத்தில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது நெற்பயிரில் கூண்டுப்புழு மற்றும் இலைசுருட்டு புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:-

    தாக்கப்பட்ட இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெள்ளை நிற காகிதம் போல் காணப்படும். இலைகளின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களை சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும். குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும். கத்தரிகோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெ ண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

    தூர்களிலிருக்கும் புழுக்களை கீழே விழ செய்ய, இளம் பயிர்களின் குறுக்கே கயிறு போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலில் உள்ள நீரை வடிய செய்யலாம். பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஏக்கருக்கு பென்தோயேட் 50 சதவீதம் ஈசி 400 மிலி அல்லது கார்போபியூரான் 3 சதவீதம் சிஜி 10கிலோ தூவ வேண்டும்.

    இலை சுருட்டுபுழு தாக்கப்பட்ட நெற்பயிரின் தோகைகள் மற்றும் இலைகளில் புழுக்கள் சுரண்டி திண்பதால் இலைகளில் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும். இப்புழுக்கள் இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து அவற்றினுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி திண்ணும். மேலும் தோகைகளை பிரித்து பார்த்தால் பச்சை நிற கண்ணாடி போன்ற புழுக்களும் அவற்றின் கழிவுகளும் காணப்படும்.

    பொதிப்பருவத்தில் இலைசுருட்டுபுழு தாக்குதல் ஏற்பட்டால் நெல் மகசூல் இழப்பு ஏற்படும். வயலில் வெள்ளை நிற தாய்ப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டு இருக்கும். வயல் வரப்புகளை சீராக்கி அதனை சுத்தாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா போன்றவற்றை தேவைக்கு அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.

    பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுதலை தவிர்க்க கார்போபியுரான் அல்லது போரேட் குருணைகள் மற்றும் பைரித்ராய்டு வகை பூச்சிகொல்லிகளான சைபர்மெத்ரின் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    டிரைகோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை வயலில் பயிர் நடவு செய்த 37, 44, 51-வது நாட்களில் மொத்தம் 3 முறை ஒரு எக்டருக்கு 5 சிசி (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்டவும், விளக்கு பொறிகளை வைத்து தாய்பூச்சிகளை கவர்ந்து அதனை அழிக்கலாம். மேலும் வயலில் தழை வளர்ச்சிப் பருவத்தில் பூச்சி உண்ணும் பொருளாதார சேதநிலை அளவை பொறுத்து ஒரு எக்டருக்கு கார்டேப் ஹைட்ரோகுளோரைடு 50 சத எஸ்.பி ஒரு கிலோ அல்லது அசார்டியாக்ஷடின் 0.03 சத ஒரு லிட்டர் கைத்தெளிப்பான் காலை அல்லது மாலை நேரங்களில் தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×