search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "F1 car race"

    • பந்தய தூரம் 306.587 கிலோமீட்டர் ஆகும்.
    • 14-வது சுற்று போட்டி இத்தாலியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

    ஜான்ட்வூர்ட்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்று பந்தயமான நெதர்லாந்து கிராண்ட்பிரி அங்குள்ள ஜான்ட்வூர்ட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.587 கிலோமீட்டர் ஆகும். இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். சிறிது நேரத்தில் மழை பெய்ததால் அந்த சவாலை சமாளிக்க வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் 45 நிமிடங்கள் பந்தயம் நிறுத்தப்பட்டு பிறகு தொடர்ந்து நடந்தது.

    தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2 மணி 24 நிமிடம் 04.411 வினாடிகளில் இலக்கை கடந்து ஒரு வழியாக முதலிடம் பிடித்து உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதுவாகும்.

    இதன் மூலம் 2013-ம் ஆண்டில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலின் சாதனையை வெர்ஸ்டப்பென் சமன் செய்தார். அவரை விட 3.744 வினாடி மட்டுமே பின்தங்கிய ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சா 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பியாரே கேஸ்லி (பிரான்ஸ்) 3-வது இடத்தை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இதுவரை நடந்துள்ள 13 சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் வெர்ஸ்டப்பென் மொத்தம் 339 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அலோன்சா 168 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    14-வது சுற்று போட்டி இத்தாலியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

    ×