search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bannari amman temple"

    • சப்பரத்தில் உற்சவ அம்மன் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் வேண்டுதலுக்காக கைகளில் சூலாயுதம் ஏந்தி வந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 5-ந் தேதி திருவிளக்கு பூஜையும், அம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தன. 6-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் 7-ந் தேதி தங்க தேராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் மறுபூஜை நடைபெற்றது. நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அம்மனை தரிசனம் செய்த பின்னர் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள திருமண்ணை எடுத்து திருநீறாக பூசிக்கொண்டனர். பக்தர்கள் பலர் குழந்தை வரம் வேண்டி குண்டம் அருகே உள்ள கம்பத்தில் சிறிய மர தொட்டிலை கட்டினர்.

    மறுபூஜையையொட்டி சப்பரத்தில் உற்சவ அம்மன் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சப்பரத்தின் பின்னால் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக கைகளில் சூலாயுதம் ஏந்தி வந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் கடையிலேயே சூலாயுதம் விற்கப்பட்டன. மறுபூஜையுடன் இந்த ஆண்டுக்கான பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா நிறைவு பெற்றது.

    • இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.
    • பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 20-ந் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று 28-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் நேற்று காலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.

    மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம் பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

    பின்பு சரியாக 3.45 மணிமுதல் 4 மணிக்குள் கோவில் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறங்கிய பின் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், ஆண், பெண் போலீசார், அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமிகள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.

    அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.

    குண்டத்தை சுற்றி தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 6-ந்தேதி மஞ்சள் நீராடுதலும், 7-ந்தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறு கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • தீ மிதிக்க வரிசையில் இடம் பிடித்து பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த குண்டம் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மேலும் அம்மனை வழிபட்டு, குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. இந்த சப்பரம் மீண்டும் 28-ந் தேதி கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்று இரவு கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இவ்வாறு தீ மிதிக்க வருபவர்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க கோவில் வளாகத்தில் பரந்த அளவில் ஏற்கனவே தகரத்திலான பந்தல் போடப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ளதால் குண்டம் இறங்குவதற்காக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகமானோர் வந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில் நேற்று காலை முதல் வரிசையில் உட்கார்ந்து இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உட்கார்ந்தும், படுத்து ஓய்வு எடுத்தபடியும் தீ மிதிப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

    • 4-ந்தேதி குண்டம் விழா நடக்கிறது.
    • 6-ந்தேதி தங்க ரதம் புறப்பாடு நடக்கிறது.

    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 20-ந் ேததி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மறுநாளான 21-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் வீதி உலா தொடங்கியது. அம்மனின் வீதி உலாவானது பண்ணாரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் வீதி உலா நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலை சென்றடைந்தது. சப்பரம் கோவிலை சென்றடைந்ததும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    இதையடுத்து அம்மன் கோவிலை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய கைகளில் காப்பு கட்டிக்கொண்டு வந்து அம்மனை தரிசித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் ஆளுக்கு கொஞ்சமாக தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி வலமாக வந்தனர்.

    அப்போது கோவிலின் முன்பாக குண்டத்தின் அருகே 5 அடி ஆழத்துக்கு 15 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள குழியில் தங்களுடைய கைகளில் கொண்டு வந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை போட்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகள் மீது கற்பூரம் ஏற்றி நெருப்பு பற்றவைக்கப்பட்டது. இதனால் குழிக்குள் போடப்பட்ட மரக்குச்சிகள் தீப்பற்றி ஆள் உயரத்திற்கு ஜூவாலையுடன் எரிந்தது. இதைக் கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள், 'அம்மா தாயே, பண்ணாரி தாயே, சக்தி தாயே, பண்ணாரி சக்தியே,' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அங்கிருந்த மலைவாழ் மக்கள் பீனாச்சி வாத்தியம் இசைத்தனர்.

    அந்த இசைக்கு ஏற்ப பக்தர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் நடனமாடி குழி கம்பத்தை சுற்றி வந்தனர். குழி கம்பத்தை சுற்றிலும் வருகிற 3-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண், பெண் பக்தர்கள் நடனமாடும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவர். இதைத்தொடர்ந்து 5-ந் தேதி காலையில் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி மாலை 6 மணிக்கு தங்க ரதம் புறப்பாடும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி மறுபூஜையும் நடைபெறுகிறது.

    • பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது.
    • சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில்.

    சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். குண்டம் விழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன்கள் கிராமங்கள் தோறும் வீதி உலா தொடங்கியது. தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியத்துடன் சிக்கரசம்பாளையத்துக்கு சப்பரத்தை கொண்டு் சென்று அங்குள்ள அம்மன் கோவிலில் தங்கினார்கள்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வழியாக வெள்ளியம்பாளையம் புதூருக்கு அம்மன் சப்பரம் சென்றது. அங்கு நேற்று முன்தினம் இரவு சப்பரத்துடன் தங்கினார்கள்.

    நேற்று 4-வது நாளாக பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடந்தது. சப்பரத்தை இக்கரை தத்தப்பள்ளியில் இருந்து அக்கரை தத்தப்பள்ளி கொண்டு செல்ல பவானி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்காக தயாரான நிலையில் அலங்கரிக்கப்பட்ட பரிசல் ஒன்றில் அம்மனின் சப்பரம் வைக்கப்பட்டது.

    சப்பரம் ஆற்றை கடந்து அக்கரை தத்தப்பள்ளி சென்றதும் அங்கு கரையில் நின்றிருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பண்ணாரி மாரியம்மனை வரவேற்றார்கள்.

    அதைத்தொடர்ந்து சப்பரம் அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் இரவு தங்க வைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் குண்டம் மிதிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புகளையும், அம்மனை வணங்க பக்தர்கள் செல்லும் வழிகளையும், தற்காலிக பஸ் நிலையம், கடைகள் அமைக்கப்பட உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை வழங்கினார். அப்போது சத்தியமங்கலம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் மற்றும் போலீசார் சென்றனர்.

    • பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
    • தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.

    நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.

    • 4-ந்தேதி குண்டம் விழா நடக்கிறது.
    • இந்த விழா ஏப்ரல் 4-ந் தேதி நடக்கிறது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்துகொள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக நேற்று அதிகாைல அம்மனிடம் பூ உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக்காண நேற்று முன்தினம் இரவே சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், காளி திம்பம் ஆகிய 5 ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தனித்தனியாக தாரை தப்பட்டை முழங்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இதையடுத்து கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தை தலையில் வைத்தபடி பண்ணாரியை சுற்றியுள்ள சிவன், மாரியம்மன், சருகு மாரியம்மன், ராகு, கேது, முனியப்பன் சாமி, வண்டி முனியப்பன் சாமி கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

    பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பண்ணாரி அம்மன் சிலை மீது வெள்ளை அரளி மற்றும் சிகப்பு அரளி பூ வைத்து குண்டம் விழாவுக்கு உத்தரவு கேட்கப்பட்டது. அப்போது வெள்ளை பூ விழுந்ததால் அம்மன் குண்டம் விழாவுக்கு உத்தரவு கொடுத்துவிட்டதாக கோவிலில் இருந்த பக்தர்கள் 'அம்மா பண்ணாரி தாயே' என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து காலை 5 மணி அளவில் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு பண்ணாரி உற்சவ அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சப்பரத்தில் 100 கிராமங்களுக்கு திருவீதி உலா புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் சிலைகள் சிக்கரசம்பாளையம் சென்று அங்குள்ள அம்மன் கோவிலில் தங்கவைக்கப்பட்டது. இதற்கிடையே பண்ணாரி கோவில் வளாகத்தில் பக்தர்கள் காத்திருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து வருகிற 28-ந் தேதி கம்பம் சாட்டப்படுகிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது.

    5-ந் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • 28-ந்தேதி கம்பம் சாட்டுவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில வருகை தருவார்கள். அதோடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய நாட்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்பதால் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை வணங்கி செல்வார்கள்.பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பண்ணாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோ விலை சுற்றிஉள்ள இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு பக்தர்கள் வசதிக்காக மிகப்பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த வாரம் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் சாட்டுவிழா நடக்கிறது. பின்னர் அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குண்டம் திருவிழா நடக்கிறது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள். இதற்காக 2 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் இடம் பிடித்து வரிசையில் காத்திருப்பார்கள். குண்டம் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். இதே போல் வனப்பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    • 28-ந்தேதி கம்பம் சாட்டப்படுகிறது.
    • ஏப்ரல் 4-ந்தேதி குண்டம் விழா நடக்கிறது.

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நாளை (தி்ங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கம்பம் சாட்டப்படுகிறது. அன்று முதல் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் ஊர்வலமாக சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும்..

    அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது. 5-ந் தேதி கோவிலில் திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந்தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. குண்டம் விழா அன்று கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் வருவதற்காக இப்போதே தடுப்பு கட்டைகளை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

    • ஏப்ரல் 4-ந்தேதி பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
    • ஏப்ரல் 7-ந்தேதி தங்க தேர் புறப்பாடு நடக்கிறது.

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. பின்னர் 28-ந் தேதி இரவு கம்பம் சாட்டும் விழா நடக்கிறது.

    முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 3-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் 4-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 5-ந் தேதி மாலை பவுர்ணமி திருவிளக்கு பூஜையும், புஷ்பரதமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்க தேர் புறப்பாடும் நடக்கிறது. 10-ந் தேதி நடக்கும் மறு பூஜை விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

    கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

    கோவை கணபதிமாநகர் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
    கோவை கணபதிமாநகர் பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் 18-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வேல்கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருச்சாட்டு விழா நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சக்திகரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர். 9.30 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் குண்டம் அக்னி வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை விநாயகர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்து அக்னி சட்டி, தீர்த்தக்குடம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். சிலர் கைகளில் குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டம் இறங்கினர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முன்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, சிங்காரிமேள கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். மேலும் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானமும், அதைதொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 12-ந் தேதி இரவு குழிக்கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 19-ந் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நேற்று முன்தினம் காலை பண்ணாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மனை மலர் பல்லக்கில் வைத்து மாட்டு வண்டி மூலம் கோவிலை சுற்றி வீதி உலாவாக கொண்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் குழிக்கம்பத்தில் எரியும் நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழியில் வாழை மரம் நடப்பட்டது. பின்னர் கோவில் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்த்து அந்த வாழை மரத்தில் கட்டினார்கள். இதையடுத்து வாழை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு அந்த வாழை மரத்தை பிடுங்கி மேள, தாளம் முழங்க பக்தர்கள் தோளில் சுமந்தபடி அங்குள்ள தெப்பக்குளத்தில் கொண்டு சென்று போட்டார்கள். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது.
    ×