என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும்.
    • நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே கூத்தன் (நடராஜர்) திருக்கோலமாகும்.

    நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும். அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திரமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர்.

    ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந் தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம்.

    சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்று பாடுகின்றன திருமுறைகள்.

    இந்த நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி உத்திரத்தில் ஆனந்தம் தரும் நடராஜரை தரிசித்து, வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைய ஆனந்த கூத்தனை வழிபடுவது நல்லது.

    • வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள்.
    • ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும்.

    கோவில் தோற்றம்

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு எமதர்ம ராஜா ஆலயம் உள்ளது. ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம். சாதாரண மண் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது பலதரப்பட்ட மக்களின் உதவியோடு, மிகச் சிறப்பான முறையில் கல் கட்டிடமாக எடுத்துக் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    அன்னை பார்வதி தேவி ஒரு முறை செய்த தவறுக்கு பரிகாரமாக பூலோகம் செல்ல வேண்டிய நிலை வந்தது. பிரகதாம்பாள் என்ற பெயர் பெற்ற சிறு குழந்தையாக பூலோகம் வந்த அன்னையை வளர்க்கும்படி எமதர்ம ராஜாவுக்கு கட்டளையிட்டார், சிவபெருமான்.

    பிரகதாம்பாள் வளர்ந்து பெரியவள் ஆனதும், தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனை எமதர்மனுக்கு ஈசனால் விதிக்கப்பட்டது. அதன்படியே அன்னையை வளர்த்து வந்தார், எமதர்மராஜா.

    இந்த நிலையில் பருவ வயதை எட்டிய பிரகதாம்பாளை, சிவபெருமானுக்கு மணம் முடித்து வைக்க தேவர்களும், முனிவர்களும் முடிவு செய்தனர். ஆனால் சிவபெருமானோ நீண்ட தியானத்தில் இருந்தார். அவரை எப்படி தியானத்தில் இருந்து மீளச் செய்வது என்று அனைவரும் ஆலோசித்தனர்.

    சாதாரணமாக போய் அவரது தியானத்தை கலைத்தால், அதற்கான தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தேவர்களுக்குத் தெரியும். எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமானின் மீது மலர் கணையை தொடுக்கும்படி தேவர்கள் வற்புறுத்தினர்.

    அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்ட மன்மதனும், திருச்சிற்றம்பலத்திற்கு மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரில் இருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார். தியானம் கலைந்ததால் கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார்.

    இதனால் பதறிப்போன ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். ஆனால், "மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. வேண்டுமானால் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது, ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்" என்று கூறி அருளினார் சிவபெருமான்.

    மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்தில் இருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே எமதர்மனுக்கு கோவில் அமைத்து வழிபடும் முறை வழக்கத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.

    வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே எம தீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துகொண்ட ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.

    கோவிலின் சிறப்புகள்

    ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில், இத்தல எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை, எமதர்மனின் காலடியில் வைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.

    பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றி இருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் 'படி கட்டுதல்' என்று பெயர். படி கட்டிய சில நாட்களிலேயே பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளதாம்.

    எமபயத்தை போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி, நவக்கிரக தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் போன்றவற்றிற்கும் பரிகார தெய்வமாக இவ்வாலயத்தில் அருளும் எமதர்மராஜா விளங்குகிறார்.

    நாளுக்கு நாள் இந்தக் கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதன் திருவிழாவும் நடக்கும்.

    எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது, திருச்சிற்றம்பலம்.

    • 12-ந்தேதி ஆனி திருமஞ்சனம்.
    • 15-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    9-ந்தேதி (செவ்வாய்)

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி கருட வாகனத்தில் உலா.

    * குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

    * ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்தில் பவனி,

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

    * திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

    11-ந்தேதி (வியாழன்)

    * சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * ராமநாதபுரம் கோதண்ட ராமர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் உலா.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந்தேதி (வெள்ளி)

    * ஆனி திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (சனி)

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் 15 பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (சனி)

    * மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி குதிரை வாகனத்தில் உலா,

    * சமநோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு)

    * வடமதுரை சவுந்திர ராஜர் அன்ன வாகனத் தில் பவனி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (திங்கள்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதாரம், அனுமன் வாகனத்தில் உலா.

    * வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்பம்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தா வர்ணம்.

    * சமநோக்கு நாள்.

    • இன்று சதுர்த்தி விரதம்.
    • மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 6.59 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 9.09 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி. மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-நலம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- சிறப்பு

    மகரம்-தெளிவு

    கும்பம்-விவேகம்

    மீனம்-பண்பு

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ கோதண்டராம சுவாமி அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-24 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை (முழுவதும்)

    நட்சத்திரம்: பூசம் காலை 7.22 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி அனுமார் வாகனத்தில் திருவீதி உலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-ஈகை

    சிம்மம்-உதவி

    கன்னி-ஊக்கம்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- பாராட்டு

    மகரம்-கவனம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-நிம்மதி

    • உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி மாடவீதி உலா நடைபெறும். 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • அமிர்தத்தோடு வந்ததால் அமிர்த லட்சுமி.
    • அமிர்த லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம்.

    மகாலட்சுமிக்குரிய விரத நாள்களில் ஒன்று அமிர்த லட்சுமி விரதம். திருப்பாற்கடலை கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதிலட்சுமி என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டுள்ளது.

     அமிர்தத்தோடு வந்ததால் அமிர்த லட்சுமி. இந்த அமிர்த லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம். அழகிய, தூய்மையான தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.

    இக்கலசத்தினுள் சுத்தம்மன் தீர்த்தம் மற்றும் வாசனை பொருட்கள் (பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி), ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

    முன்பகுதி திருமுகத்துக்குப் பொட்டிட்டு, பூக்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாயாருக்குப் பருப்பு பாயசம், தேங்காய் மற்றும் உளுந்து கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலை பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்து தூப தீபம் காட்டி நிறைவு செய்ய வேண்டும்.

    • இன்று சந்திர தரிசனம். சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-23 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: பூசம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு. ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-முயற்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-கவனம்

    கன்னி-சுபம்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- பெருமை

    மகரம்-உயர்வு

    கும்பம்-புகழ்

    மீனம்-கவுரவம்

    • அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது.
    • அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

    மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது. ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களையும், அதன் கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    அஸ்வினி : இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

    பரணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    கார்த்திகை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    ரோகிணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

    மிருகஷீரிஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

    திருவாதிரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.

    புனர்பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.

    பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

    ஆயில்யம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

    மகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பூரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.

    உத்தரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    அஸ்தம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    சித்திரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.

    சுவாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.

    விசாகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

    அனுஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    கேட்டை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

    மூலம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.

    பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.

    உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

    திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.

    அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.

    சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

    பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.

    உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.

    ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோ மீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-22 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 5.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: பூனர்பூசம் மறுநாள் விடியற்காலை 5.52 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜெகநாதப் பெருமாள் காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தெளிவு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உவகை

    மகரம்-பணிவு

    கும்பம்-நிம்மதி

    மீனம்-போட்டி

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
    • திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.

    இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.

    அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.

    பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது. 

    ×