என் மலர்tooltip icon

    கோவில்கள்

    பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார் ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

    சிவபெருமான் கைலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகச் செவிவழிச் செய்திகள் உள்ளன.

    மலை அடிவாரத்தில் மிகவும் பழமையான பச்சையம்மன் கோவில்... இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார்கள். இத்திருக்கோவிலில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி பக்தர்களுக்கு அருளாசி வழங்கு கிறாள். இவளை வணங்கி மலையேறினால் வீரபத்திரர், துர்க்கையம்மன், ரேணுகாதேவி, சப்தகன்னியர் போன்றோரை தரிசிக்கலாம்.

    விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால், மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர்வீழ்ச்சியின் அழகையும் காணலாம். இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலைமேல் கோவில் கொண்டுள்ள இறைவனும் இறைவியும் அருள்புரிகிறார்கள்.

    மலைமேல் உள்ள கோவிலில் தனிச் சந்நிதியில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை காரியாண்டிக் கடவுள் என்றும் அழைப்பர். இவரை பக்தர்களே அபிஷேகித்து, மலர்கள் சூட்டிப் பூஜை செய்யலாம். பக்தர்களுக்கு இடையில் எந்தப் பூசகர்களும் இல்லை. பூக்களைச் சூட்டி மகிழும் பக்தர்கள், சிவலிங் கத்தைத் தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்குப் பூக்குவியலுக்குள் இறைவன் உறைந்துள்ளார். கருவறை மிகவும் சிறியதாக இருப்பதால் பக்தர்கள் நெருக்கியடித்துக் கொண்டு தரிசிக்கிறார்கள்.

    மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகா தனிச் சந்நிதியில் எழுந் தருளியுள்ளாள். சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சிறிய சந்நிதியில் விநாயகப் பெருமா னும் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய ரும் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். "திரிசூலகிரி', "நவிரமலை', "பர்வதமலை' என்று சொல்லப்படும் இந்த மலை, ஏழை களின் கைலாயம் என்று பெயர் பெற்றதற்கு ஏற்ப, மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோவிலின்மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். "மேலும் இந்த பர்வதமலைக்கு சஞ்சீவிகிரி, மல்லிகார்ஜுன மலை, கந்தமலை, தென் கயிலாயம் என்றும் பல பெயர்கள் உண்டு.

    இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகை களில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் கிடையாது. ஆனால் அம்பாள் சந்நிதியில் சாது ஒருவர் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் தருகிறார். கதவுகள் இல்லாத கோவில் இது.

    பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.

    திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம்.

    இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்புப் பூஜை நடைபெறும் இந்தக் கோவிலில் யாகங்களும் விடிய விடிய நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும். சித்ரா பௌர்ணமி, ஆடிப் பதினெட்டு, ஆடிப் பூரம், புரட்டாசி மாதப் பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி மாதப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷ நாட்கள், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் இக்கோவில் விழாக்கோலம் காணும்.

    பாவங்கள் போக்கும் பர்வதமலை ஈசன் நினைத்ததை நிறைவேற்றித் தருவான் என்பது நம்பிக்கை.  இம்மலைக்கு வருபவர்கள் மிகவும் பக்தியுடன் விரதம் கடைப்பிடித்து வருவது நல்லது. பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம், ஆராதனை செய்தால், கீழே தரைமட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும்.

    "அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை' என்று சொல்வதுபோல், "பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை' என்பர். இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம், ஞானம் கைகூடும்; திரிகால ஞானயோகம் கிட்டும் வாய்ப்பு உண்டு என்பது நம்பிக்கை. வெயிலின் கடுமை குறை யட்டும் என்று காத்திருந்து, மாலை வேளையில் மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டும் அதிசயத்தை இங்கு காணலாம் என்கிறார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பர்வத மலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வலம்வர சுமார் ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகலாம். மலைக்கு வரும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு இப்போது வசதி உள்ளதால், பௌர்ணமி இரவில் இம்மலை விழாக் கோலம் காணும்.

    இம்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது தனிச் சிறப்பினைப் பெறுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய், நல்லெண் ணெயை பெரிய கொப்பறையில் இட்டு காடா துணியில் பெரிய திரி தயார் செய்து பக்தர் களே சூடம் ஏற்றி, தீபம் ஏற்றுகிறார்கள். மேலும் கோவிலைச் சுற்றி பெரிய அகல் விளக்குகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதால் தீப ஒளியில் சுவர்க்க லோகம்போல் காட்சி தரும்.

    மலையடிவாரத்தில் மௌனகுரு ஆசிரமம் உள்ளது. இங்கு மலையேறும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். இரவில் இங்கு தங்கிச் செல்லவும் வசதி உண்டு. அன்னதானமும் செய்யப்படுகிறது. ஒருமுறை மலை ஏறி இறைவனையும் அம்பாளையும் தரிசித்து வந்தால், மறுபடியும் பக்தர்கள் மனம் இறைவனை நாடிச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.
    நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு.
    ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி  இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும்போது நவக்கிரக ஹோமம், சனிபகவானுக்கு சாந்தியும் செய்வது அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும்போது சிவபெருமானே பிச்சை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்தபோதுதான் ராவணன் இலங்கைக்கு அவரைக் கவர்ந்துகொண்டு போனான். அரிச்சந்திரனும், நளனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப் படைத்தபோதுதான் நாடு, மனைவி, மக்கள் என சகலத்தையும் இழந்து நிர்க்கதியாக நின்றார்கள் என்றெல்லாம் வரலாறுகள் கூறுகின்றன.
     
    ஆனாலும் இவ்வளவு துன்பங்களைத் தருபவராக இருந்தாலும், சனிபகவான் இளகிய மனம் படைத்தவர். சனி பகவான் ஒவ்வொரு ராசியும் உயிர்வாழ்வதற்குக் காரணமான ஜீவ நாடியாகும். எனவே சனிபகவானே ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோயிலில் யந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அவருடன், அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் அருள்பாலிக்கிறார்.

    சனீஸ்வர பகவானின் பார்வை, அவருடைய மனைவியின் சாபத்தினால் வக்கிரமாக அமைந்தது. இதனால் சனீஸ்வரரின் தாய் சாயாதேவி சனீஸ்வரரைத் தன் அருகிலேயே வைத்திருக்கிறார். தாய் அருகிலேயே இருப்பதால் சனீஸ்வரர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார்.

    யந்திர அமைப்பு:

    இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில்  அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும், அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. யந்திர சிலையின் மேல்பக்கம் தென்புறமாக சூரியனும், நடுவில் ஸ்ரீசனீஸ்வரபகவானின் வாகனமான காகத்தின் உருவமும், வலப்புறமாக சந்திரனும் உள்ளனர். அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும் நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரன் ஆகியோருக்கான பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த யந்திரத்தின் முன் வைத்து பார்த்தால், எழுத்துக்கள் நேராகத் தெரியும்படி அமைந்துள்ளது. இதுபோன்றதொரு அமைப்புடைய சிலை வடிவத்தை, அதிலும் சனீஸ்வர அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர வேறு எங்கும் காண்பதரிது.

    வரலாறு:

    1535ம் ஆண்டு ஏரிக்குப்பம் பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கியவர் வையாபுரி. இவர் இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். காரணம் ஏதுமின்றி, திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலைதடுமாறி விழுந்ததால், அதற்கும் பலத்த அடி.

    அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்புமாறும், சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி, மேலும் அதனால், வையாபுரியின் உடல்நலம் தேறும் என்றது. அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி யந்திர வடிவிலான சனீஸ்வரன் சிலையை அமைத்து 4கால பூஜைகளை செய்து வந்தார். கால வெள்ளத்தில் கோயில் சிதைவுற்றது. யந்திர சிலை முட்புதர்களால் மூடப்பட்டது. சமீபத்தில் தொல்பொருள் துறையினரால் அகழ்வாராய்ச்சி செய்யும் போது மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பரிகாரம்:

    கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘பாஸ்கர தீர்த்தம்‘ என்ற குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டால் திருமண வரம், குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லட்சுமி கடாட்சம், சனீஸ்வர தோஷம் மற்றும் சகல தோஷம் போன்றவை நிறைவேறுவதாகவும், எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினால் வேண்டும் வரம் கிடைப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.

    சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை, ஒவ்வொரு வருடம் காணும் பொங்கல் அன்று பால்குட அபிஷேகம் சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.

    வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசலில் இறங்கி அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆரணி, போளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.
    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும்.
    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.

    இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.

    அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.

    ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.

    அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.
    திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பின்னர் ஊரடங்கு தளர்வில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தனர். எனினும் கோவில் கடற்கரைக்கு செல்லவும், கடலில் புனித நீராடவும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. அங்கு இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

    இந்த நிலையில் சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்கவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து திருச்செந்தூர் கோவில் கடலில் நேற்று பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். எனினும் கோவில் நாழிக்கிணற்றில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை.
    கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில்.
    கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இக்கோவிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி புதுப்பொலிவடையச் செய்திருக்கிறார்கள். ஈஸ்வரன் -சுயம்புவகை -அம்மை-அப்பனாக -நடராஜராக நவகிரகங்களை தன்னுள் அடக்கி முப்பரிமாணமாக காட்சி தரும் பரிகார ஸ்தலம் திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகா தேவர் திருக்கோவில்.

    தலபுராணம்:

    கரைகண்டேஸ்வரர் அல்லது கறைகண்டேஸ்வரர் என்பது மூலவரின் பெயர். இக்கோவில் குறித்த கதை பாற்கடல் கடைந்த கதையோடு தொடர்புடையது.பாற்கடல் கடைந்தபோது வந்த விஷத்தை சிவன் அருந்தினார். பார்வதி சிவனின் கழுத்தில் கை வைத்து பிடித்தாள்.அதனால் விஷம்(கறை) கழுத்தில்(கண்டம்) நின்றது. சிவன் கறைகண்ட ஈஸ்வரன் எனப்பட்டான். அந்த ஈஸ்வரன் குடிகொண்ட இடம் இது.

    கோவிலின் அமைப்பு:


    இக்கோவில் கட்டுமானம் பழைய அமைப்புடையது. கோவில் வளாகத்தினுள் ஆங்காங்கே மரங்களும், செடிகளும் நிற்கின்றன. கோவிலின் முகப்பு மண்டபத்தில் குழல் ஊதும் கண்ணன், அர்ச்சுனன், தபசு என சில சிற்பங்கள் உள்ளன.முகப்பு மண்டபத்தை அடுத்து திறந்த வெளி கிழக்கு பிரகாரம் பிற மூன்று பிரகாரங்களும் வெட்ட வெளிப்பகுதி.

    கோவிலின் ஷோபனப்படி வழி ஏறி சிறிய முன்மண்டபத்தைக் கடந்தால் காண்பது முகப்பு மண்டபம். இது சோழர் பாணியில் அமைந்த பழைய கட்டுமானம். இதை கடந்து சென்றால் சிறிய அர்த்தமண்டபம் உட்பிரகாரம்.வலப்புறம் வலம்புரி விநாயகர், நடுவே நந்தீஸ்வரர். கருவறையை சுற்றிய அதிர்ஷ்டான அமைப்பு இக்கோவிலின் பழைமையைக் காட்டுகிறது. கருவறை, அந்தராளம் என இரு அறைகளைக் கொண்டது. விமானம் 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏகதள விமானம். சுதையால் ஆனது.தற்போது பழைய கட்டுமானப் பணிகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

    கருவறை:

    கருவறை கட்டுமானம் மிக பழையது. 12-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.இதற்கு கல்வெட்டு சான்றும் உண்டு. மூலவர் லிங்க வடிவானவர். லிங்கத்தின் தட்டையான அமைப்பும் ஆவுடையும் நீர்விழும் தூம்பும் பழைமையைக் காட்டுகிறது.

    மூலவர் மகாதேவர் நவகிரகங்களை தன்னுள் அடக்கி லிங்கோற்பவராக - அம்பாள் அருகில் - வலப்புறம் வல்புரி விநாயகர் தனி சன்னதி- பெரிய நந்தீஸ்வரர்-ஆல் அரசு வேம்பு மும்மரங்கள் சூழ்ந்த இடம் ஆதிசேஷன், வனதர்ம சாஸ்தா-நாகராஜர் சன்னதி -கரமகரிஷி சன்னதி- மகா காலபைரவர் சன்னதி ஆகியவைகள் இருக்கின்றன.

    கோவிலில் மார்கழிமாதம் மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது .இதில் பால்குடம்,சந்தனக்குடம் எடுத்தல் ,யானை பவனி வருதல் ஆகியன உண்டு.சித்திரை விசு,திருகார்த்திகை விழா, சிவராத்திரி போன்ற விழாக்கள் விமர்சையாக நடக்கின்றன.

    குழந்தை வரம் கொடுக்கும் மகாதேவர்:

    இக்கோவில் குழந்தை இல்லாதவர்கள் மனமுருகி வேண்டினால் இறைவன் உடனே குழந்தை வரத்தை கொடுத்து குடும்பத்தை தழைக்க வைக்கிறார். வெளியூர் வெளி மாநிலங்களிலும் இருந்து குழந்தை வரம் வேண்டி கணிசமான பக்தர்கள் வருகிறார்கள். வேண்டும் காரியங்கள் உடனே நிறை வேறுகின்றன.
    கோவிலுக்கு செல்லும் வழி:

    கேரளா மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் குளச்சல் ,மண்டைகாடு, அம்மாண்டிவிளை வழியாக திருநயினார் குறிச்சிக்கு வரலாம்.அல்லது திங்கள்சந்தை வழியாக வரலாம். தமிழகம் மற்றும் குமரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் திங்கள் சந்தை வழியாகவும், ஆசாரிபள்ளம், வெள்ளி சந்தை வழியாக திருநயினார் குறிச்சிக்கு வந்து மகாதேவரை தரிசிக்கலாம்.

    கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு அபிஷேகம், 6-மணிக்கு நிர்மால்ய பூஜை, 7-மணிக்கு உஷபூஜை, 9-மணிக்கு உச்ச பூஜை, 9.30-க்கு பலிபூஜை நடைபெறுகிறது.

    மாலையில் 4.45 -க்கு நடை திறக்கப்பட்டு ,6.30-மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,7.30- மணிக்கு அத்தாழ பூஜை, பலிபூஜை, 8 மணிக்கு திருநடை சார்த்தப்படுகிறது.
    திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மாசிலாமணி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான், ஒருமுறை திக்விஜயம் மேற்கொண்டபோது, எருக்கம் தூண்களும், வெண்கலக் கதவும், பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்துவந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான்.

    போரில் தோல்வியுற்ற தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன.

    யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால், தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் வருவதைக் கண்டான். யானையில் இருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக்கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.

    இறைவன் அவன்முன் தோன்றி, அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன், அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றிகொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி, சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைத் தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான்.

    அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் காணலாம். தெற்கில் உள்ள ராஜகோபுரம், இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்துக்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன், பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார்.

    அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றுச் சிற்பம், யானை மீதிருந்து தொண்டைமான் மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது போன்றவை சுதை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தெற்கு வெளிப்பிராகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால், முதலில் இறைவி கொடியிடைநாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.

    அதைக் கடந்து மேலும் சென்றால், இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. சுயம்பு லிங்கமாக தீண்டாதிருமேனியராக இறைவன் இங்கு எழுந்தருளியுள்ளார். இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடைநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. ஆலய தீர்த்தமான சுப்பிரமண்ய தீர்த்தம், கோவிலுக்கு வெளியே கிழக்கு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

    கிழக்கு நோக்கி சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான பாணம், சதுரபீட ஆவுடையார் லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால், அபிஷேகங்கள் ஆவுடையாருக்குத்தான் செய்யப்படுகின்றன. வாளால் வெட்டுப்பட்டதால், மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்துக்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

    தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி, சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி கிழக்கு பார்த்து திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும், மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாகக் காட்சி அளிக்கின்றன.

    கருவறையின் வடக்குச் சுற்றில், நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், மகாவிஷ்ணு, தேவி-பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. அருகில், பிற்காலப் பிரதிஷ்டையான ரசலிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை, பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    இத்தலத்தில், முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிராகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

    கிழக்கு வெளிப் பிராகாரத்தில், பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவைப் பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை.

    வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் காலை, நண்பகல், மாலை தரிசித்தல் சிறப்பு.சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகளும் உள்ளன.
    கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அம்மன்குடியில் அஷ்டபுஜதுர்க்கை எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறாள். அவள் அத்தலத்தில் எப்படி அமர்ந்தாள் எனும் புராணக் கதையை கொஞ்சம் காண்போம்.
    துர்க்கை எனும் மகாசக்தி பாரத தேசத்தின் சகல பிரதேசங்களிலும் மிகப் பெரும் தெய்வமாக வணங்கப்படுகின்றாள். அப்பேற்பட்ட துர்க்கை கும்பகோணத்திற்கு அருகேயுள்ள அம்மன்குடியில் அஷ்டபுஜதுர்க்கை எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறாள். அவள் அத்தலத்தில் எப்படி அமர்ந்தாள் எனும் புராணக் கதையை கொஞ்சம் காண்போம். அசுரச் சகோதரர்களான கரம்பனும், ரம்பனும் தவம் மேற்கொள்ள போன போது தேவர்கள் மிரண்டுதான் போயினர்.
     
    ரம்பன் எனும் அசுரனின் ரத்தம் கொதித்தது. சித்தம் முழுதும் தன் சந்ததியை மற்றும் சக்தியை பெருக்க வேண்டும் என்று யோசித்தது, எருதாக வடிவெடுத்தான். எதிரே வரும் பெண்ணெருமையை இணையாக்கிக் கொண்டான். குறிப்பிட்ட காலம் வரை எருது வடிவிலிருந்ததை கண்டு கொண்ட இன்னொரு எருது ரம்பனை கொம்பால் குத்தியது. எருது வடிவிலிருந்த ரம்பன் தன் பழைய உருவம் பெற்று ரத்த வெள்ளத்தில் சரிந்தான். ஒன்றுக்கு இரண்டாக தலைவர்களை இழந்துவிட்ட அசுர ஜனங்கள் ரம்பனை சிதையில் வைத்து தீ மூட்டியது. ரம்பனிடம் இணைந்த அந்த பெண் காட்டெருமை பதிவிரதை போன்று தீப்பாய்ந்தது. இதைப் பார்த்த அசுரர்கள் ஆச்சரியமுற்றனர். ஆனால், அதையும் தாண்டி இன்னொரு அற்புத சம்பவமும் நடந்தது. பெண்ணெருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து கருப்பாக, எருமைத் தலையோடு மானுட உடம்போடு அதீத சக்தி தளும்ப, நான்கு கால் பாய்ச்சலாக வெளிவந்து ஒருவன் வீழ்ந்தான். அக்னி நிம்மதியானார். ரம்பன் அமைதியாய் மேலுலகம் ஏவினான்.

    அசுரக் கூட்டம் புதியவனை ஆரத்தழுவிக்கொண்டது. ‘மகிஷன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தையின் விருப்பத்தை மகிஷன் நிறைவேற்றத் துடித்தான். எருமைபோல் சோம்பியிருக்காது ‘போர்... போர்’ என திரிந்தான். தேவர்களை எதிர்கொண்டான். இந்திரன் இடிந்து போனான். முறுக்கேறிய புஜங்களும், வகை வகையாக வாள் தரித்து நிற்கும் அசுரச் சேனையை பார்த்து தேவர்களில் சிலர் மயங்கியே வீழ்ந்தனர். மகிஷன் முழு வலிமையோடு இறங்க தேவப் படைகள் சிதறி ஓடியது. ஆனால், மீண்டும் வந்து போருக்கு நின்றது. இதைப் பார்த்த மகிஷனுக்கு கலக்கம் உண்டா யிற்று. மரணமென்பதே இல்லாமல் இருப்ப தால்தான் விளையாடு கிறார்கள். இவர்களை முழுமையாக ஜெயிப்பது அரிதே எனும் எண்ணம் கொண்டான்.

    தன் தந்தையின் நினைவு சட்டென்று நெஞ்சில் நிழலாட, அவரின் தபோ பலத்தாலேயே தான் உருவாகியுள்ளோம் என்று எண்ணம் உதித்தது. பிரம்மனை நோக்கி தவமிருந்தால் கேட்டதையே கொடுத்து விட வேண்டும். இது பராசக்தியின் மீறவொண்ணாத ஆணை என்று தெரிந்திருந்தான். மேரு மலைக்கு ஓடினான். தவமிருந்தான். பிரம்மனும் சட்டென்று பிரசன்னமானார். ‘தனக்கு மரணம் வராதிருக்க வேண்டும்’ என்று அவன் கேட்க, ‘‘என் சக்திக்கு மீறியதை என்னால் கொடுக்க இயலாது” என்றார் பிரம்மன்.‘‘பெண் ஒருத்தியைத் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது’’ என இறுதியாகக் கேட்டான். பிரம்மன் வரம் தந்தார். பிரம்மனின் வாக்கில் அவரறியாது பிரமாண்ட சக்தி வெளிப்போனது.

    மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது. தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது. மானிடர்களும், அந்தணர்களும் இருண்டனர். இந்திரன் பரிதாபமாக தளர்ந்துபோய் தனது குருவான வியாழ பகவான் எனும் பிரஹஸ்பதியின் பாதத்தில் சோர்வாகச் சரிந்தான்.குரு தேவர்களின் நிலையினை எண்ணி வருந்தினார். “வேறு எவருக்கும் கிடைக்காத எல்லையில்லா சுதந்திரம் அளித்திருக்கிறாள் ஆதிமாதா. அதை சுத்தமாக மறந்துவிட்டு வெற்றுச் சுகத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டீர்கள். சித்தத்தை சக்தியிடம் வைத்து நன்றி பெருக்கோடு பக்தி புரிந்திருக்க வேண்டும். இப்போதாவது அன்னையின் நினைவு வருகிறதா உனக்கு? பராசக்தியிடம் பாரம் கொடுத்துவிடு. பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு. அதற்கு முன்பு ஒருமுறை தளராது போர்க்களம் சென்று போரிட்டுப் பார்” என்று அறிவுரை கூறினார் பிரகஸ்பதி.
     
    இந்திரன் இப்போது தெய்வ நினைவோடு போரிடுவதை விட தெய்வத்தையே போருக்கழைக்கலாமே என்று ஆழமாக யோசித்தான். பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர். ஈசனும், மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். யாவினுள்ளும் நிறைந்திருக்கும் மகா சக்தியான பராசக்தியை நாடும் மாதவம் அது. தேவர்களும் அவர்களோடு இணைந்தனர். சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் பிராட்டி. பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது.

    இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் உதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தது.தங்களுக்குள்ளிருந்தே பிரமாண்டமாகப் பரந்தெழுந்த மகாசக்தியின் ஒளியையும், உருவமும் பார்த்து தேவர்கள் கண்களில் நீர் பொங்க, பாதம் பணிந்துத் துதித்தனர். ‘ஜெய்... ஜெய்...’ என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மஹாளய அமாவாசைக்கு முதல் தினம். மகாலக்ஷ்மி துர்க்கையாக எழுந்தாள்.

    சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகப் பரப்பினர். ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து ராஜன் ஹிமவான். சிம்மம் பிடரியைச் சிலிர்த்து கம்பீரமாக நடந்து தேவியின் அருகில் நின்றது. மகிஷன் எங்கோ தொலைதூரத்தில் தேவர்களின் பிளிறல் கேட்டு முகம் சிவந்தான். அவன் திரும்புவதற்குள் சிம்மத்தின் கர்ஜனை அவன் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாக கிள்ளி எறிந்தாள். அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது!

    இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள்.

    ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும். அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு. அமண்குடி என்று சமணர்கள் வாழ்ந்த இவ்வூரை இப்போது ‘அம்மன்குடி’ என்று அழைக்கின்றனர். கோயில் சிறியதுமல்லாது பெரியதுமல்லாது நடுவாந்திரமாக இருக்கும். ஆனால், கீர்த்தியிலும், புகழிலும் புராணம் சொல்வதைப் பார்த்தால் திகைப்பும், பிரமிப்பும் ஒன்றையொன்று விஞ்சும். துர்க்கைக்கு ஈசன் சந்நதிக்கும், அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும், அருள் பூக்கும் கண்களோடு அருள்பாலிக்கிறாள்.
     
    பிரம்மராயர் கங்கை வரை போர்புரிந்து அழகான விசித்திரமான கல்லாலான விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். பகல் பொழுதில் சூரிய கிரணங்கள் பட, சிலை வெண்மையாக ஒளிரும். அந்தி சாயும்போது சிலை இருளாக கறுக்கும். கை வைத்தாலே வாழைப் பழம் போன்று வழுக்கும் கல் அது. இப்போதும் புதியதாக உள்ளதைப் பார்க்க ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகிறது. கோயிலின் முகப்பு வாயிலில் உள்ள விநாயகப் பெருமானை தரிசித்து உள்ளே நகர இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி. பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும்.

    இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள் இந்த அஷ்டபுஜ துர்க்கை. வாழ்வின் வெம்மை தாங்காது பயம் என்று கைகூப்பி நின்றோருக்கு அபயமளித்து அருட் கடலில் ஆழ்த்துவாள் இந்த அம்மன்குடி நாயகி. தேவியின் சந்நதிக்கு அருகேயே பார்வதி தேவியின் சந்நதியும், கைலாச நாத ரின் மூலக் கருவறையும் உள்ளன. துர்க்காவே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் பகருகின்றன. அம்மனின் வாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லக்ஷ்மி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது. நவராத்திரியில் கடைசி வதமான சும்ப- நிசும்ப வதத்திற்கு தயாராவதுபோலகூட உணர முடிகிறது.

    அருகேயே விநாயகர் சிலை செதுக்கப்பட்ட விசித்திரமான கல்லாலான சூரியனின் அற்புதச் சிலையும் உள்ளது. நவ கிரகங்களுக்கு அதிபதியான துர்க்கை இத்தலத்தில் உறைவதால் இக்கோயிலுக்குள் நவகிரகங்கள் இல்லை. ஏராளமான சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் கோஷ்டத்து மேல் பகுதியில் ராஜராஜசோழன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது.

    இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம்-உப்பிலியப்பன் கோயில்-அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.
    இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.
    மூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர்
    தாயார் : மகாலட்சுமி
    பழமை : 500 வருடங்களுக்குள்
    ஊர் : முத்தியால்பேட்டை
    மாவட்டம் : புதுச்சேரி

    திருவிழா : ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.

    தல சிறப்பு :

    இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.

    பொது தகவல் :

    மிகவும் பிரசித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.

    பிரார்த்தனை :

    படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

    நேர்த்திக்கடன் :

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

    தலபெருமை :

    இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறுவர்.

    மாணவர்களுக்கான ஸ்லோகம்: தினமும் மாலையில் மாணவர்கள் இங்கு வந்து

    ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம் ! ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே !

    என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்கின்றனர். வீட்டிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

    தல வரலாறு :

    பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர்.

    இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

    அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை "லட்சுமி ஹயக்ரீவர்' என்றனர்.வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.
    குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும் இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.
    ‘உயர்ந்த மலை. அதிலே அடர்ந்த காடுகள். மலைப்பகுதி கண்களுக்கு இதமானது. பசுமை நிறைந்த காடும், மலையும் நம் மனதை உற்சாகப்படுத்துகின்றன. மலைவாசம் நம் மனச்சுமைகளை இறக்கி வைக்க அருமையான இடம். குளுமையான அந்த மலையிலே, அருமையான தெய்வம் அங்கே ஒரு கோயிலில்  குடிகொண்டிருந்தால், நம் ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்வதற்கு ஆனந்தமான ஒரு ஆற்றலைப் பெறுவதற்கு ஏற்றதாகவும் அந்தச் சூழல் அமைந்து விடுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான காடும், மலையும் கர்நாடக மாநிலத்தில் வந்து சேர்கின்றன. இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம்  நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

    வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன் ‘சித்தநஞ்ச தேசிகர்’ என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு ‘சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.

    அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத்  தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி  ஏற்பட்டுள்ளது.

    எனவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான்.  விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.

    பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த  மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.

    இப்படியெல்லாம் செய்து அந்த மலைவாழ் மக்களிடமும், மற்ற ஊர் மக்களிடமும் பேரும், புகழும் பெற்றான். நன்கு முதிர்ச்சியடைந்த மாதேஸ்வரனை மீண்டும் மாதேஸ்வரன் மலையில் இருந்த பழைய குருவிடமே அனுப்பி வைத்தார் ஆதிகணேச குரு. மீண்டும் மாதேஸ்வரன் மலைக்கே வந்த மாதேஸ்வரனின் பாதம் பட்டதும் அங்கே இருந்த சிறுசிறு குன்றுகளெல்லாம் சம நிலங்களாயின. காய்ந்து போயிருந்த பூச்செடிகள் எல்லாம் துளிர்விட்டன. மரங்கள் பசுமை போர்த்துக்கொண்டன. அங்கே தெய்வீக மணம் கமழ்ந்தது. குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே  உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.

    பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் இந்த மாதேஸ்வரனுடைய பக்தர்களும், பக்தர்களின் வம்சாவழியினரும் ஒன்று சேர்ந்து ஒரு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். அந்தக் கோயில் காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மூன்று அற்புத ஆலயங்களாக இன்று அமைந்துள்ளது. மூலக் கருவறைக்குள்ளே மாதேஸ்வர சிவலிங்கம் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்திருக்க தெய்வீக ஒளியுடன் மிக அற்புதமாக தங்கக்காப்புடன் பளீரென்று மின்னுகிறது. மைசூர் மன்னராக இருந்த ஸ்ரீஜெயசாம்ராஜ உடையார் பகதூர் ஸ்வாமிகள் ஸ்ரீமாதேஸ்வரன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இந்த மலையில் பக்தர்கள் வந்து தங்குவதற்கு இருப்பிட  வசதிகள் செய்து கொடுத்தார். பல ஏக்கர் புன்செய் நிலங்களையும் விலைமதிப்பில்லாத அளவுக்குத் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் நிவந்தனமாகக்  கொடுத்துள்ளார்.

    இவருக்குப் பிறகு ஜீஞ்சே கவுடா என்ற குருபர் இனத்து மலைவாழ் பக்தர் இக்கோயிலை மேலும் சீரமைத்து அற்புதமாக்கினார். அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள். குறிப்பாகத் தங்கத்தேர் ஊர்வலம் சகல நன்மையையும் அளிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்காவில் மலைமீது 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    பெங்களூரிலிருந்து 210 கி.மீ.; மைசூரிலிருந்து 140 கி.மீ.; கொள்ளேகாலிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சேலம், மேட்டூர் அணை, கொளத்தூர் வழியாக 4 மணிநேர பயணத்தூரத்தில் இந்த கோயிலை அடையலாம்.
    திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
    தலத்தின் நீர்வளமும் மலைவளமும் நிலவளமும் அது முருகனுக்கு மிக மிகப் பொருத்தமான, அவன் அழகுக்கு அழகு செய்கின்ற தலம் என்பதைப் பறைசாற்றுகின்றன. வடக்கே குருவிருக்ஷமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க, ஏறத்தாழ ஒரு பசுமைப் பள்ளத்தாக்கில் குடியேறியிருக்கிறான் முருகன்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது அனுவாவி. அனுவாவி என்றாலே, ‘சிறிய குளம்’ என்றுதான் பொருள். சிறிய ஊற்று அல்லது கிணறு என்றும்குறிப்பிடலாம்.

    கோவில் வரலாறு

    கந்தப் பெருமான் வழிபாடு ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு வால்மீகி ராமாயணம் எடுத்துக்காட்டு. இலங்கை ராஜ்ஜியத்தின் மீது ராமன் போர் தொடுத்திருக்கிறான். வானரப் படைகளுடன் லக்ஷ்மணனும்கூட ராவணனின் சேனையுடன் போரிட்டுப் பலமிழந்து மூர்ச்சையாகியிருக்கிற நேரம். சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்தால் அவர்களை மீண்டும் எழுந்து போரிடச் செய்யலாம் என்று யோசனை கூறி, ஆஞ்சநேயனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

    ‘வெட்டிக்கொண்டு வா!’ என்று சொன்னால் கட்டிக் கொண்டு வருகிற ரகமல்லவா ஆஞ்சநேயன்! மூலிகையைத் தேடிப் பறித்து நேரத்தைக் கடத்தாமல் மலையையே பெயர்த்துக் கொண்டு வருகிறான்!

    வாயுபுத்ரனான போதிலும் மலையைப் பெயர்த்துக் கொண்டு காற்றிலேறி விண்ணைச் சாடி, கடல் கடந்து பறப்பது சுலபமல்லவே! களைப்பும் தாகமும் வாட்டலாயின. தன் கை வேலால் இத்தலத்தில் ஒரு சுனையை உண்டாக்கி ஆஞ்சநேயனின் தாகம் தீர்த்தானாம் முருகன். ‘அனுமக்குமரர் தீர்த்தம்’, ‘அனுமார்வாவி’ என்று இவ்விடத்துக்குப் பெயர்கள் வழங்கலாயின. இவைதான் பின்னர் மருவி ‘அனுவாவி’ ஆகியிருக்க வேண்டும்.

    அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் "அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு. அனுவாவி பத்துப்பாட்டு என்ற நூலில் இந்த ஸ்தல வரலாறு அழகான கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

    அனுவாவி வந்துற்ற அஞ்சனாதேவி மகன்
    அனுமாரின் அருந்தாகம் தீர்க்க நீர் தந்த மலை
    கனமான மலை சுமந்த களைப்பாற்றிக் கரங்குவித்து
    குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலை.

    ராமன் விட்ட அம்புகள் கந்தனின் வேல் போல் பிரகாசித்ததாக 2 இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    அனுமனின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய முருகன், தன் வேலால் ஒரு இடத்தில் குத்த, அந்த இடத்திலிருந்து தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அனுமான் தாகம் தீர்ந்தார். இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.

    அந்தக் காலத்தில் இம்மலையடிவாரத்தில் தாமரைத் தடாகம் என்ற ஊரிலிருந்த ஜமீந்தார் ஒருவர் மலைப்பாதை அமைத்து இக்கோயிலுக்கு உத்ஸவ மூர்த்திகள் செய்து கொடுத்தார். இங்கே ‘காணாச் சுனையும், கருநொச்சி வளமும், ஐந்திதழ் வில்வமும்’ இருந்ததாகச் சொல்வார்கள்.

    சுந்தரமூர்த்தி நாயனார் இங்கே கண்ட அதிசயமொன்றைப் போற்றிப் புகழ்ந்தார் என்பார்கள்: இத்தலத்துக்குக் கிழக்கேயுள்ள வடமதுரை என்னும் ஊரின் விருத்தேஸ்வரர் குளத்தை அடுத்து ஒரு மரத்தின் வேர் இரு கிளைகளாகப் பிரிந்து காணப்பட்டதாம். ஒரு பிரிவிலிருந்து வெண்ணிறப் பாலும் மற்றதிலிருந்து சென்னிறப் பாலும் வடிவதைக் கண்டார் சுந்தரர்.

    அவ்வேர், அனுவாவியிலிருக்கும் தல விருட்சமான மாமரத்தின் மீது கொடியாகப் படர்ந்திருந்த தாவரத்தின் வேர்தான் என்று கண்டறிந்தார்! இவ்வியற்கை வினோதம் அனுவாவியின் தலச் சிறப்பால் விளைந்ததே என்று அவர் உணர்ந்து, வாழ்த்தி வழிபட்டதாகச் சொல்கின்றனர்.

    விண்ணாவரங் கொடி, விண்ணாடும் கொடி என்று பெயர்கள் பெற்ற அக்கொடி, அனுவாவி ஸ்தல விருக்ஷமான மாமரத்தில் இன்றும் படர்ந்திருப்பதைக் காணலாம். மலைச்சாரலில் சில குகைகள் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தில் முனிவர்களும் பாம்பாட்டிச் சித்தரும் தவமியற்றியிருக்கிறார்கள்.
     
    சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்த சுவாமியும், தல விருட்சமாக இருந்த 5 மாமரங்களும் கடந்த 1957ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டது. வெள்ளத்தின் உக்கிரத்தைவென்று நின்றது மாமரம் மட்டுமே!

    பின்னர் இறைவன் திருவருளால் தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின் புதிய கோயில் அமைக்கப்பட்டு 1969ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவண்ணாலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அருள் வாக்குப்படி வினாயகர், அருணாசலேசுவரர் ஆகிய இருவர் உருவங்கள் மட்டும் மாமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. மலை அடிவாரத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.

    500 படிக்கட்டுகள் ஏறினால் கோயிலை அடையலாம். மலைக்கோயிலுக்கு முன்பாக இடும்பன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    முன் மண்டபத்தில் விநாயகரும், முருகனின் படைத்தளபதி வீரபாகுவும் வீற்றிருக்கின்றனர். ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதி உள்ளது. சிவபெருமான் அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.

    பிரார்த்தனைகள்

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். இதில் சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்து சில நாட்கள் குளித்தால் மன நோய், தோல் நோய் அகலும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துகின்றனர்.

    கோயில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. மலைப்பகுதி வழியாக ஏறி இறங்கினால் மருதமலையை அடையலாம்.

    போக்குவரத்து வசதி

    கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது. இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

    மேலும் இந்த கோவில் பற்றிய தகவல் அறிய +91-94434 77295, 98432 84842, இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம்.
    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள் திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.

    தல சிறப்பு :
     
    மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.

    இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.
    இறைவி    : மரகதாம்பிகை.
    தல மரம்   : பனை மரம்
    தீர்த்தம்     : பாலாறு, சிம்மதீர்த்தம்

    இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

    பிரம்ம உபதேச தலம் :

    சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம்.

    தல பெருமைகள் :

    இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.

    இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார்.

    அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் “பார் வேட்டை” என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    அழகிய தோற்றம் :

    இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்து பைரவர்கள் பற்றி தனியே ஒரு பதிவு வெளியிடப்படும். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தல மரம் :

    இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.   

    மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.

    அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர்.

    நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம்.

    போக்குவரத்து வசதி :

    தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். 

    பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன. 
    பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில்.
    இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்…

    ​கோவிலின் வரலாறு

    இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் மரபுகளை பிரதிபலிக்கிறது.

    கர்னூல் ஸ்ரீ யங்கதி உமா மகேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு எதிரில் உள்ள இந்த நந்தி சிலையின் அளவு தினமும் அதிகரித்து வருவதால், அதை சுற்றி உள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளன. நந்தியின் வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் இன்னும் பல தூண்களை அகற்ற வேண்டி இருக்கும் எனப்படுகிறது.

    கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்கு முன் இருக்கும் பிரமாண்ட நந்தி சிலை முன்பு சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நந்தி சிலை செய்யப்பட்ட கல் விரிவடையும் தன்மை கொண்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நந்தி சிலை முன் வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகையில், முன்பெல்லாம் இந்த நந்தியை வலம் வரக்கூடிய அளவு இடம் இருந்ததாகவும், தற்போது சிலையின் அளவு பெரிதானதால் வலம் வர இடம் இல்லாமல் போய் விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கோவில் அகத்திய மாமுனியால் வெங்கடேஸ்வருக்கு கோவில் நிறுவ நினைத்தார். ஆனால் கட்டுமான நேரத்தில் பெருமாளின் சிலையின் கட்டைவிரல் உடைந்ததன் காரணமாக, கோவில் ஸ்தாபனம் நடுவிலேயே நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த அகத்திய முனிவர் சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சிவ பெருமான், இந்த இடம் கைலாயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதால், இது பெருமாளுக்குரிய கோவில் அமைக்க உகந்த இடம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து இங்கு சிவ பெருமானுக்கு அகஸ்தியர் கோவில் எழுப்பினார் என்கிறது புராணக் கதை.

    முனிவர்கள் இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் தவம் மேற்கொண்டிருந்தனர். அப்போது முனிவர் ஒருவரை காகங்கள் தொந்தரவு செய்ததால், இனி இந்த இடத்தில் காகங்கள் நுழையக் கூடாது என சபித்தார் என்ற கதை கூறப்படுகிறது. காகம் சனி பகவானின் வாகனமாகும். காகம் நுழைய முனிவர் சாபத்தால் தடை ஏற்பட்டதால், இங்கு சனி பகவானும் நுழைய மாட்டார் என்கின்றனர்.

    மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போன்று சிவ லிங்கம் இல்லாமல், சிவனும் - பார்வதியும் சேர்ந்த அர்த்தநரிஸ்வர வடிவத்தில் அமர்ந்து நிலையில் காட்சி தருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரே கல்லினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான முதல் கோவில் இதுவாக இருக்கலாம்.

    மலைகள் சூழ அழகிய இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த கோவிலில் அழகிய புஷ்கர்னி அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து தண்ணீர் பாய்வது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புஷ்கர்னியில் ஆண்டு முழுவதும் எப்போதும் தண்ணீர் வ்ந்து கொண்டிருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த புனித நீரில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பதால் அனைத்து பாவங்களையும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
    ×