என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.
    இரத்தினகிரீஸ்வரர் இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார். இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார். சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.

    இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9-ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் பெற்றாரா, அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் ஒன்பது என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தால், அதற்கான பதில் இல்லை. இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.

    தல வரலாறு

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறும் உள்ளது. அதை பற்றிக் காண்போம். ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான்.

    அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு. அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது. சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பலன்கள்

    குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

    தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    முகவரி:

    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில்,
    அய்யர்மலை,
    குளித்தலை,
    சிவாயம் அஞ்சல் 639 120,
    வைகை நல்லூர் வழி. கரூர் மாவட்டம்.
    ஸ்ரீராமருக்கு சோழ மன்னன் எழுப்பிய கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மனித குலத்திற்கு உதாரண புருஷராக திகழும் ஸ்ரீ கோதண்ட ராமர் இருக்கிறார். சோழ மன்னர்களில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய கோவில் இது. பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட தொண்டைமான் மன்னர் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள கல்வெட்டு குறிப்புக்கள் இக்கோவில்களில் இருக்கின்றன.

    முற்காலங்களில் நமது நாடு பல சிற்றரரசு தேசங்களாக பிரிந்திருந்த போது நாம கீர்த்தனை செய்யும் கலைஞர்கள் ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு சென்று நாம கீர்த்தனம் செய்வதோடு, அங்கே ஆட்சி புரியும் மன்னர்கள் பற்றியும் புகழ்ந்துரைப்பர். அப்படி ஒரு முறை தீவிர சிவ பக்தனான கண்டராதித்த சோழன் ராமாயண நாம கீர்த்தனை கேட்கும் போது அதில் வரும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா பிராட்டியார் மீது மிகுந்த பக்தி கொண்டு தனது ராஜ்ஜியத்தில் ராமருக்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்தார்.

    அப்போது சோழ தேசத்தின் பகுதியாக இருந்த இந்த கந்தர்வகோட்டையில் அழகிய ராமர் கோவிலை கட்டி, அங்கு பிராமணர்கள் இன்ன பிற மக்கள் வாசிக்க கிராமத்தையும், பால் தேவைகளுக்கு பசுக்கள் போன்றவற்றையும் தானமாக அளித்து, ராமருக்கு நித்ய பூஜைகள் நடக்கும் படி ஏற்பாடுகள் செய்தான். இந்த கோதண்ட ராமருக்கு பூஜைகள் செய்து வழிபட தொடங்கிய பின்பு சோழ ராஜ்ஜியம் மேலும் செழித்தோங்கியது என கூறப்படுகிறது. இக்கோவிலை கட்டிய கண்டராதித்த சோழனின் சிலை இக்கோவிலில் இன்றும் உள்ளது.

    கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவில் சிறப்புக்கள்

    இக்கோவில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலின் ஆச்சர்ய நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது.

    கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

    அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

    கோவில் முகவரி

    அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில்
    கந்தர்வகோட்டை
    புதுக்கோட்டை மாவட்டம் - 613301
    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது.
    கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.

    அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார். அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.

    காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.

    அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங் கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத் தது. என்னுடைய இடத் தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங் கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக் கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொ ண்டு வந்து இறை வன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.

    பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
    சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி.
    காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோவில், பார்ப்பவர்களை பக்தி பரவசப்படுத்தும் அழகிய ஐந்து நிலை மாடங்களோடு, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

    இந்த கோவில் கர்ப்பகிரகத்தில் அன்பு மலையாய், அருள் கடலாய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தரிசனம் தருகின்றார் வீழி வரதராஜப் பெருமாள். விழுதி மரம் செழித்த காட்டினில் முன்னாளில் பெருமாள் கோவில் கொண்டிருந்தார். (விழுதி என்பதுதான் வீழியானது). காலவெள்ளத்தில் அக்கோவில் கரைந்திடவே, பெருமாள் அடியவர் ஒருவர் கனவில் தோன்றி, தம்மை இவ்விடத்தில் எழுந்தருள சொன்னார். அதன்படி உருவானதுதான் வீழி வரதராஜப் பெருமாள் கோவில். பெருமாள் சன்னதியின் பக்கத்தில் செங்கமலத்தாயார் சன்னதி அமைந்துள்ளது. பெருமாளுக்கு வடக்கு பார்த்த சன்னதி சர்வ வல்லப ஆஞ்சநேயர் சன்னதி கொண்டுள்ளார்.

    முன்னொரு காலத்தில் அறநெறியோடு ஆட்சி புரிந்து வந்த ஒரு மன்னனுக்கு மகப்பேறு கிட்டவில்லை. இதனால் மிகவும் துன்புற்ற மன்னன், ஒரு மாமுனிவர் அறிவுறுத்தலோடு, ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை, பிள்ளை வரம் வேண்டி கண்ணீர் மல்க வேண்டினார். மன்னனின் பக்தியை கண்டு, அவருக்கு பிள்ளை வரத்தோடு எல்லா வரங்களையும் அருளினார் பெருமாள். இன்றும் பிள்ளை வரம் வேண்டுவோர், பெருமாளை உள்ளன்போடு தரிசித்து, பிள்ளை வரம் மற்றும் அனைத்து ஆசி்களையும் பெற்று செல்கின்றனர்.

    இப்பெருமாள் கோவிலில் எல்லா மாதங்களும் விழா மாதங்களே. இவற்றுள் மாசிமகம் பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப் பெருமாள் கோவிலில் மகா மண்டபம் 1908-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது. அதன்பிறகு மடப்பள்ளி (1927), பஜனைமடம் (1942), திருகல்யாணமண்டபம்(1958), ராஜகோபுரம்(1961) உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் யாவும், பா.கி.சவுரிராஜலு செட்டியார் தலைமையிலும், அவரோடு பல்வேறு செட்டியார் பெருமக்கள் இணைந்து செயலாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

    அதன் பிறகு 1972-ம் ஆண்டில் திருமுழுக்கு திருப்பணி. 1991-ம் ஆண்டில் குடமுழுக்கு. சிறப்பம்சமாக 1973-ல், புதுச்சேரி மாநில அளவில் கோவில் பராமரிப்புக்காக முதல் பரிசும், 1974-ல் மாவட்ட அளவில் 2-ம் பரிசும், 1975-ல் மீண்டும் முதல் பரிசும் பெற்றுள்ளது.

    இத்தகைய சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி. இம்மை இன்பமும், மறுமைப் பேரின்பமும் பெற ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை சரணடைவோம்.
    திருச்சி திருவானைக்கால் அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
    * திருவாரூக்குத் தெற்கே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருக்காரவாசல் உள்ளது. இங்குக் கண்ணாயிரம் என்ற திருநாமத்தோடு இறைவன் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்திற்குப் பிரம்ம தீர்த்தம் என்று பெயர். சந்திர கிரகணம் மற்றும் பவுர்ணமி அன்று இக்குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி இறைவனின் அருளைப் பெறுவார்கள் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

    * திருச்சி திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சம்மேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

    * அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும். இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர். இவர்களின் விருப்பப்படியே மன்மதன் தன் பானத்தை மகேஸ்வரன்மேல் தொடுத்தான். இச்செயலால் கோபம் கொண்ட ருத்ரன் தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார். இறைவனின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் பந்தநலலூரக்கும் இடையே உள்ள திருவாளப்புத்தூருக்குத் தென் கிழக்கே உள்ள வரதம்பட்டல் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் மன்மத பரமேஸ்வர லிங்கத்திற்குப் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.

    * திருநாரையூரில் திருத்தலத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று இரவில் இங்குள்ள பொள்ளாப்பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் அதே சமயத்தில் பிரகாரத்தின் ஓரிடத்தில் குத்து விளக்கை ஏற்றி வானத்திலுள்ள சந்திரனுக்குப் பூஜை செய்து தீபாராதனை காட்டும்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    * வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள வன்னவேடு என்ற வன்னிக்காடு என்ற தலம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு லகுசண்டி ஹோமம் செய்கிறார்கள். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம். பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.

    * திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை. இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும். பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.

    * ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
    இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

    * நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தக்கலை திருத்தலத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் தென்கிழக்கு மூலையில் அரசமடித்தடியில் உள்ள விநாயகர் ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயன காலத்தில் வெள்ளையாகவும் தை முதல் ஆனி வரையிலான உத்தராயணக் காலத்தில் கறுப்பாகவும் நிறம் மாறி காட்சியளிக்கிறார். இதற்குக் காரணம் இந்த விநாயகர் சிலை சந்திரகாந்தக் கல்லினால் வடிக்கப்பட்டது. இதைப் போலவே அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் உள்ள மூலஸ்தான பிரகாரத்தில் சந்திரகாந்த கல் இருப்பதினால் எப்போதும் இந்த இடம் குளுகுளுவென்று ஏர்கண்டிஷன் செய்தது போல் இருக்கும். சந்திர காந்தக்கல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்தக் கல்லில் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, பெருமாள், ராமர், அம்மன், சந்திரன் போன்ற சிலைகளை வடித்தால் அருட்கடாட்சம் மிகுந்திருக்கும்.

    * ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை. பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.

    * திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை. இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது. இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.

    * சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலர்தரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரி வலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    * குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.

    * தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

    திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
    ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

    தல வரலாறு

    சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

    தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

    இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

    ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

    இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    பெயர்க் காரணம்

    சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

    ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

    கோயில் அமைப்பு

    கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

    ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

    தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

    பாதாள விநாயகர்

    கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

    காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

    தோஷங்கள் விலக பரிகார பூஜை

    ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.
    பயண வசதி

    ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர் மாவட்டம் உள்ள திருச்சிற்றம்பலம் என்ற ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    சிவபெருமானை வழிபடும் அடியவர்கள் உச்சரிக்கும் முக்கியமான, வார்த்தையில் ஒன்று ‘திருச்சிற்றம்பலம்.’ மாணிக்கவாசகர் அருளிய நூல் ‘திருவாசகம்.’ இதனை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே எழுதியதாகவும், அந்த பாடலின் முடிவில், ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்று கையெழுத்திட்டதாகவும் வரலாறு சொல்கிறது. இதனால் `திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்த சிறப்புமிக்க வார்த்தையின் பெயரில் ஒரு திருத்தலமே அமைந்திருப்பது மேலும் சிறப்பானது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் கொடிமரம் கிடையாது. ஆலயத்திற்கு வெளியே நந்தியம்பெருமானும், அவருக்கு எதிரில் வடக்கு பக்கமாக இரட்டைப் பிள்ளையார் சன்னிதியும் காணப்படுகின்றன. மூலவர் புராதனவனேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் மகா கணபதி காட்சி தருகிறார். இவர் தனது தும்பிக்கை முகத்தை, வடக்குபுறமாக திரும்பிய நிலையில் இருக்கிறார்.

    இது தவிர மகாலட்சுமி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், சண்டிகேஸ்வரர், லிக்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, பைரவர், சூரிய- சந்திரர், நவக்கோள்களுடன் கூடிய சிவலிங்கங்கள் என்று வித்தியாசமான திருமேனிகள் பல உள்ளன. ஆலயத்தில் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
    எமதர்மன் சன்னிதி

    இந்த ஆலயத்தில் இருந்து வெளியே வந்து, கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணமாகச் சென்றால், எமதர்மன் கோவில் இருக்கிறது. இங்கு எருமை வாகனத்தில் அமர்ந்து வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இவரது கையில் கதாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கியுள்ளார். இவரை வழிபாடு செய்தால் எம பயம் நீங்கி, பலம் சேரும். மன வியாதி, உடல்பிணி, தீராத பகை, சோம்பல், போட்டி- பொறாமை போன்றவை நீங்கும்.
    ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலத்தூர் கிராமம் பட்டுக்கோட்டையில் இருந்து 8 மைல் தொலைவில் அமைந்துள்ள அழகிய பாரம்பரியம் மாறாத கிராமம். ஆலத்தூர் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒரே பெயர் காருடைய அய்யனார்- வீரனார் ஆலயம் தான்.

    ஆலத்தூரையும் அதனை சுற்றியுள்ள மக்களுடனும் இரண்டற கலந்த காவல் தெய்வமாக இக்கோவில் அய்யனாரும், வீரனாரும் அருள்பாலிக்கிறார்கள்.

    இந்த கோவிலில் காருடைய அய்யனார் மூலவராக வீற்றிருக்க அடுத்து வீரனாரும் பரிவார தெய்வங்களாக நொண்டிவீரன், முன்னோடியன், மாப்பிள்ளைவீரன், அகோரவீரப்பத்திரன், விசாலாட்சி அம்மன், காலபைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு வீற்றிருக்கின்றார்கள். இக்கோவிலில் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் ஒரு வேளை உச்சிகால அபிஷேகம், மற்றும் படையல்கள் நடைபெறும்.

    வேண்டுதல் நிைறவேற நடக்கும் நிகழ்ச்சிகளே இங்கு ஒரு பெரும் திருவிழா போன்றே நடக்கும். இதனால் வாரத்தில் 3 நாட்களும் இக்கோவில் திருவிழா போல காட்சியளிக்கும்.

    மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வங்களாக அய்யனாரும், வீரனாரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மக்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப குதிரை உபயம், படித்துரை உபயம், அன்னதான உபயம் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்கிறார்கள். பொருளதார மேம்பாடு அடைய, குழந்தை பாக்கியம் பெற, குடும்ப பிரச்சினை சுமுமாக தீர வேண்டி இங்கு மக்கள் வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும். ஏராளமான பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிய தலமாக இக்கோவில் உள்ளது.

    சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று இங்கு வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. அன்று காவடி எடுத்தல் விழா நடைபெறும். விழாவின் 2-வது நாளில் காலபைரவருக்கு அக்னி கொப்பரை எடுத்தல் விழா நடைபெறும்.

    இறுதி நாளில் தேர் திருவிழா நடைபெறும். தேர் புறப்படும் முன்பாக செம்மறி ஆடு தேருக்கு பலியிடப்படுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தற்போது ஆலத்தூர் மற்றும் ஏனைய கிராம மக்களின் உதவியுடனும், வெளிநாடு வாழ் மக்களின் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடக்கிறது.

    இந்த கோவிலில் 1939-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1979-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன் பின் 43 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு காருடைய அய்யனார்-வீரனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந் தேதி காலை விநாயகர் வழிபாடும் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியும் நடைபெற்றது. 7-ந்தேதி காலை சாந்தி ஹோமம், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. 8-ந்தேதி காலை மூர்த்தி ஹோமம், மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

    9-ந்தேதி காலை 2-ம் கால யாக பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று 5-ம் கால யாகபூஜை நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம்கால யாக பூஜையும் 8.30மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பட்டு 9.30 மணிக்கு விமான மகா குடமுழுக்கும், காலை 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.

    கிராம மக்களின் குலதெய்வமாக ஆலத்தூரில் வீற்றிருந்து காவல் காக்கும் கண்கண்ட தெய்வமாக காருடைய அய்யனார் அருள்பாலிக்கிறார். இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடக்க இருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    சித்ரா பவுர்ணமி நாளில் விழா காணும் காருடைய அய்யனார்

    ஆலத்தூரில் காருடைய அய்யனார் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வீரனார் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். பக்தர்கள் காவடி, கொப்பரை எடுத்து வந்து அய்யனாரை வழிபடுவார்கள். 3-வது நாள் தேரோட்டம் நடைபெறும். இக்கோவில் தேர் வடம் 90 ஆண்டுகள் பழமையான இரும்பு சங்கிலியால் ஆனதாகும். கோவிலை சுற்றி அய்யனார் தேர் வலம் வரும். இக்கோவிலின் முகப்பின் இருபுறமும் 10 அடி, 15 அடி உயரத்துக்கு மேற்பட்ட குதிரை சிலைகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆழிமலை சிவன் கோவிலில் உள்ள சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.



    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.

    இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.

    பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.

    கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    அதில் அவர், “இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.

    கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது” என்கிறார்.
    திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்பாக, ஸ்ரீவெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
    பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித்தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து தனக்கு சாகாவரம் வேண்டும் என கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை சிறையிலடைத்தனர்.

    மிஞ்சிய தேவர்கள், இந்த துன்பத்தில் இருந்து எங்களை காக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் ஓடினர். அவர் சிவனிடம் முறையிட்டார். சிவன் தனது நெற்றி கண்ணை திறந்தார். அதிலிருந்து  அதிபயங்கர நெருப்பு பிளம்பு ஏற்பட்டது. தீப்பொறி பறந்தது. அது ஆறு நெருப்பு பந்துகளாக மாறின.     சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தினார். அந்த ஆறு சுடர்களும் வாயு தேவனால் சரவணப்பொய்கையில் மலர்ந்திருந்த 6 தாமரை மலர்களில் மீது சேர்க்கப் பெற்றன. அந்த ஆறு சுடர்களும் இறை அருளால் ஆறு குழந்தைகளாக உருப்பெற்றனர்.

    அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்க கார்த்திகை பெண்கள் வந்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது, தேவர்கள் மட்டுமல்ல, அருகில் இருந்த பார்வதிதேவியும் அதன்வெம்மை தாளாமல் ஓடினார்கள். ஓடும் போது பார்வதி தேவியின் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி விழுந்தன. அதில் இருந்து நவரத்தினக்கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கல்களில் இருந்தும் ஒன்பது தேவியர் தோன்றினர். அவர்களுக்கு நவரத்தினங்களின் பெயரை சிவபெருமான் சூட்டினார்.

    ரக்தவல்லி (சிவப்புக்கல்), தரளவல்லி (முத்து), பவுஷீவல்லி (புஷ்பராகம்), கோமேதக திலகா, வஜ்ரவல்லி (வைடூரியம்). மரகதவல்லி, பவளவல்லி, நீலவல்லி, வைரவல்லி ஆகிய அவர்கள் சிவபெருமானை அன்பு ததும்ப பார்த்தனர். அவரும் அவர்களை பார்த்து  நீங்கள் என் தேவியராகி விட்டதால், உங்களை என் பக்தர்கள் நவகாளிகள் என்றழைப்பர். நீங்கள் காவல் தெய்வங்களாக இருந்து, பார்வதிதேவிக்கு தொண்டு செய்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.

    சிவன் அருளால் அவர்களுக்கு வரிசையாக குழந்தைகள் பிறந்தனர். ரக்தவல்லி பெற்ற பிள்ளை வீரபாகு என பெயர் பெற்றான். தரளவல்லிக்கு வீரகேசரி, பவுஷீவல்லிக்கு வீர மகேந்திரன், கோமேதக திலகாவுக்கு வீரமகேஸ்வரன், வஜ்ரவல்லிக்கு வீரராக்ஸன், மரகதவல்லிக்கு வீரமார்த்தாண்டன், பவளவல்லிக்கு வீராந்தகன், நீலவல்லிக்கு வீரதீரன், வைரவல்லிக்கு வீரவைரவன் ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள், இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினான்.

    சிவன் அவர்களிடம், மக்களே! உங்கள் எல்லாரது பிறப்பும் காரணத்துடன் நிகழ்ந்தது. தேவர்களை பத்மாசுரன் என்ற அசுரன் தன் சகோதரர்களோடு இணைந்து துன்பப்படுத்தி வருகிறான். அவர்களை வெற்றி கொண்டு, உலகில் நன்மை நிகழ, நீங்கள் பாடுபட வேண்டும். சரவணப்பொய்கையில் உங்களுக்கு முன்பாக பிறந்து வளர்ந்து வரும் வடிவேலனே உங்கள் தலைவன், வாருங்கள், நாம் அவனைப் பார்க்கச் செல்லலாம் என்றார்.

    பார்வதிதேவியும் அகம் மகிழ்ந்து, தன் புதிய புத்திரர்களுடன் மூத்த புத்திரர்களைக் காணச்சென்றாள். கங்கைக்கரையிலுள்ள சரவணப் பொய்கையை அடைந்தனர். பார்வதிதேவி, ஆறுகுழந்தைகளையும் எடுத்து கட்டியணைத்தாள், அப்போது ஆறு குழந்தைகள் ஒரு குழந்தையாக மாறியது. அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது. கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன் என்று பொருள். முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் சிவன், இந்தப் பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் வானில் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள்.

    உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இனி உலகில் வழங்கும். கார்த்திகை நாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார். முருகனிடம் அவர் உருவான காரணத்தை கூறிய சிவனார்,லட்சக்கணக்கான படை வீரர்கள் உனக்கு உண்டு. இவர்களுக்கு சேனாதிபதியாக வீரபாகு  தலைமை தாங்குவான் என்றார். அப்போது பார்வதிதேவி தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கினாள். அந்த சக்தியே வெயில் உகந்த அம்மனாக திகழ்கின்றாள். முருகனுக்கு சக்திதேவி தான் வேல் கொடுத்தாள். அதன் காரணமாக வேலை ஈந்த அம்மன் என்ற சொல்லே வேலீந்த அம்மன் என்றாகி வெயிலுகந்த அம்மனாக மாறியதாக கூறப்படுகிறது.

    இந்தக்கோயில் திருச்செந்தூரில் முருகன் கோயில் அருகே உள்ளது.  திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்பாக, ஸ்ரீவெயிலுகந்தம்மனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப்பெருமான் சூட்சும உருவில் அம்பாள் திருக்கோயிலுக்கு வந்து, தனது அன்னைக்கு தன் கைகளாலே பூஜை செய்து அருளாசி பெற்று வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்வதாக ஐதீகம். தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்மனுக்கு பாரம்பரியமாக ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.

    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரகுணபாண்டியன் என்னும் மன்னன் குழந்தை பாக்கியம் இல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோயில் வந்து கந்தசஷ்டி விரதம் இருந்தான். அதன் பயனாக மன்னனின் மனைவி கருவுற்றாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும், உடல் மனித உருவிலும் இருந்தது. அதை கண்டு மன்னன் பெரிதும் கவலையுற்றான்.

    மன்னனின் கனவில் காட்சி கொடுத்த முருகப்பெருமான், ஊரின் வடக்கே வீற்றிருக்கும் என் அன்னையிடம் சென்று வேண்டினால் உன் குறை தீரும் என்று கூறியதைக் கேட்டு, மன்னன் இவ்விடம் வந்து கடும் விரதம் மேற்கொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்தான். இரக்கமே உருவான அன்னை வெயிலுகந்தம்மன் ஆடி செவ்வாய்க்கிழமை அன்று என் எதிரே இருக்கும் கடலில் இறங்கி உன் குழந்தையோடு தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள் என்று அருள்வாக்கு தந்தாள். அன்னை கூறியபடியே மன்னன் தனது குதிரை முகம் கொண்ட குழந்தையோடு கடலில் இறங்கினான்.

    அதுவரை ராட்சத அலைகளால் ஆர்ப்பரித்து கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் குதிரைமுகம் மாறி, அழகான பெண் குழந்தை முகமாக உருமாறியது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் அந்த இடம் வதனாரம்ப தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. குழந்தையின் அழகான முகத்தைக்கண்டு ஆனந்தம் கொண்ட மன்னன் குழந்தையோடு அன்னையை தரிசிக்கச் சென்றபோது அன்னையின் முகம் குதிரை முகமாக மாறி இருந்தது. அதைக்கண்டு மன்னன் அதிர்ச்சியுற்றான்.

    மன்னன் அன்னையிடம் காரணம் வேண்டியபோது என்னிடம் வந்து ‘‘அம்மா என்று யார் என்ன கேட்டாலும் என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்களின்படி, நீ அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உன் கர்மபலன்கள் தீர்ந்ததும். நான் ஏற்றுக்கொண்ட குதிரை முகம் மாறிவிடும்’’ என்று அன்னை அபயம் அளித்தாள்.

    கோயிலின்றி வராந்தாவில் இருந்தால் வேல் ஈந்த அம்மன், வெயிலுகந்த அம்மன் என அழைக்கப்பட்டாள். அன்னையின் கருணையை எண்ணி வியந்த மன்னன் அன்னைக்கு கோயில் கட்டி சிறப்பித்தான். இன்றும் இக்கோயிலில் கொடிமரத்தின் அருகே பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். இன்றும் ஆடிச்செவ்வாய் அன்று அதிகாலையில் பெண்கள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி கால்களில் நலுங்கு மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை கொண்டு அன்னையை வணங்கினால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    மேலும் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை பேறு பெறுவார்கள் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆடிச்செவ்வாய் அன்று பெண்கள் அதிக அளவில் இங்கு வந்து அன்னையை தரிசிக்கிறார்கள்.  பன்னீர்மரம் ஸ்தலவிருட்சம், ஆவணி மற்றும் மாசித்திருவிழாவில் பத்தாம்நாள் அன்று அன்னைக்கு கடலில் எழுந்தருளி தன் புதல்வனான சண்முகருக்கு அருளாசி வழங்குகிறாள். அதன் பின்பே  சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் தொடங்கும்.
    இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது, ஆண்டார்குப்பம். இங்குள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    * முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ‘ஆண்டியர்குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார்குப்பம்’ ஆனதாக சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான் இருப்பதாலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    * அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத்தல முருகப்பெருமானின், திருநாமம், ‘பால சுப்பிரமணியர்’ என்பதாகும்.

    * முருகனுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையில் இருப்பதால், இவரை ‘அதிகார முருகன்’ என்றும் அழைப்பார்கள்.

    * இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.

    * மூலவரான முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல், இடுப்பில் கரங்களை வைத்தபடி அருள்கிறார்.

    * மூலவரின் சன்னிதிக்கு எதிரில் பிரம்மன், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மனுக்குரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது.

    * பொறுப்பான பதவிகள் கிடைக்க, அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்க, புத்திசாலித்தனமாக பிள்ளைகள் பிறக்க, இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    * திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ஆண்டார்குப்பம்.

    இந்த ஆலயத்திற்கு வந்த அடியவரான ஒரு முருக பக்தர், இத்தலத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், “இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்திற்கு கிடையாது” என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக அங்கு வந்த முருகன், தீர்த்தம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு ‘வேலாயுத தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.

    தல வரலாறு

    ஒரு முறை கயிலாயம் வந்த பிரம்மன், சிறுவன் என்பதால் முருகப்பெருமானை அலட்சியம் செய்தார். ஆனால் முருகப்பெருமான், பிரம்மனிடம் படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். அது பிரம்மனுக்கு தெரியவில்லை. இதையடுத்து பிரம்மனை, முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் முருகப்பெருமான் இங்கு காட்சி தருகிறார்.
    முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
    திருச்சியில் உள்ள தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோவில் உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ‘உக்கிர காளியம்மன்’ என்று அழைக்கப்பட்டாலும், கருணையின் வடிவமாகவும், பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் காவல் தெய்வமாகவும் அன்னை விளங்குவது சிறப்பு.

    அம்பாளின் வலது புறத்தில் சந்தன கருப்பண்ணசாமியும், இடது புறத்தில் உற்சவ அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன. மேலும் விஷ்ணு துர்க்கை, சங்கட விமோசன ஆஞ்சநேயர், சப்த கன்னியர், மதுரைவீரன், சாம்புகமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன் னிதிகள் அமைந்துள்ளன. உற்சவ காலங்களில் அம்பாள் உலா வருகையில் அவருக்கு முன்னும், பின்னுமாக அரணாக செல்வதே கருப்பண்ணசாமியும், சாம்புகமூர்த்தியும் தான்.

    இந்தக் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு. இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.

    முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது.

    மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள்.

    உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். மேலும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் அம்மனை மடியேந்தி வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது.

    கோவில் திருவிழாக்கள்

    சித்திரை:- சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள். அதன்பிறகு அம்பாளுக்கு ராஜ மகா அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி:- ஆடி மூன்றாம் வெள்ளியன்று 1,008 திருவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆவணி:- ஆவணி மாதத்தில் கூடிவரும் மிருக சீரிட நட்சத்திரத்தன்று சதகண்டி ஹோமம் நடைபெறும்.

    மார்கழி:- அம்பிகை திருப்பள்ளி எழுச்சி.

    தை:- பவுர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை.

    பங்குனி:- பங்குனி மாதம் இரண்டாம் வாரத்திற்குப்பின் அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். அதன் பின்பு 15 நாட்களுக்கு அம்பாள் விரதம் இருப்பதாக ஐதீகம். அந்த நாட்களில் எவ்வித பூஜைகளும் நடைபெறாது. மேலும் அம்மாதத்தின் கடைசி செவ்வாய் அன்று அம்பாள் புறப்பாடு நடைபெறும். இந்நிகழ்வு காளிவட்டம் என அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அம்பாளை தரிசிப்பது போல், தனது பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதற்காக அவள் கிளம்புவதாக ஐதீகம். புதன்கிழமை சுத்த பூஜை, சப்பரத்தில் பவனி மறுதினம் திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். அதன்பின்னர் கருப்பசாமி அருள்வாக்கு (குட்டி குடித்தல்) நிகழ்வு, வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும், சனிக்கிழமையன்று அம்பாள் குடிபுகுதலுடன் விழா நிறைவுபெறும்.
    ×