என் மலர்tooltip icon

    கோவில்கள்

    தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது.
    கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

    கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

    இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

    கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
    இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
    பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..

    மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)

    அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)

    தல விருட்சம்: தில்லை மரம்

    தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம்

    தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

    தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது.

    இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.

    நடராஜர் சன்னிதி அருகிலேயே, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாளின் தலம் இருப்பது சிறப்புக்குரியது.

    நடராஜர் சன்னிதி எதிரே உள்ள மண்டபத்தில் நின்றபடி அருளும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.

    சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கும். அதில் உள்ள திரை அகற்றப்பட்டு திறந்த வெளி பகுதிக்கு தீபாராதனை காட்டப்படும். இங்கு இறைவன் ஆகாயமாக இருப்பதாக ஐதீகம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’ என்றும் சொல்லப்படுகிறது.

    மூலவரே வீதி உலா வரும் ஆலயமாக சிதம்பரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள நடராஜர், தேரில் பவனி வருவார்.

    திருவாரூரில்பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல, வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் ஆலயத்திற்கு வந்து தரிசித்தாலே முக்தி கிடைத்து விடும்.

    இத்தல இறைவனை வேண்டினால் மன நிம்மதி கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலானது, கடலூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடு துறையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
    தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் -பரம சுவாமி

    தாயார் -ஸ்ரீதேவி பூதேவி

    தல விருட்சம்– ஜோதி விருட்சம் ,சந்தனமரம்.

    தீர்த்தம் -நூபுர கங்கை

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம் ஆகும்.

    மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோவிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது.

    இந்த கோயில் அமைதியான பரந்த சூழலில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவில் அழகர் கோவில் என்றும், இந்த மலை சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது.

    அழகர் கோவில் தல வரலாறு

    ஒரு சமயம் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபத்தை போக்க பூலோகத்தில் தற்போது உள்ள அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தவம் புரிந்தார். இது ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் காட்சி கொடுத்தார்.

    இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினமும் உங்களை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். பெருமாளும் அவ்வாறே வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.

    பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் முதல் இடத்தையும் காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் 3வது இடத்தை அழகர் கோயிலும் பெற்றுள்ளன. அழகர்கோவில் மூலவர் பரமசாமி ஸ்ரீதேவி ,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

    அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் தான் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் அழகாக இருப்பார் .தாயார் அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவரின் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் கள்ளழகர் ஆனார். இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமென கருதப்படுகிறது.

    பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலை குகைக்குள் வற்றாத ஜீவநதியாக வந்துகொண்டிருக்கிறது.

    மக்களின் காணிக்கையாக வரும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை இட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது இக்கோயிலுக்கான தனிச் சிறப்பும் புகழும் உடையது. அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள். இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதாக தலவரலாறு உள்ளது.

    திருவிழா -சித்திரை திருவிழா பத்து நாட்கள், ஆடிப் பெருந்திருவிழா 13 நாள், ஐப்பசி தலை அருவி உற்சவம் மூன்று நாள், இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு வாரத்தின் சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் மாதந்தோறும் இக்கோயிலில்
    திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

    திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
    அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
    சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப மரம் உள்ளது. அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.

    தலவரலாறு

    பண்டைய காலத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த வணிகர் முத்துச்செட்டியார் தங்களது பகுதியில் விளைந்த விளைபொருட்களை மதுரையில் விற்பனை செய்தார். மதுரை மீனாட்சியம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். குழந்தை பாக்கியம் இல்லாத இவர், மதுரைக்கு வரும்போது மீனாட்சியம்மனை தரிசித்து குழந்தை பேறு கிடைக்க வேண்டி வந்தார். ஒரு முறை அவர் மதுரையில் விளைபொருட்களை விற்று விட்டு ராமநாதபுரத்திற்கு குதிரையில் வந்து கொண்டிருந்தார். வழியில் அழுதவாறு நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியை பார்த்த அவர், அவளிடம் விசாரித்தார். சிறுமி தனது பெயர் முத்துமாரி என்றும், வழிதவறி வந்ததாகவும் அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்பினார்.

    வழியில் இருந்த ஒரு குளத்தில் குளிக்க முத்து செட்டியார் விரும்பினார். சிறுமியை கரையில் அமரும்படி தெரிவித்த அவர், குளத்தில் இறங்கி குளித்தார். சிறிது நேரம் கழித்து அவர் கரைக்கு வந்தபோது, அங்கிருந்த சிறுமி மாயமானது தெரியவந்தது. மனமுடைந்த நிலையில் வீடு திரும்பிய அவர் நடந்தது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், கள்ளிக்காட்டு பகுதியில் நானே சிறுமியாக வந்தேன். அப்பகுதியில் எனது பாதச்சுவடு பதிந்துள்ளது. அதனை பிடிமண்ணாக எடுத்து எனக்கு கோயில் எழுப்பி வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன் என்று கூறி மறைந்தார். இதன்படி முத்துசெட்டியார் பிடிமண் எடுத்து அம்மனுக்கு சிலை செய்து, கோயில் எழுப்பினார் என்பது புராணம்.  

    இக்கோயிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா விமர்சையாக நடக்கிறது. முக்கிய விழாவாக பிடிமண்  வழிபாடு நடக்கிறது. விழாவுக்கு முந்தைய நாள் இரவில் பிடிமண் எடுத்து  அம்மனாக பாவித்து பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பால்குடம்,  தீர்த்தவாரி, பூக்குழி வைபவம் என 10 நாட்களும் திருவிழா களை கட்டுகிறது. இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு முதலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெறுகின்றனர். தீர்த்தத்தை பருகுவதால் அம்மை நோய் விரைவில் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    திருமண வரம் வேண்டும் இளம்பெண்கள், தாலிப்பொட்டை அம்மன் காலடியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனை வணங்கி, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர்.

    கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கிறது.
    பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.
    கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வீற்றிருந்தார். அப்போது அங்கு கார்த்திகை பெண்கள் ஆறு பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்குமாறு வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் சிவயோகிகள் யாரும் சித்திகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களிடம் இச்சித்திகள் நிழல்போல் உடலோடு ஒட்டிக் கொண்டு அவர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் என்றார். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும்படி சிவனிடம் வேண்டினார். இதனால் சிவன் கார்த்திகை பெண்களிடம் உங்களுக்கு பராசக்தியாக விளங்கும் பார்வதிதேவி அஷ்டமாசித்தியை உபதேசிப்பார் என்று கூறி பார்வதியிடம் அவர்களுக்கு இச்சித்திகளை உபதேசிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதிதேவியை சிந்தனை செய்யாமல் அவள் சொன்ன அஷ்டமா சித்தியை பற்றிய உபதேசத்தை கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சக்தி கார்த்திகை பெண்களை பாறைகளாக கிடக்க கடவீர்கள் என சாபமிட்டார். இதை கண்டு அஞ்சிய பெண்கள் சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்டினர். அவர்களிடம் சிவபெருமான் நீங்கள் பட்டமங்கலத்தில் ஆலமரத்தரடியில் கற்பாறைகளாக இருங்கள். யாம் மதுரையில் இருந்து குருவடிவில் வந்து உங்களுக்கு சாபவிமோசனம் கொடுப்போம் என்றார்.

    அதன்படி ஆறுகார்த்திகை பெண்களும் அங்கு பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். ஏற்கனவே கூறியபடி சிவபெருமான் வந்தபோது குருவடியில் பட்டமங்கலம் வந்து கார்த்திகை பெண்களின் சாபத்தை போக்கினார். பின்னர் அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்தார். அதன்பின் கார்த்திகை பெண்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தனர்.

    கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த சிவபெருமான் இங்கு தட்சிணாமூர்த்தியாக ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பட்டமங்கலம் சுந்தரேசுவரர் கோவிலுக்கு வெளியில் இந்த தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது.

    இதற்கிடையே பார்வதிதேவி கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்கும் படி சிவனுக்கு பரிந்துரை செய்ததால் சிவன் கோபத்திற்கு ஆளாகி காளியாக உருவெடுத்து பட்டமங்கலத்தில் நாவல் மரத்தடியில் கோவில் கொண்டாள். அந்த காளிக்கு நவ்வலடி காளி என்று பெயர். அவளுக்கும் சிவபெருமான் விமோசனம் கொடுத்தார். அதன்பின் அவர் காளி வடிவம் நீங்கி சவுந்தரி அம்மனாக காட்சி அளித்தார். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.

    ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.

    எல்லா கோவில்களிலும் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலுமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இங்குதான் உண்மையான ஆலமரத்தடியில் உள்ளார். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.

    இங்கு வழக்கமாக வியாழக்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் சென்று வழிபடுவர். குருப்பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். தட்சிணாமூர்தியை வணங்கினால் குருவின் அருள் கிட்டும். குருதோஷம் விலகும்.

    விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00  -1.30 மணி வரை அபிஷேகம்.

    நேரம்: காலை 6.30 - 12.30 மணி; மாலை 4.30 - 8.00 மணி.

    பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்சினை, தீராத நோய் ஆகியன நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

    குருப் பெயர்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயர்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குரு பகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
    இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோயில்.முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகள். கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருட்பாலிக்கிறாள். மேல் இரண்டு கரங்களில் கதையையும், கத்தியையும் தாங்கி, கீழ் கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடன் திகழ்கிறாள். இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறாள்.

    கருவறை கோஷ்டத்தின் கிழக்குப்பகுதியில் ராஜகணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் நின்றிருக்கும் துர்க்கையும், தென்பகுதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே மகாலட்சுமியும், பால முருகனும் அருட்பாலிக்கின்றனர்,நுழைவாயிலில் மகிஷாசுர மர்த்தினியும், கஜலட்சுமியும், சரஸ்வதியும், லட்சுமியும் அருள் பொங்க காட்சி தருகின்றனர்.அன்னையின் விமானத்தில் சமயபுரம் மாரியம்மன், காமாட்சியம்மன், விசாலாட்சி, சரஸ்வதி, கருமாரியம்மன், தனலட்சுமி, அயன மாரியம்மன், காயத்ரி, கோமாரி, லட்சுமி, தண்டு மாரியம்மன் ஆகியோர் திருமேனிகள் அழகுற கொலுவிருக்கின்றன,

    அன்னையின் சந்நதிக்கு மேற்கு திசையில் அரசமரத்தின்கீழ் கற்பக விநாயகர் அருட்பாலிக்கிறார். கிழக்குப் பகுதியில் நவகிரக நாயகர்கள் தனி மண்டபத்தில் உள்ளனர். வடகிழக்குப் பகுதியில் கருப்பராயனையும், முனியப்பனையும் தரிசிக்கலாம்.‘தண்டு’ என்றால் படைவீரர்கள் தங்கும்கூடாரம்  என்று பொருள். ஒருசமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை காட்சி அளித்தாள். நீர்ச்சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த ஒரு வனப்பகுதியின் நடுவே காட்சியளித்த அன்னையின் உருவம் அந்த வீரனின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

    பொழுது விடிந்ததும், தனது நண்பர்களுடன் அந்த அடர்ந்த காட்டில் அன்னையைத் தேடி அலைந்தான். அந்த வீரன். அவனது அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான். அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னையை எழுந்தருளச் செய்தான். தான் கூடாரத்தில் உறங்கியபோது கனவில் தோன்றிய அன்னை என்பதால் தண்டு மாரியம்மன் என்றழைத்தான். அங்கேயே ஆலயமும் அமைந்தது.அன்று முதல் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் களைந்து அருட்பாலித்து வருகிறாள் அன்னை. தினமும் நான்கு கால பூஜைகள் இக்கோயிலில் நடக்கின்றன. காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சம் தொரட்டி மரம்.

    இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று பூச்சாட்டுடன் தொடங்கப்படுகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்ததிருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம், ‘சக்தி கரகம்.’ அன்று காலை 6 மணிக்கு கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் திருக்கோயிலிலிருந்து `சக்தி கரகம்' புறப்படும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களில் தீச்சட்டி ஏந்தி, சக்தி கரகத்துடன் பக்தி பரவசத்துடன் வருவார்கள். மனம் சிலிர்க்க வைக்கும் காட்சி இது. 11வது நாளன்று காலை 6 முதல் இரவு 8 மணி வரை தமிழ் முறை லட்சார்ச்சனை நடக்கும். அன்று அன்னைக்கு பலவிதநறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பலவகை மலர்களால் அன்னைக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும். தன்னை நம்பும் பக்தர்களுக்கு நல்லருள் புரிந்து பக்தர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் தடைகளை தகர்த்தெறிந்து காத்தருள் புரிகிறாள் தண்டு மாரியம்மன்.
    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
    மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
    தாயார் : ஏலவார் குழலி
    உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி
    தல விருச்சம் : பூளை எனும் செடி
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
    இடம் : ஆலங்குடி, திருவாரூர்

    குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் "சுக்ரவார அம்பிகை" என்பதாகும்.

    இந்த ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.

    ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.' வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.

    உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.

    கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.

    ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோவிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.

    இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம்.

    சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.

    ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.
    மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.
    மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோவிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

    சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.

    ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தொன்மம்

    புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

    அவரும் அதற்கு சம்மதித்து வேத விற்பன்னர்களையும், துறவிகளையும் அழைத்துவந்து சிவனை நோக்கி பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாலரும் ஆவேசம் தணிந்தார். பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார்.

    கோவில் அமைப்பு

    மாகாளர் கோவிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.

    மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கப்படுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.

    வரலாறு

    1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோவில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள 'கோட்டீர்த்த குந்தா' என்கிற இக் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.

    தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோவிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863). ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.

    மராட்டிய ஆட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் உஜ்ஜைனில் நிறுவப்பட்டது. உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலை மீண்டும் கட்டினார்.

    சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோவிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சிபுரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தென்னாங்கூர். எழில் கொஞ்சும் வயல்வெளிகள் நிறைந்து சுற்றிலும் பச்சைபசுமை நிறைந்த அந்த கிராமத்தின் நடுவே வின்னை முட்டும் பிரண்மாண்டமான கோபுரத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
     
    குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் உருவாக்கப்பட்டு ஆசிரமம் இங்குள்ளது. இத்திருக்கோயில் அருகே உள்ள ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரிசுவாமிகளின் பரமானந்த சீடர்தான் இந்த ஹரிதாஸ்கிரி சுவாமிகள் ஆவார். அகிலமேங்கும் சுற்றி தன்னுடைய குருஜீ ஞானானந்த சுவாமிகளை பற்றி உபன்யாசம் செய்து உலக மக்களை தனது காந்த குரலால் கவர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்-வந்தவாசி மார்க்கம் அமைந்துள்ள இந்த தென்னாங்கூரில் ஒரு அழகிய ஆசிரமத்தை ஹரிதாஸ் கிரி சுவாமிகள் உருவாக்கினார். இந்த தென்னாங்கூர்தான் குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள பூரி ஜகன்நாதர் ஆலயம் போன்று இந்த கோயிலின் விமானம் அமைந்துள்ளது தனித்துவம் வாய்ந்த சிறப்பாகும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ ரகுமாயிசமேத பாண்டுரங்க சுவாமிகள் 12 அடியில் பிரம்மாண்டமாக இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
     
    இத்திருக்கோயில் கடந்த 1996 ம் வருடம் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2008 ல் 2வதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2020 ல் 3வது முறையாக சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் இத்திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளும், ரகுமாயி தாயாரும் மிகவும் சிறப்பாக அமையப்பட்டு அருள் பாலிக்கிறார்கள்.
     
    இந்த திருக்கோயிலில் பாண்டுரங்க சுவாமிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மிகவும் சிறப்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் அன்று பாண்டுரங்க சுவாமிகள் 10,008 பழங்களால் குருவாயூரப்பன் அலங்காரம் (விசு கனி) அலங்காரம் செய்யப்பட்டு மிக பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
     
    கண்ணன் அவதார தினமாக கோகுலாஷ்டமி அன்று வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மற்றும் ஒவ்வொரு நாளும் பிண்ணைமரக்கண்ணன் அலங்காரம், காளிங்க நர்த்தன அலங்காரம், கோவர்தன கிரி தாரி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம் இவ்வாறு 7 நாட்களும் பாகவத சப்த ஆகம் செய்யப்பட்டு 7 விதமான அலங்காரங்களில் திவ்ய தரிசம் கொடுக்கிறார்.
     
    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையான் போன்று பத்மாவதி கோலமும் திவ்ய தம்பதிகளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதே போன்று ஒவ்வொரு புரட்டாசி சனி அன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்டான கருட சேவையும் நடைபெறுகிறது. ஆஷாட (ஆடி) ஏகாதசி காலத்தில் மகா நைவ்வேத்யம் செய்வித்து பக்தர்களுக்கு அன்னதானம் இட்டு பிரம்மாண்டமான நாம சங்கீர்தனத்துடன் விஷேஷ பாலாபிஷேகம் செய்யப்படும்.
     
    பிரதி ஞாயிற்றுகிழமைகளில் துவாரகை கண்ணன் போன்று கம்மீரமாக ராஜ அலங்காரத்துடன் தரிசனம் கொடுக்கிறார். மார்கழி பௌர்ணமி காலத்தில் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் சித்தயான தினத்தன்று 140 கிலோ வெண்ணெய்னினால் மிகவும் அழகான வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
     
    வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசல் தரிசனம் பக்தர்களுக்கு அருளிகிறார். 12 அடியில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்க சுவாமிகள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் திருப்பாற்கடலில் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருளிகிறார்.
     
    பிரதிமாதம் உத்திரத்டாதி நட்சத்திர தினத்தன்று குருநாதனர் ஹரிதாஹ் கிரி சுவாமிகளால் ஆராதனம் செய்த உற்சவ மூர்த்திகள் பாண்டு ரங்கன் சுவாமிகள் ருக்குமாயி தாயார் ஆகியோர் தங்கதேரில் எழுந்தருளி வீதிவுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
     
    இந்த ஆலயத்தில் வைகாநாச ஆகம முறைப்படி திருப்பதி ஏழுமலையானுக்கு நடப்பது போன்று தினமும் 6 கால பூஜைகளும் உற்சவங்களும் நடைபெறுகிறது. பாண்டு ரங்க சுவாமிகளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துளசி, சந்தனம் ஆகியவை பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
     
    கோயில் சிறப்பு

    இத்திருக்கோயிலில் அஷ்டபந்தனம் எனும் மூலிகையால் இங்கு மூலவர் சுவாமிளை பிரதிஷ்டை செய்திருப்பதால் ஆண்கண் சட்டையை கழட்டி விட்டு சுவாமியை தரிசிப்பது சிறப்பாகும். ஆலயத்தின் உட்புறம் உலகத்திலேயே முதன்முறையாக கண்ணாடி இழை ஓவியம் (பைபர் கிளாஸ் பெயிண்டிங்) கிருஷ்ணருடைய ராஜ லீலைகள் அனைத்தும் தஞ்சாவூர் சித்திர பாணியில் அமையப்பட்டிப்பது இக்கோயிவில் தனிச்சிறப்பாகும்.
     
    இந்த ஆலயத்தில் துவாரபாலகர்கள் திருப்பதி ஆலயத்தில் அமைந்துள்ளது போன்று பஞ்ச லோகத்தில் அமைய பெற்றிருக்கிறார்கள். பாண்டு ரங்க சுவாமிகளுக்கு செய்யப்படும் அலங்காரம் மிகவும் சிறப்பானது. சிவபெருமான் அபிஷேக பிரியர். அதேபோன்று கிருஷ்ணன் அலங்கார பிரியர் அதன் காரணமாக இக்கோயிலின் அலங்காரம் மிக நேர்த்தியாக சிரத்தையுடன் செய்யப்பட்டு பல்வேறு மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
     
    ஸ்தல விருட்டம்

    இந்த ஆலயத்தின் ஸதல விருட்சமாக தமால விருட்சம் அமையப்பட்டுள்ளது. இந்த மரம் இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் தான் அமைந்துள்ளது. ஒன்று வடநாட்டிலும் மற்றொன்று தென்னாங்கூரிலும் உள்ளது. இந்த மரத்தை சுற்றி வந்து பாண்டுரங்கனை தரிசித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமண தடை, உத்யோக உயர்வு, வியாபார விருத்தி, குழந்தைகளின் கல்வி மேம்படும் என்பது ஐதீகம்.
     
    ஸ்ரீமடம்

    இங்கு பாண்டுரங்க சுவாமிகள் கோயிலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீமடத்தில் குருநாதர் ஞானாந்த கிரி சுவாமிகளுக்கு தனியாக ஆலயமும் உள்ளது. இந்த ஆலத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த சோடஷாக்சரி அம்மாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் நவாவரண பூஜையம் சிறப்பாக நடைபெறுகிறது. குரு ஹரிதாஸ் கிரி சுவாமிகளுக்கு ஸ்ரீமடத்திலேயே அழகிய பிருந்தாவனமும் அமையப்பெற்றுள்ளது. மிகவும் சிறப்பாகும்.
     
    மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

    இத்தனை சிறப்பு மிக்க தென்னாங்கூரிலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் உள்ளது. மதுரை மாநாகரில் எழில்மிகு தோற்றத்துடன் மிக பிரம்மாண்டமாக அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய அருளை அளித்துவரும் மதுரை மீனாட்சியம்மன் இந்த தென்னாங்கூரில் தான் பிறந்தார் என்ற ஐதீகமும் உண்டு. மதுரை மீனாட்சியம்மன் இங்கு பிறந்ததாலேயே இந்த ஊருக்கு தட்ஷிண ஹாலாட்சியம் என்றொரு பெயரும் உண்டு. இந்த ஆலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சுந்தரேஸ்வரர் தன்னித்தனி சந்நதிகளில் அருள் பாலிக்கிறார்கள். மிகவும் அரிதாக காணப்படும் நவக்கிரக மூர்த்திகள் தங்களது பிராட்டிகளுடன் (மனைவிகளுடன்) கூடிய சன்னதி அமையப்பட்டிருப்பது தனித் சிறப்பாகும்.
     
    இந்த ஊரின் ஆதிகால சன்னதியான லட்சுமி நாராயணன் சன்னதியும் இவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் பல அறக்கட்டளைக்கு உட்பட்டதாகும். இந்த ஆஸ்ரமத்தில் நிறைய தர்ம காரியங்கள் நடைபெற்று வருகிறது. தினமும் அன்னதானம், கோசாலை, முதியோர் இல்லம், இலவச மருத்தும் போன்ற தர்ம காரியங்கள் நடைபெற்ற வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக இங்கு விடுதிகளும் அமைந்துள்ளது.

    தரிசன நேரம்

    இத்திருக்கோயிலில் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை பாண்டுரங்கசுவாமிகள் ரகுமாயி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
    புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப் பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.

    இப்பூவுலகம் “நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று” ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
    பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த் தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும். அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் “ராகு-கேது தலம்” என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில். இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், ‘கயிலை பாதி காளத்தி பாதி” என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும். மூவர் பாடல் பெற்ற திருத்தலம். பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.

    இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து “திருமூலர்” கூறியவாறு (இதயக்கோயில்) பூஜித்து வந்தனர். இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோயில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.

    இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.

    பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள். இன்றளவும் இருந்து வருகிறார்கள். இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.

    ராஜகோபுரத்தின் சிறப்பு

    கோவிலின் கிழக்கு புறத்தில் ராஜகோபுரம் 5 சிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதில் என்ன விசேஷம் என்றால் ராஜகோபுரத்தின் முன்புறம் சிவன் அவதாரங்களும், பின்புறம் பெருமாள் அவதாரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சிவன்-பெருமாள் கோவில் இங்கு ஒன்றாக அமைந்து இருப்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

    கோவில் தெற்கு வாசலில் 30 அடி உயரத்திற்கு 3 சிலைகளுடன் ஞானாம்பிகை அம்மன் கோபுரமும், வடக்கு புறம் 3 நிலை கொண்ட 30 அடி உயர பெருமாள் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சிவன், அம்பாள், பெருமாள் சன்னதிகளில் 6 கோபுரங்கள் அமையப் பெற்றுள்ளது.

    கொடி மரம்

    கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது. அன்பர் மனத் தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடிமரம் ஆகும். இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.

    கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.

    கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.

    பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் “பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும். புகழ் வானளாவ விரிந்து நிற்கும்” என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது. மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடிமரத்துக்கு உண்டு.

    2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித்தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.

    கோவில் நடை திறக்கும் நேரம்

    ஞாயிறு முதல் புதன்கிழமை வரை காலை 6.30 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

    வியாழக்கிழமை

    காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை. மாலை 4 மணி முதல் 9 மணி வரை.

    வெள்ளி-சனிக்கிழமை

    காலை 6.30 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
    விசேஷ நாட்களில் கோவில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

    கன்னி மூலையில் கற்பக விநாயகர்

    ராஜகோபுரத்தின் உள் நுழைந்து, அகன்ற சுற்று பகுதியில் (பிரகாரம்) கோவிலை முதல்சுற்று வலம் வந்தால், கன்னி மூலையில் கற்பக விநாயகர் சன்னதியை காணலாம்.

    விநாயகர் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபம் அஷ்டப்பிரதான் என்று சொல்லுமாறு 8 தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் திருஉருவத்துக்கு எதிரில் மூஞ்சுறு என்று சொல்லக்கூடிய விநாயகப் பெருமானின் வாகனம் மிகவும் சிறியதாக உள்ளது. இதை நோக்கும்போது, “பருத்த விநாயகனுக்கு சிறுத்த மூஞ்சுறு” என்ற தொடர் உண்மையாகவே இங்கு தோற்றம் அளிக்கின்றது. “எளிய பக்தி வலிமையை தாங்கும்” என்பது சொல்லாமல் புலப்படுகின்றது. எந்த காரியத்தை தொடங்கும் போதும், கோவிலை வலம்வரும் போதும், முதலில் விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த மரபு ஆகும்.

    கோவில் முகவரி

    ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்),
    எண்.106, மிஷன் வீதி,
    புதுச்சேரி-605 001.
    கோவில் அலுவலக தொலைபேசி எண். 0413-2335495.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் (செட்டிக் கோவில்) புதுவை பஸ் நிலையத்தில் இருந்து 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திலும், ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், விமான நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறி செஞ்சி சாலை கார்னர் அம்பலத்தடையார் மடம் வீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.
    இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.
    காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள சஞ்சவீராயர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம், ஆஞ்சநேயருக்காக அமைந்திருக்கும் பிரமாண்ட திருக்கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆலயம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது.

    இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.

    இந்த ஆலயம் 1456 முதல் 1543 வரை வாழ்ந்த, லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் சிறந்த அறிஞராகவும், விஜயநகரப் பேரரசில் மிகப்பிரபலமாகவும், ஆளுமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

    வரதராஜப் பெருமாளை தரிசித்து விட்டு செல்லும் வழியில் இவ்விடத்தில், தாத்தாச்சாரியார் தனது குழுவினருடன் தங்கினார். அப்போது அவரிடம் இருந்த செல்வத்தைப் பறிக்க வந்த திருடர் கூட்டத்தை குரங்குகளின் வாயிலாக ஆஞ்சநேயர் காத்தருளினார். அதற்கு நன்றிக்கடனாகவே இந்த ஆலயத்தை அவர் எழுப்பியிருக்கிறார்.

    கோவிலின் நுழைவு வாசல் தெற்கு பக்கம் உள்ளது. கோபுரங்கள் எதுவும் இல்லாமல், நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்றுதான் நம்மை ஆலயத்திற்குள் வரவேற்கும் வகையில் நிற்கிறது.

    ஆலய கருவறைக்குள் சஞ்சீவிராயர் என்ற பெயரில் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    மூலவரின் கருவறைக்கு எதிரே 24 தூண்கள் கொண்ட கல் மண்டபம் இருக்கிறது. இதில் கிழக்கு நோக்கியபடி மகாலட்சுமி தாயார் தரிசனம் தருகிறார்.

    ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர், ஆஞ்சநேயரின் கருவறைக்கு வெளியே தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கின்றனர்.

    கிழக்குப் பிரகாரத்தில் கருடாழ்வார் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், 5 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்.

    காஞ்சிபுரம் நகருக்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில், அய்யங்கார்குளம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் பாலாறு பாலம் தாண்டியதும் அய்யங்கார் கூட்ரோடு வரும். அதில் இருந்து வலதுபுறம் 5 நிமிடம் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்தான் ‘சனி சிங்கனாப்பூர்.’ இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக, பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.

    அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத அந்தப் பகுதி மக்கள், அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு ஊர்த் தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த ஊரில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் கூறியதாக தல வரலாறு சொல்கிறது.

    இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில்தான், இத்தல சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல் ரூபமாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது. சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் வரை இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுவார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    சீரடி நகரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், அகமது நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும், பூனாவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
    ×