என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சுமங்கலி பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்கியத்தோடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
    சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.

    சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

    இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.சுவாமி படங்களுக்கு பூ,தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
    சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .

    நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் . தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

    தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை கொடுக்க வேண்டும். இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும்.

    பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே இல்லத்தலைவி சாப்பிட வேண்டும். மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.

    இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி. இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே. இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்கியத்தோடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    அதுமட்டுமல்ல, இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் வகுக்கிறது.
    சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
    பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதன். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.

    ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோயிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தான்.

    அப்படியே கோயிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோயிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்ஹ்டு, ‘நீ எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்துவிடுவார்.

    இந்நிலையில், கோயிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார்.

    அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார்.

    அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார்.

    அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது.

    இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார்.

    அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார்.

    திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.

    பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

    புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக பார்க்கப்படுகின்றது.

    அதே போல், சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
    முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
    தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி. ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது. அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

    ஒருமுறை பார்வதிதேவி, “மிகச்சிறந்த விரதம் எது?” என சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், “தேவி! ஏகாதசி விரதமே, விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மோட்ச கதியை பெறுவார்’’ என்றார்.

    ஏகாதசி பிறந்த கதை

    முரன் என்ற அசுரன், பல வரங்களைப் பெற்று தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். இதனால் அவதிப்பட்டு வந்த தேவர்களும், முனிவர்களும் தங்களை காத்து அருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து முரனுடன் போரிட முன்வந்தார், நாராயணர். அவர்கள் இருவருக்குமான போர், பல காலம் நீடித்தது. போரில் முன்னிலை பெற்ற நாராயணர், முரனுக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் ஒரு குகையில் சென்று ஓய்வெடுத்தார்.

    நாராயணர், ஒரு குகைக்குள் தங்கியிருப்பதை அறிந்த முரன், அங்கு வந்து வாளை எடுத்து கண் மூடி இருந்த நாராயணரை கொல்ல முயன்றான். அப்போது நாராயணரின் மேனியில் இருந்து பெண் வடிவம் கொண்ட சக்தியானவள் வெளிப்பட்டாள். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள். அசுரனை வென்ற பெண்ணுக்கு ‘ஏகாதசி’ என்று பெயர் சூட்டினார், நாராயணர். அசுரனை வென்ற நாள் ‘ஏகாதசி’ என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி தினமாகும்.

    ஏகாதசி விரத முறை

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசி இலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். ‘பாரணை’ என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும்.

    அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு, சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.

    வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்கவாசலின் வழியாக வெளியே வருவார்கள்.

    இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். மேலும், பகைவர்களின் பலம் குறையும்.

    ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகள்

    உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி.
    குருவை நாம் முறையாக விரதம் இருந்து வழிபட்டால் மங்கல ஓசையும், மழலையின் சப்தமும் இல்லத்தில் கேட்கும், புகழும், பெருமையும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குருவின் பார்வையால் மாங்கல்ய தோஷங்கள் அகலும்.
    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தினர் நம் முன்னோர்கள். முதலில் தாய் பிறகு, ‘இவர் தான் உன் தந்தை’ என்று அறிமுகம் செய்வதால் இரண்டாவது தந்தை. பிறகு, ‘இவர் தான் உனக்கு குரு’ என்று தந்தை நல்ல ஆசிரியரிடம் புதல்வனை ஒப்படைப்பதால் மூன்றாவது குரு. பிறகு, குரு பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது ‘இது தான் தெய்வம், இதனை வழிபட்டால் வரம் கிடைக்கும்’ என்று சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துவதால் அடுத்தது தெய்வம் இடம்பெறுகின்றது.

    ஆக குருவருள் இருந்தால் தான் நமக்குத் தெய்வத்தின் திருவருள் கிடைக்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது. அப்படிப்பட்ட குருவை நாம் முறையாக வழிபட்டால் மங்கல ஓசையும், மழலையின் சப்தமும் இல்லத்தில் கேட்கும், புகழும், பெருமையும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குருவின் பார்வையால் மாங்கல்ய தோஷங்கள் அகலும். மகத்தான பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

    நவ கிரகத்திலுள்ள குருவை வியாழக்கிழமையன்று சென்றுவழிபட்டு வரலாம். குருவுக்கு பிரதிநிதியாக விளங்கும் மகான்கள், ஞானிகள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் சிறப்பாகும். தென்முகக் கடவுளை வழிபடும் பொழுது அதற்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு இவைகளால் அர்ச்சனை செய்து குருவிற்குரிய துதிப்பாடல்களை மூன்று முறை படித்து வழிபட்டால் நிச்சயம் நினைத்த காரியம் கைகூடும். சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
    ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெறவேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், விரதம் இருந்து நடராஜப் பெருமானை முழுமையாக வழிபடவேண்டும்.
    நடராஜப் பெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடல் அரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடிகோடியாய் நன்மை கிடைக்கும். அன்று சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும்.

    எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லை கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெறவேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபடவேண்டும்.

    சிவாலயங்களில் சிவகாமி அம்மன் உடனாய நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழவேண்டும். மிதுனத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

    மிதுன ராசி, நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறார். எனவே, கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற, மாணவர்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும்.

    ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தை கண்டு களிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு, நடராஜப் பெரு மானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாட வேண்டும்.

    ‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால், அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சிகொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை. வாழ்வாங்குவாழ, வாழ்வை வெல்ல,வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்கவேண்டும்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்.
    இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் விரத வழிபாடு சிறந்தது. வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது.
    இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் விரத வழிபாடு சிறந்தது. சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது.

    இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, விரதம் இருந்து வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம் ஆகும்.

    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம். விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு.
    சுக்கில சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.

    வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் வெற்றி கிடைக்கும். திருமண காலத்தை விரைவில் காண விரதம் இருந்து மஞ்சள் விநாயகரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்தால் பலன் கிடைக்கும். குடும்ப வறுமையை போக்க, முற்றிலும் அகற்ற வெள்ளெருக்கு திரிபோட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
    நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம் ஏற்ற பலன் கிட்டும்.
    நம்மைத் தேடி இறைவன் வந்து காட்சி கொடுக்கும் திருநாள் தான் திருவாதிரை தரிசனமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள்.
    நடராஜர் தரிசனம் ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும். ஆனி மாதத்தில் வரும் தரிசனம் ‘ஆனித் திருமஞ்சனம்’. மார்கழி மாதத்தில் வரும் தரிசனம் ‘திருவாதிரை தரிசனம்’ என்று கூறப்படுகிறது.

    இந்த நாளில் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் திருவீதி உலா வருவதும் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் இந்த விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.

    காட்சி தரும் கடவுளை அன்றைய தினம் கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள். ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 15-ந் தேதி (30.12.2020) புதன்கிழமை அன்று வருகின்றது.

    நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைப் போல நம் வாழ்விலும் சிவபெருமான் நடக்காத காரியத்தை நடத்திக் காட்டுவார். மாணிக்கவாசகருக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருநாள் அது. நம்மைத் தேடி இறைவன் வந்து காட்சி கொடுக்கும் திருநாள் தான் திருவாதிரை தரிசனமாகும்.
    லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட்டால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து 'ஓம் நமோ நாராயணாய' எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார்.

    அவரது படத்தை பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு விரதமிருந்து நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

    'நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்'.

    இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது.

    இதை முறையாக விரதமிருந்த கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.
    தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். இந்த சிறப்புமிக்க மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.
    தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். `மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணரே கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.

    * மார்கழி மாத பௌர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும்.  

    * திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். இந்த நாளில் நிகழ்த்தப்படும் நடராஜர் அபிஷேகம் சிறப்பானது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    * பரசுராம ஜெயந்தி : தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

    * மார்கழி மாத சிவராத்திரி : சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். மார்கழி மாத சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    * அனுமன் ஜெயந்தி : அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய அனுமன் ஜெயந்தி தினம் அன்று விரதம் இருந்து அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * மார்கழி அமாவாசை : விரதம் இருந்து முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

    * போகிப் பண்டிகை : மார்கழி மாதத்தின் கடைசி நாளாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத்திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள் இன்று.
    குடும்ப நலனுக்காகவும், கணவன்- மனைவி ஒற்றுமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள் இருக்கும் விரதத்திற்கு ‘ரம்பை திருதியை’ என்று பெயர்.
    ‘அட்சய திருதியை’ அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த நல்ல நாளில், ஏதாவது ஒரு பொருள் வாங்கினால், வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. குடும்ப நலனுக்காகவும், கணவன்- மனைவி ஒற்றுமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள் இருக்கும் விரதத்திற்கு ‘ரம்பை திருதியை’ என்று பெயர். அனைத்து வளங்களும், நலன்களும் வேண்டும் என்பதற்காக, தேவலோக கன்னிகையான ரம்பை செய்த பூஜையே, ‘ரம்பை திருதியை’ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதமுறை வந்த கதையைப் பற்றி பார்ப்போம்.

    தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருப்பவர்கள், அரம்பையர்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, இவர்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

    சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அரம்பையர்கள் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அரம்பையர் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை. அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கு தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை ‘அப்சகணம்’ என்று அழைப்பார்கள்.

    இந்த அழகான அரம்பையர்கள், பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத் திருதியை இவர்களுக்குரிய நாள் என்றும், கார்த்திகை மாத சுக்லபட்ச திருதியை நாளே இவர்களுக்குரியது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இந்நாளில் அரம்பையர்களை வழிபடும் வழக்கம் முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல வழிபடும் வழக்கம் மருவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும் இந்நாளில் லட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

    கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதி அன்று, ரம்பை திருதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பையர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள். கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசி யில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

    திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
    மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
    பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள்.

    கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில் அதிகாலைநேரத்தில் ஒசோன் வாயு கீழே வெளிப்படுகிறது.

    அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. ஓசோன் நம்மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

    திருமணம் தடைபடுபவர்கள் மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    சிவபெருமானையும், அவரது வாசல் காப்பாளனாக அறியப்படும் நந்திதேவனையும் வழிபடுவதற்கு உகந்ததாக ‘பிரதோஷ வழிபாடு’ உள்ளது. வளர்பிறை திரயோதசி, தேய்பிறை திரயோதசி என்று மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ காலத்தில், பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள் என அனைவரும் சிவபெருமானை வழிபட்டு ஆசிபெறுவதாக ஐதீகம். அந்த அற்புத தருணத்தில் நாமும் சிவபெருமானையும், நந்திதேவனையும் வணங்கி, நம் துன்பங்களைப் போக்கிக்கொள்ளலாம்.

    உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும், பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து, காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்வதோடு, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

    11-ம் பிறையாகிய ஏகாதசியில், ஈசன் விஷம் உண்டார். 13-ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான், நடனக் காட்சி புரிந்தது ஒரு சனிக்கிழமை ஆகும். எனவேதான் சனிப்பிரதோஷம் மகத்தான சிறப்பு பெறுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண் டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன ‘நமசிவாய’ ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிர தோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    ×