என் மலர்
முக்கிய விரதங்கள்
வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கிறோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு வராகி அம்மன் படம், அல்லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபடலாம். காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்வம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும். பூஜை அறையில் வராகி படத்தை வைப்பதை காட்டிலும், தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.
அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ளலாம். தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து, 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்தலாம். சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண் டும்.
பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் குருவை மானசீகமாக வழிபாடு செய்து ‘குருவடி சரணம் திருவடி சரணம்’ என்று 9 முறை கூறவும். பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை ‘விநாயகா நம’ என கூறி அர்ச்சிக்க வேண்டும். விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.
வராகி அன்னையை துளசி, வில்வம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து வராகி மூல மந்திரம் மற்றும் வராகி மாலை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையில் அமர்ந்த பின் எழக்கூடாது. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபாராதனை காட்டி தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னிப்பொங்கல் எனப்படுகிறது.
பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்நாள் கொண்டாடப்படுவது போகி. இது இந்திரனைக் குறிப்பதாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்களை எரிப்பதோடு, வேண்டாத கொள்கைகளையும் தீய பழக்க வழக்கங்களையும் ஒழித்து, நல்ல எண்ணங்களை தொடங்கும் நாளாக போகிப்பண்டிகை கருதப்பட்டது.
இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தைப்பொங்கல். தை முதல் நாள் விவசாயிகள் மட்டுமின்றி ஏனைய தொழில் செய்வோர், செல்வ வளம் கொண்டவர்கள் எனப்பாகுபாடின்றி வீட்டு முற்றத்தில் அடுப்பு வைத்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு அதனைச் சுற்றி மஞ்சளையும், கரும்பையும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் ஒருமித்த குரலில் ‘பொங்கலோ, பொங்கல்’ என்று மும்முறை கூறி கொண்டாடுவார்கள். இது ஜாதி, மத பேதங்களை கடந்த பொங்கலாகும்.
மூன்றாம் நாள் விவசாயிகளின் உற்ற நண்பர்களாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு கொண்டாடப்படும் விழாவாகும். அன்றைய நாளில் மாடுகளுக்கு சுதந்திரமளிக்கும் பொருட்டு ஆறு, ஏரி, குளம், கிணறு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு வர்ணம் தீட்டியும், அதன் உடம்பில் வண்ணப் பொட்டுகள் இட்டும், கழுத்திலே மஞ்சள்கொத்து, ஜரிகைத்துணி, வேட்டி வைத்து கட்டி, சலங்கை மணிகளை மாட்டி அலங்கரிப்பதோடு, முதல்நாள் போன்றே பானையில் பொங்கலிட்டு மாடுகளின் முன்பு படையல் வைக்கப்படும்.
அதன்பின்பு கிராமப்புறங்களில் பொதுவான மைதானத்துக்கு கொட்டு முழக்கங்களுடன் அழைத்துச் சென்று மாடுகளின் ஆனந்தத்திற்காக கொம்புகளில் சுற்றப்பட்டிருக்கும் கயிறுகளை கழற்றி விட்டு ஆரவார மகிழ்ச்சியில் மாடுகளை ஓடச்செய்வார்கள். இந்த மாட்டுப்பொங்கல்தான் அலங்காநல்லூர், பல்லவராயன்பட்டி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகளாகவும் நடத்தப்படுகிறது.
நான்காம் நாள் காணும் பொங்கல். மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு கன்னிப்பொங்கல் எனப்படுகிறது. உற்றார், உறவினர் மட்டுமின்றி ஜாதி, மத, இன பேதமின்றி சமத்துவ நிலையில் ஒருவரை, ஒருவர் கண்டு களிப்பதனை காணும் பொங்கல் என்கிறோம். இப்போது பல்வேறு சமூகத்தினர் ஒன்றுபடும் சமத்துவ பொங்கலும் பிரபலமாகி வருகிறது.
ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த நவ சிவ விரதங்களை பார்க்கலாம்.
வடமொழியில் ‘நவம்’ என்பதற்கு தமிழில் ‘ஒன்பது’ என்று பொருள். ஆன்மிகத்தில் ஒன்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்கள் ஒன்பது என்ற வகையில் அமைந்திருப்பதை பலரும் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த வகையில் ஒன்பதாக அமைந்த, சிறப்புபெற்ற சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* சோமவார விரதம்
* திருவாதிரை விரதம்
* உமாகேஸ்வர விரதம்
* சிவராத்திரி விரதம்
* பிரதோஷ விரதம்
* கேதார விரதம்
* ரிஷப விரதம்
* கல்யாணசுந்தர விரதம்
* சூல விரதம்
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும்.
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.
அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.
பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை, மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.
இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும்.
துரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, அவர்களது துரதிஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அளவில்லா சௌபாக்கியம் கிட்டும் என ஞான நூல்கள் கூறுகின்றன. இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.
ஹே யுதிஷ்டிரா !! இவ்விரதத்தினை கடைபிடிப்பதனால் மனிதர்களின் சர்வ பாபங்களும் நீங்கப் பெறுகிறது. துரதிர்ஷ்டத்தால் துக்கதில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.
இந்த வருதினி ஏகாதசியின் புண்ணிய பிரபாவத்தினால் ராஜா மாந்தாதா சுவர்க்க ப்ராப்தி அடைந்தார். சிவபெருமானின் சாபத்தினால் குஷ்டரோகியான இக்ஷ்வாகு குல அரசன் துந்துமாரா இவ்விரத மேன்மையால் அதிலிருந்து விடுபட்டு சுவர்க்க ப்ராப்தி பெற்றார்.
ஒரு மனிதன் 10,000 ஆண்டுகள் தவம் செய்வதால் கிடைக்கும் புண்ணியமும், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் ஸ்வர்ண தானம் செய்வதினால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானது. ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து இக,பர சுகங்களையும், முக்தியையும் தர வல்லது இந்த வருதினி ஏகாதசி விரதம்.
ஹே குந்தி மைந்தா !! சாஸ்திரங்களில் குதிரை தானத்தை விட யானை தானம் மேலானது எனவும், அதை விட பூமி தானம் மேலானது எனவும், அதை விட எள் தானம் மேலானது எனவும், அதை விட ஸ்வர்ண தானம் மேலானது எனவும், தான,தர்மங்கள் பற்றி கூறுகையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட விசேஷமானதும், மிகவும் ஸ்ரேஷ்டமானது அன்னதானம் ஆகும் என்று கூறியுள்ளனர். ஏனெனில், அன்னதானம் தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருக்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்க வல்லது என்றும் கன்யா தானம் அன்னதானத்திற்கு இணையானது.
மேலும், கன்யா தானம், கோ தானம், வித்யா தானம் ஆகியவற்றால் கிட்டும் புண்ணியங்கள் அனைத்தும் வருதினி ஏகாதசி விரதத்தால் மட்டுமே கிடைக்கப் பெறலாம் என்றார்.
மேலும் அவர், தன் உணர்சிகளை உள்ளடக்கி சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சௌபாக்கியத்தின் அடையாளம். எல்லா நடவடிக்கைகளிலும், கட்டுப்பாட்டினை மேற்கொள்ளுதல் சுகம் மற்றும் சௌபாக்கியத்திற்கு வளர்ச்சி அளிக்கும். இல்லையெனில் ஒருவர் செய்யும் பூஜை, பக்தி இவையனைத்தும் சக்தி இழந்து விடும் என்றார்.
ஹே யுதிஷ்டிரா !! எனவே இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர் அவருடைய பாவங்களில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, இறுதியில் சுவர்க்க பிராப்தியும் அடையப் பெறுவர்.
மேலும், இந்த ஏகாதசி விரத புண்ணியமானது, புண்ணிய நதியான கங்கையில் நீராடினால் கிடைக்கும் பலனை விட பன்மடங்கு மேலானது என்றார்.
அத்துடன், எவரொருவர் இந்த புண்ணிய நன்னாளில் இந்த ஏகாதசி விரத மகாத்மியத்தை சிரவணம் செய்கிறாரோ அவர் 1000 கோ தானம் செய்த பலனை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறியதாக பவிஷ்ய புராணம் விவரிக்கின்றது.
சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்- அது நாராயணன் என்னும் நாமம்’ என்பர் ஆன்மிகப் பெரியோர்கள். ஸ்ரீமன் நாராயணன், காக்கும் கடவுள். அவரது அபயகரம் பாதத்தை நோக்கி இருக்கும். தன்னை சரணடைந்தவர்களுக்கு சந்தோஷத்தை வழங்குவார்.
இந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் பரங்கிப் பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஆண்டாள், விஷ்ணுவை வழிபட்டு சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறி யதை நாம் அறிந்திருக்கிறோம்.
இப்படி சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
விஷ்ணுவை வழிபட்டு அவரது துணையாக விளங்கி செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்கும் சென்று லட்சுமி வருகைப் பதிகம் பாடி னால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவாள். அஷ்டலட்சுமியின் படத்தையும், விஷ்ணு படத்தோடு இணைத்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் நிறைவேறும்.
எட்டு வகை லட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன்! கோலமயில் ஆனவளே!
வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும் ஆதிலட்சுமியே!
வட்டமலர் மீதமர்ந்து வருவாய் இதுசமயம்.
என்று பாடுங்கள்.
எட்டுவகை லட்சுமியும் வேண் டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்குவர்.
-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள், மார்கழி மாதம் வருகின்ற அஷ்டமி ஆகும். இந்த ‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும். அன்றைய தினம் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று வர்ணிக்கப்படும் இந்த மார்கழி மாதம் ஒரு மகத்தான மாதமாகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்தத் திருநாள் மார்கழி மாதம் 22-ந் தேதி (6.1.2021) புதன்கிழமை வருகின்றது. அன்று இறைவன் சன்னிதியில் ஒரு கைப்பிடி அளவு அரிசி வைத்து வழிபட்டு, அதை உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு தினமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும்.
மகிஷாசுரனை வதம் செய்ய ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளின் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார்.
இந்த நவசக்திகளும் ஒன்றாகி துர்க்கா பரமேஸ்வரியாக வடிவெடுத்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு எருமை வடிவில் இருந்த மகிஷனை வதைத்தார். அதன் காரணமாக ‘மகிஷாசுர மர்த்தினி’ என்னும் திருநாமத்தைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
எருமை வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கோடாளி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம், ஒப்புறயர்வற்ற சாரங்கம் என்னும் வில்லுடன் துர்க்காதேவி காட்சியளிக்கிறாள்.
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது. செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன்.
செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை (நல்ல மஞ்சள் நிறம் உடையவை) எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றைச் சிறுபாத்திரத்தில் வடித்து வைத்து விட்டு, இரு எலுமிச்சைத் தோல்களை எதிர்ப்புறமாக மடக்கிக் கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.
ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.
ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு (சுவாசினி) தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை கொடுத்து வணங்கினால், அவற்றை நேரடியாக சுவாசினி உருவில் துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டு அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். மேலும் துர்க்கை சன்னதியில் கன்னிப் பெண்களின் கால்களுக்கு நலுங்கிட்டு, கைகளில் வளையல் இட்டுப் பூச்சூட்டி பூஜித்தால் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்கள் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம்.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமியம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும்.
ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி மாதமாகும். ஆடி.. ஓடி.. சம்பாதிக்கும் வாழ்க்கையில், மற்றவர்கள் வியக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆனி மாதத்தில் வரும் நடராஜர் தரிசனம் நமக்கு வழிகாட்டுகிறது.
மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்துகொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ, வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும்.
‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே’
என்று முன்னோர்கள் கூறிய முத்தான வரிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான்’ என்கிறார்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.
சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். அன்று சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை என்பது அவசியம்.
அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.
சிவராத்திரியன்று சிவனை வழிபடும்போது, இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங் களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரி சனத்தை கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு, நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.
விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம்.
விரதம் என்பது ஒரு வகையான விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
எண்வகை விரதங்கள்
சந்தாபண விரதம்
மஹாசந்தாபண விரதம்
பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
அதிகிரிச்சா விரதம்
பராக விரதம்
தப்த கிரிச்சா விரதம்
பதகிரிச்ச விரதம்
சாந்தாராயன விரதம்
சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்களின் ஆசிகளைப் பெற்று, திருமணம் போன்ற விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாகச் செய்யப்படுவது.
சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, திருமணம் போன்ற விசேஷங்கள் நடப்பதற்கு முன்னதாகச் செய்யப்படுவது. பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.
சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள். வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும், மகனுக்கு செய்யும்போது, வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும். வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.
மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது. இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம். இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம். இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.
அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப்புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும். இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.
இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும். குளித்து வந்த பெண்களுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜலம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும். பெண்கள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மனையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை, சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.
இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம். அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும். இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும்.
அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். சுமங்கலியாக இறந்தவரின் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு, பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு சாப்பிட வேண்டும்.






