என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். விநாயகரை சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.
    விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில், சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை விலகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (வளர்பிறை சதுர்த்தி) சதுர்த்தி ஆகும். புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல், ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்.

    பொதுவாகவே, புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் எந்த விரதம் இருந்தாலும், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். விநாயகர் என்பவர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.அதனால் தான் சங்கடஹர சதுர்த்தி என்கிறார்கள்.
    சில விரதங்கள் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றன. “லட்சுமி பஞ்சமி”, திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டுத் தினமாகும்.
    சித்திரை மாதத்தில் பல்வேறு விழாக்கள், விரதங்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கவை. ஒவ்வொரு காரணத்தோடு இருப்பவை. அதில் ஒன்றுதான் ஸ்ரீ லட்சுமி பஞ்சமி. இது திருமகளுக்கான விழா. பொதுவாக சில விரதங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. சில விரதங்கள் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றன. “லட்சுமி பஞ்சமி”, திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டுத்தினமாகும்.
    இது திருமகளுக்கு உரிய வழிபாடு என்பதால் இதனை “ஸ்ரீபஞ்சமி” என்றும் “ஸ்ரீவிரதம்” என்றும் சொல்கிறார்கள். சித்திரை மாதத்திலே வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும் இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன. ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவனுக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும்.

    அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவன் இருளில் தள்ளப்படுவான். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளி
    வில்லாமல் இருப்பான். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே, திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம் லட்சுமி  எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள். நிலை வாசலில்மஞ்சள் குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம். இந்த லட்சுமி பூஜை செய்வதற்கு வேறுசில தினங்களும் இருக்கின்றன. (நவராத்திரி, தீபாவளி, வெள்ளிக்கிழமை - திருமகள் பூஜைக்கு என்றே  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.) பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனை வரும் நீராடிவிட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாஹனம் பண்ண வேண்டும். அந்தக் கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    “ஓம் ஸ்ரீமகாலட்சுமி ச வித்மஹே விஷ்ணுபத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்” என்ற காயத்திரி மந்திரத்தை தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மஹாலஷ்மி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய  பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்தக் கலசத்திற்கு வஸ்திரம், மாலை, ஆபரணங்கள் முதலியவற்றை அணிவிக்க வேண்டும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நமஹ” என்கிற லஷ்மி குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். ஒருபொழுது விரதமிருந்து, மாலையில் பல்வேறு கனிகளோடு நிவேதனம் படைத்து முறையாக வழிபாடு நடத்தி தீபாராதனை காண்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்று விசேஷமாக திருமகளுக்கு உரிய ஸ்ரீசூக்த பாராயணம், (இது மட்டும் வேத பண்டிதரைக்  கொண்டு செய்யவும்), விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்ரம், லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம்,லட்சுமி அஷ்டோத்திர மந்திரங்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த திருமகளுக்குரிய தெய்வீகப் பாடல்களைப் பாடி, பூஜையை முடித்து கொள்ளலாம்.

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று நம்முடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணராக பாவிப்பது போல, இந்த லட்சுமி பஞ்சமியில், நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு, நல்ல ஆடை அணிகலன்களை அணிவித்து, திருமகளாகவே பாவித்து பூஜையை அவர்களோடு இணைந்து நடத்த வேண்டும். காலையில் விரதமிருந்து மாலையில் இந்த பூஜையைச்  செய்ய வேண்டும்.

    இதனால் கடன் தொல்லைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறவர்கள் இந்தப் பூஜையைச் செய்வதோடு, தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில், லட்சுமி மந்திரத்தைச் சொல்லி, குபேர தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால், பொருளாதார சிக்கல்கள் தீரும். மிக முக்கியமாக அன்றைய பூஜை நிவேதனங்களில் இரண்டு மூன்று இனிப்புப் பதார்த்தங்களைச் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் சிறப்பு.
    குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும் செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும்.
    எப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை விரதம் இருந்து வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும்.

    ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று விரதத்தை தொடங்கி தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும். அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மணைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மணைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.

    அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு ‘மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா’ என்று சொல்லவேண்டும். அடுத்து,

    ‘ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
    தந்தோ சண்முக பிரசோதயாத்’
    என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,
    ‘ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
    தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்’

    என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்ல வேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக் கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

    ஓம் வேலனே போற்றி
    ஓம் வரமருள் தேவா போற்றி
    ஓம் சக்தி மைந்தனே போற்றி
    ஓம் சரவணனே போற்றி
    ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
    ஓம் மங்களனே போற்றி
    ஓம் சிவனார் மகவே போற்றி
    ஓம் வள்ளி மனதோய் போற்றி
    ஓம் அங்காரக் கடிவே போற்றி
    ஓம் குரு குணனே போற்றி
    ஓம் மயில்வாகனா போற்றி
    ஓம் சேவற்கொடி செவ்வேளே போற்றி, போற்றி!

    இப்படி மும்முறை கூறி, ‘சரவணபவ’ எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும். பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி…

    நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
    தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

    என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும் செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.
    நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.
    பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும்தான். அவற்றுள் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலனை நமக்கு வழங்கும். சந்திர பலம் பெற்ற ஓர் அற்புதமான நாள்தான் ‘சித்ரா பவுர்ணமி’.

    நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ர குப்தனை வழிபட்டு கொண்டாடும் விழாவாக இந்தப் பவுர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் மாற்ற சித்ர குப்தன் வழிபாட்டை, சித்ரா பவுர்ணமியில் செய்ய வேண்டும்.

    மாதங்களில் முதல் மாதமாக வருவது, சித்திரை. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகின்றார். நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள்தான், சித்ரா பவுர்ணமி. அப்படிப்பட்ட தித்திக்கும் திருநாள் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2021) திங்கட்கிழமை அன்று வருகின்றது. இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

    சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையிலும் தனிச் சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள், இல்லத்திலேயே விரதமிருந்து சித்ர குப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்தச் சித்ரா பவுர்ணமி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

    பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதான்யம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று எழுதி வைப்பர். சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு, தட்டைப்பயிறு-மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பு நெய்யும் வைக்க வேண்டும்.

    விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும். எந்தக் கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும். இந்த வருட சித்ரா பவுர்ணமி திங்கட்கிழமை வருகின்றது. மனதுகாரகன் சந்திரனுக்குரிய நாளில், சந்திரன் முழுமையடைந்து பிரகாசிக்கும் இந்த தினத்தில் சந்திரனை வழிபாடு செய்வதன் மூலம் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். சித்ரா பவுர்ணமி விரதத்தின் மூலம் திருமண யோகமும் கிட்டும். தித்திப்பான வாழ்க்கையும் அமையும். அன்று மலைவலம் வருவதன் மூலம் மகத்தான பலன் பெறலாம்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
    இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

    ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.

    இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

    பூஜை

    சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது   விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

    சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
    சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

    என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி  ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர்   இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
    சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது.
    சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்து வந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் சனிப்பிரதோஷம் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.  தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.

    இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது. மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும். சிவபெருமானுக்கும் அவரின் வாகனமான நந்திதேவருக்கும் உரிய அற்புதமான நாளில், பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வதும் அபிஷேகப் பொருட்களும் மலர்களும் சமர்ப்பித்து தரிசிப்பதும், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் என்கின்றன புராணங்கள்!

    சனிப்பிரதோ‌ஷத்தையொட்டி சிவன் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள். பிரதோ‌ஷ நாளில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்திலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெறும் பிரதோ‌ஷ விழாவுக்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர் தியாராஜ சுவாமிகள் கோவில் இன்று மாலை 4 மணியில் இருந்து 5.12 மணி வரை நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுகிறது.

    இந்த பிரதோ‌ஷ நிகழ்ச்சி யூ-டியூபில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இருப்பினும் சில சிவன் கோவில்களில் இன்று பிரதோ‌ஷ விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பாடி சிவன் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 5.30 மணி அளவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவில், தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபடும் வகையில் பிரதோ‌ஷ விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ராமபிரானின் தூதராகவும், அவரது முதன்மை பக்தனாகவும் அறியப்படுபவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பல புராணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
    ராமபிரானின் தூதராகவும், அவரது முதன்மை பக்தனாகவும் அறியப்படுபவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பல புராணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் ஆஞ்சநேயர் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுப்பவராக அனுமன் அருள்செய்கிறார்.

    ‘ராமா’ என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னிதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் நைவேத்தியம் படைத்து ஆராதிக்க வேண்டும்.

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

    அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணி வித்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன.
    ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
    ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.

    இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

    விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.

    இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

    ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும். 
    இப்போதிருக்கும் சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக யாரும் வெளியே போகாமல் வீட்டிலேயே ராம நவமிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது .
    பொதுவாக ராமநவமி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ராமரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் வெற்றியாகும், அனால் தற்போது உள்ள சூழ்நிலையில்  கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் செல்ல இயலாது. அதே போல் கோவில்களும் மூடப்பட்டுள்ளது.

    இன்றைய சூழ்நிலையில் துளசியை வாங்கி ராமருக்கு அணிவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதற்காக வெளியில் செல்ல வேண்டாம். நெய்வேதியம் செய்வதற்காக பொருட்களை வாங்குவதற்காக கூட வெளியில் செல்ல வேண்டாம்.

    இதன் விளைவாக நாம் எப்படி நாளை வீட்டிலே பூஜை மற்றும் விரதம் இருக்கலாம் என்று பாப்போம்.

    காலையில் எழுந்து, குளித்து முடித்த பிறகு வீட்டில் உள்ள ராமர் படத்தை வைத்து பால் பாயசம் செய்து துளசி அர்ச்சனை செய்யலாம்.

    உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் பால் பாயசம் செய்து ராமரை வழிபட்டாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. பால் பாயசம் எதற்காக என்றால் ராமர் பால் பாயாசத்தில் தான் அவதாரம் எடுத்தார், ஆகையால் பால் பாயாசம் இதற்கு உகந்தது.

    அதே போல் நாமும் இருவேளை சாப்பிடாமல் இருந்து ராமாயணம், சுந்தரகாண்டம் படிக்கவேண்டும், அப்போது ஸ்ரீ அனுமனையும் மனதில் வைத்து படிக்கச் வேண்டும் எதற்கொன்றால் அனுமனுக்கு கேட்கும் ஆற்றல் உள்ளது.

    பால் பாயாசம் மட்டும் இல்லாமல் கூடவே வடை, பானகம், சக்கரைப்பொங்கல், துளசி தீர்த்தம் அனைத்தும் சேர்த்து கொள்ளலாம்.

    முடிந்தவரை 108, 1008 தடவை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதவேண்டும்.

    காலை முதல் இரவு தூங்கும் வரை ராமர் சிந்தனை இருக்க வேண்டும்.

    இவ்வாறு கடை பிடித்தால் ராமர் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    “ஜெய் ஸ்ரீராம்”
    சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் முக்கிய நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
    1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும்.

    2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.

    3. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    4. சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

    5. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும்.

    6. சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும்.

    7. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    8. சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.

    9. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர்.

    10. மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும்.

    11. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும்.

    12. சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    13. சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    14. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது.

    15. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.

    16. சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    17. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    18. சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    19. சித்திரை குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    20. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

    21. சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    22. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    23. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்த தாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது.

    24. எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    25. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 
    மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய தெய்வமான விநாயகரை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களை காட்டிலும் அதிக சிறப்புகளைக் கொண்ட தினம் சித்ரா பௌர்ணமி தினம். இந்த சித்ரா பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி தினமாகும். விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    சித்திரை தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    சித்திரை மாத சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
    எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால் தீராத நோய் தீரும்.

    திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும்.

    செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலகும்.

    புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும்.

    வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்.

    சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்து வணங்கினால், வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

    எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. மூன்று முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைத்து, வம்சம் விருத்தியாகும். பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    ×