என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். இன்று சிறப்பு மிக்க வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம். இன்று பைரவரை விரதம் இருந்து வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.

    வைகாசி வளர்பிறை அஷ்டமி தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

    மேற்சொன்ன முறைப்படி வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
    இன்று வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.
    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
    சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
    சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை.

    சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். ஆனால் அத்தனை பேரிலும் காரியத்திலும் வீரியத்திலும் வேகம் கூட்டி, அருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
     
    பஞ்சமி திதியில் வாராஹி தேவியை விரதம் இருந்து மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
     
    வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய்  எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாளாம் அன்னை!
     
    மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.
     
    மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.
    இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோ ரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும்.
    ‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ என்று பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள்படும். பதினைந்து திதிகளில், ‘திருதியை’ திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியாக, திருதியை திதி உள்ளது. இந்த திதி சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் பொழுது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று கொண்டாடுகிறோம்.

    அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக செல்வ வளத்தை பெருக்கும் நாளில் அட்சய திருதியைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அது சாத்தியமாகாது. அப்படிப்பட்டவர்கள், அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.

    இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோ ரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். அவர்கள் குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தருவார்கள்.

    விரதம் இருப்பது எப்படி?

    அட்சய திருதியை நாள் அன்று, அதிகாலை எழுந்து நீராட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    மேலும் லட்சுமி நாராயணர், அன்னபூரணி, குபேரன், சிவ-சக்தி ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கான பலன்களைப் பெற்றுத் தரும்.
    அட்சய திரிதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. இன்று அட்சய திருதியை விரதம் இருக்கும் முறை பற்றி அறிந்து கொள்ளலாம். .
    அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அரு கில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக் கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும்.

    மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும். 
    முருகப்பெருமானின் பூரண அருட்கடாட்சத்தை தரும் ஒரு தினமாக சித்திரை கிருத்திகை தினம் வருகிறது. இத்தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    வைகாசி, ஐப்பசி மாதங்களை போல முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். எனவே இந்த சித்திரை மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செந்நிற மலர்களை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இப்படியான முறைகளில் முருகனை சித்திரை மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு வசதியற்ற ஏழை மக்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.
    பிள்ளையார் விரத வழிபாடு மிகவும் எளிமையானது. எந்த காரணத்தை செய்வதற்கு முன்பும் விநாயரை வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
    இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர்.

    இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள்.

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

    விநாயகருக்குரிய 11 விரதங்கள்

    1.வெள்ளிக்கிழமை விரதம்
    2. செவ்வாய்க்கிழமை விரதம்
    3. சதுர்த்தி விரதம்
    4. குமார சஷ்டி விரதம்
    5. தூர்வா கணபதி விரதம்
    6. சித்தி விநாயகர் விரதம்
    7.துர்வாஷ்டமி விரதம்
    8. நவராத்திரி விரதம்
    9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
    10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
    11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

    இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
    சித்திரை மாதத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என்று பார்க்கலாம்.
    * சித்திரை மாதத்தின் முதல் நாள்தான், பூமியை பிரம்மன் படைத்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    * சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

    * சித்ரா பவுர்ணமி அன்று, நெய்தீபம் ஏற்றிவைத்து குபேரனையும், அவரது மனைவி சித்ராதேவியையும் வழிபட்டால் செல்வம் சேரும். சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணியம் சேரும்.

    * சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடை நீங்கும்.

    * சித்திரை மாத மூல நட்சத்திரம் அன்று, லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    * சித்திரை மாத வளர்பிறை திருதியை அன்று, அட்சய திருதியை வருகிறது. இந்த நாளில் சிறிதளவு பொன் அல்லது உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

    * சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில், அன்னாபிஷேகம் நடைபெறும்.

    * சித்திரை மாத திருதியை நாளில்தான் மகாவிஷ்ணு, மச்ச அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

    * சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில்தான், லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக புராணம் சொல்கிறது. அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * சித்திரை மாத சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நதிகளில் நீராடுவது சிறப்பான பலனைத் தரும்.
    அதிக அளவில் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியாக, புரட்டாசி நவராத்திரி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் வசந்த நவராத்திரி இருக்கிறது.
    மாதந்தோறும் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கி, தசமி வரையிலான 10 நாட்களும், அம்பாளை தரிசிப்பதற்கு உகந்த நவராத்திரி நாட்களாகவே கருதப்படும். ஆனால் அம்பாளுக்கு விருப்பமான நவராத்திரியாக 4 நவராத்திரிகள் சொல்லப்படுகின்றன. அவை, ஆடி மாதத்தில் வரும் ‘ஆஷாட நவராத்திரி’, புரட்டாசி மாதத்தில் வரும் ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் வரும் ‘சியாமளா நவராத்திரி’, வசந்த காலமாக கருதப்படும் பங்குனி மாதத்தில் வரும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.

    இதில் அதிக அளவில் மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரியாக, புரட்டாசி நவராத்திரி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் வசந்த நவராத்திரி இருக்கிறது. இந்த நவராத்திரியை வீடுகளில் பொதுமக்கள் கடைப்பிடிப்பது இல்லை என்றாலும், ஆலயங்களில் இந்த நவராத்திரி விழாவின் போது உற்சவங்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மற்ற இரண்டு நவராத்திரிகளும் பெரிய அளவில் கொண்டாடப்படுவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பங்குனியும், புரட்டாசியும் எமதர்மனின் கோரைப்பற்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க்கிருமிகள் பரவும் காலம் என்றும், தெய்வங்களின் அருள் மனிதர்களுக்கு கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அம்பாளை முறையாக வழிபாடு செய்து, 10 நாட்களும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் நன்மைகளைப் பெறலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

    புரட்டாசி மாத நவராத்திரியின் போது அம்பாளை, முப்பெரும் தேவியர்களாக கருதி வழிபடுகிறோம். சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், துர்க்கைக்கு மூன்று நாட்களுமாக 9 நாட்கள் இந்த நவராத்திரி கொண்டாடப்படும். ஆடி மாத நவராத்திரியில் வராகி அம்மனை வழிபடுவார்கள். மாசி மாத நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அந்த வரிசையில் வசந்த நவராத்திரியில், உலகை ஆளும் பராசக்தியை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகை களைக் கொண்டு செய்யக்கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை கொண்டாடுவதற்கான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. அதைப் பார்ப்போம்...

    அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். துருவசிந்து, வேட்டைக்கு சென்ற இடத்தில் சிங்கம் தாக்கி இறந்ததை அடுத்து, அடுத்த மன்னன் யார் என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி முதல் மனைவியான மனோரமாவின் மகன் சுதர்சனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித், தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்துக்கு முடிசூட்ட நினைத்தான்.

    இதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இவருக்குமான போரில் வீரசேனன் கொல்லப்பட்டான். மனோரமாவும், சுதர்சனும் உயிருக்கு பயந்து காட்டிற்குள் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினர். அயோத்தியின் அரச பொறுப்பு யுதஜித் வசம் வந்தது. அவன் தன் படையை அனுப்பி, சுதர்சனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். சுதர்சனும், அவனது தாயாரும் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து, அவர்களை கைது செய்ய யுதஜித் முன்வந்தான். ஆனால் அதற்கு பரத்வாஜ முனிவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரையும் கைது செய்ய நினைத்தான், யுதஜித். அப்போது அவனோடு இருந்த அமைச்சர்கள், “முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல” என்று கூறியதை அடுத்து, தன் நடவடிக்கையை கைவிட்டு, மீண்டும் நாட்டிக்குச் சென்றான்.

    ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை, பரத்வாஜ முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சன், ஒரு கட்டத்தில் தவ நிலைக்குச் சென்றான். அந்த தவத்தால், அவன் முன்பாக தோன்றிய அம்பாள், பல சக்தி வாய்ந்ததும், அழிவில்லாததுமான ஆயுதங்களை அவனுக்கு வழங்கினாள்.

    ஒரு முறை பனாரஸ் என்ற நாட்டின் ஒற்றர்கள், பரத்வாஜ முனிவர் ஆசிரமம் வழியாகச் சென்றபோது, சுதர்சன் பலவிதமான ஆயுதங்களை லாவகமாக கையாள்வதைக் கண்டனர். அது பற்றி பனாரஸ் அரசனிடம் சொல்லி, இளவரசியை சுதர்சனுக்கு மணம் முடிக்கலாம் என்று கூறினர். பனாரஸ் மன்னனும், சுதர்சனை முறைப்படி அழைத்துபேசி திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

    இதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது சுதர்சன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை வெற்றிகொண்டான். போருக்குப்பின் சுதர்சன்- சசிகலா திரு மணம் நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர். இதனால் மகிழ்ந்த பராசக்தி, அவர்கள் முன்பாக தோன்றி, “என்னை வருடந்தோறும் வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் அனைத்தும் மறைந்து, நன்மைகள் நடைபெறும்” என்று கூறி மறைந்தாள்.

    திருமணத்திற்குப்பின், பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி அயோத்தியின் அரசனாக சுதர்சன் முடிசூட்டிக்கொண்டு, தன் மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கடைப்பிடித்து வந்தான். இப்படி தோன்றியதுதான் வசந்த நவராத்திரி என்று சொல்லப்படுகிறது.
    பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
    நவக்கிரகங்கள், உலக இயக்கத்திற்கு அடிகோலுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த நவக்கிரகங்களில் தலைமை கிரகமாக இருப்பவர், சூரியன். இவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. சூரியன், ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என்று, 12 மாதங்களும் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்கிறது. அதன்படி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கு முதல் நாளே சித்திரை மாத பிறப்பாக உள்ளது. ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரையை முதன்மை படுத்தியே, தமிழ் வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது.

    சித்திரை மாதம் தொடங்கும் முதல் நாளை, ‘சித்திரை விஷூ’ என்றும் அழைப்பார்கள். ‘விஷூ’ என்பதற்கு ‘இரவும் பகலும் சமமானது’ என்று பொருள். சித்திரை மாதத்தில்தான் முக்கனிகளில் ஒன்றான மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதே போல் இறைசக்தி கொண்டதாக கருதப்படும் வேப்ப மரத்திலும் பூக்கள் பூக்கத் தொடங்கும். இப்படி இனிப்பும், கசப்பும் கொண்ட மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் பூப்பது போலவே, மனித வாழ்விலும் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்துதான் வரும். அதை சந்தித்து சமாளிப்பதற்குத்தான் இறைவழிபாடு நமக்கு உதவி செய்கிறது. சித்திரை வருடப்பிறப்பு நாளில், இறைவனை நம் மனதாலும், மெய்யாலும் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் அந்த வருடத்தில் நாம் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களும், தங்கு தடையின்றி நிறைவேறும். அதோடு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பிறவி துன்பம் நீங்கும்.

    சித்திரை மாதம் முதல் நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ‘மருந்து நீர்’ கொண்டு நீராடுவார்கள். பின்னர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மனதார வணங்க வேண்டும். அதோடு ஆதரவற்றவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும், இயலாதவர்களுக்கும் தான தர்மங்களைச் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்வதால், நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது நமக்கு பிரகாசம் நிறைந்த வாழ்வை அருளும்.

    சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.

    பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
    ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக ஏற்படும் சிரமங்கள் அகல ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து செய்ய வேண்டி துர்க்கையை வழிபடும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக ஏற்படும் சிரமங்கள், பிரச்சனைகள் நீங்க துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. மேலும், சிக்கல்கள் தீர ஒவ்வொரு கிழமைகளிலும் துர்க்கை வழிபாடு செய்தால் வேண்டும். ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம்.

    ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள் : திங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய் : ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன் : மதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன் : வியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி : வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி : காலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.
    பஞ்சமி திதியான இன்று வாராகி அம்மனை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள். குறிப்பிட்ட பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

    எல்லோரும் பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவருக்கான விஷயங்கள்( உதாரணமாக கல்விபயில, தொழில் தொடங்க, திருமணம் செய்ய) என புதிதாக தொடங்கும் எந்த ஒரு செயலிலும் ஒருவித தடை, தாமதம் , கஷ்டம் ஏற்படும்.

    இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று 5 எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்ணெய் சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துகொண்டே வழிபட வேண்டும்.

    நிவேதனமாக பூண் கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவவை நிவேதனமாக படைக்கலாம்.

    ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ... என்ற மந்திரத்தை சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்

    குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
    ×