என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும்.
    விக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையான் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.

    அற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.

    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.

    ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.

    நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.

    அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

    ‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.

    விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.

    கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.

    துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.

    ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.

    எனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.
    ஆடி கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள்- சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட வேண்டும்.
    சஷ்டி திதியில் வருவது சஷ்டி விரதம்! வாரத்தில் வருவது சுக்கிர விரதம். நட்சத்திரத்தில் அமைவதுதான் கிருத்திகை விரதம். கார்த்திகை நட்சத்திரம், கந்தப் பெருமானுடன் முழுதும் தொடர்புடையது.

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர் என்று அருள் புரிந்தார். கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இர வில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதி காலை நீராடி முருக வேலை வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று பகலில் உறங்குதல் கூடாது. விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    கிருத்திகை விரதம் மூன்று நாட்கள் தொடர்புடையது. கிருத்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, கார்த்திகை அன்று மைகறை படிந்த இருள் மெல்ல மெல்ல அகலும் வைகறைப் போதில் நீராடி, உலர்ந்த ஆடை உடுத்தி, தெய்வக் குழந்தை கந்தனை சிந்தனை செய்து மகிழ வேண்டும்.

    கந்த புராணம் உள்ளிட்ட முருகன் துதி நூல்களை ஓத வேண்டும்; அன்று முழுதும் உண்ணவும் கூடாது! உறங்கவும் கூடாது! அடுத்த நாள் அதிகாலை “உரோகிணி’’ நட்சத்திரத்தில் எழுந்து இனிய புனலாடி, மனமார வள்ளி மணவாளனை நினைந்து, பின் “பாரணை’’ செய்ய வேண்டும்.

    கிருத்திகை விரத சம்பிரதாயம் இவ்வாறு அமைந்துள்ளது. ஆனால் தற்போது விரைந்து செல்லும் காலநடையில், கிருத்திகை விரதம் ஒரு நாள் மட்டுமே பின்பற்றப்படுகிறது.

    “உத்தராயண புண்ய காலம்’’ என்று போற்றப் பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே “ரத சப்தமி’’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே “தை கிருத்திகை’’ ஆகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது “தை’’ மாதம்.

    பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்என்பது. எனவே தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்’’ எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது.

    இந்தப் பழமொழி, பொங்கலோடும் தொடர்புடையது! தலங்கள் தோறும் தை கிருத்திகை மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை “உபரி கிருத்திகை’’ என்பார்கள். கிருத்திகைகளில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை நாள்கள் காட்சியும் மாட்சியுமுடையனவாகும்.


    ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. “அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்’’ என்பார்கள். திருச்செந்தூரில் கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார்.

    திருவண்ணாமலை குமரன் கோயிலில், கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன. ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம்.

    ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிருத்திகை தினத்தில் கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம் ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, சுடராகப் பொலியும் ஆடி கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் - சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட வேண்டும்.
    ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். இன்று கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

    தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்த மானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.

    தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல் லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் வரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

    இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
    ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். இன்று கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தசாவதாரத்தில் 9-வது அவதாரம் ஸ்ரீகிருஷ்ண அவதாரம். ஸ்ரீகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். வைணவத் தலங்களில் இந்த விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற திங்கட்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகள், அவதார நோக்கம், அருளாற்றல் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    விரதம் இருப்பது எப்படி?

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
    கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.
    14-8-2017 கிருஷ்ண ஜெயந்தி

    கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.

    கம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.

    7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

    எட்டாவதாக கிருஷ்ண பகவான் தேவகியின் கருவில் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் இருந்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நீங்களோ, பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கூறினீர்கள்.



    அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்துள்ளேன். இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது. நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான்.

    கம்சனிடம் இருந்து உங்களை விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.

    கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை உலகம் முழுவதும் மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த புண்ணிய நாளில் கிருஷ்ணரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மேலும் அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது சிறப்பு தரும். அதனை கண்ணன் நள்ளிரவில் வந்து ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.

    இதற்காகவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை அறை வரை, கண்ணனின் கால் தடங்களை பதித்து வைப்பார்கள். பகலில் விரதம் இருந்து, இரவில் வழிபாட்டை முடித்தபின் உணவு உண்பது உத்தமம். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து பஜனை செய்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணியவை ஈடேறும்.
    ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகக்களை கொண்ட அந்த குழந்தையை ததன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது. இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித் ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார்.

    பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல; சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால், இந்த கோவிலை ‘மும்புரி ஊட்டிய தலம்’ என்கின்றனர்.

    இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள் பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டி கொள்கிறார்கள்.
    ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டா ளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

    இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள்.
    ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

    ஆடி மாதம் விரதமிருந்து கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக்கோள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் ஆடி மாதம் விரதமிருந்து துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டடு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
    சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.
    விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனைத்து விநாயகர் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.

    ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது சிறந்த நற்பலன்களை தரும்.

    ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

    தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

    விநாயகரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும்.

    சாய்பாபாவை ஒரு மனதாக நினைத்து ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து பாபாவை வழிபாடு செய்து வந்தால் நாம் நினைத்தவை கண்டிப்பாக நிறைவேறும்.
    சாய்பாபாவின் இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம்.

    விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

    எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்

    காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இருந்து இந்த விரதத்தை செய்யவே கூடாது.

    பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்

    மஞ்சள் நிறமலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை ஸ்மரணை செய்யவும்.

    முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

    வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.



    விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

    விரத நிறைவு விதிமுறைகள் :

    1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.

    2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).

    3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.

    4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.
    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும். எந்த விரதம் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    * ஆடி மாதம் முழுவதும் விரதமிருந்து மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    * ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    * ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    * ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பெரியவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்காரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    * ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    * ஆடிப்பெருக்கு தினத்தன்று விரதமிருந்து காவிரி ஆற்றில் பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.,

    * ஆடி மாதம் நாக சதூர்த்தி விரதம் மேற் கொண்டால் குழந்தை பாக்கிய தடை நீங்கும்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
    உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
    இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அவை.

    * உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
    * தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
    * பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
    * எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
    * பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

    * மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
    * ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
    * ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
    * ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

    * ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
    * ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
    * இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
    * முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

    * மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
    * வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

    இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
    சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ‘ஆடித்தபசு’ எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பியிருக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றிலிருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள். அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

    மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்ட லம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள். ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

    உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ‘ஆடித்தபசு’ எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை விரதமிருந்து 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

    பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

    இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.
    சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். அதுவும் ஆடிமாதம் வரும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதுவும் ஆடிமாதம் வரும் சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாத சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

    சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.



    ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்… சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

    நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது. நஞ்சை உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றிய பின்னர், மயக்கமுற்ற நிலையில் அன்னை மடி மீது சாய்ந்திருக்கின்ற தோற்றம்…

    வேறெங்கும் காண இயலாது. திருவள்ளூர் அருகில் ஊத்துக்கோட்டையிலிருந்து 8 கி.மீ தூரத்தில், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இத்தலத்தில் திருச்சடாரி சூட்டப் பெறுவதும் மற்றொரு சிறப்பு.

    ×