என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தனர். விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.
    விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.

    ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

    இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.
    அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆவணி தேய்பிறை அஷ்டமி ஸ்தானுஷ்டமி ஆகும். இந்த நாளில் தான் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தார். இத்திருநாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    வடமாநிலங்களில் இத்திருநாளை ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடுகிறார்கள். வீடுகளிலும் பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளை கோலாகமாக கொண்டாடுவார்கள்.
    மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

    வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

    ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

    ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு விரத வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

    ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரட்சாபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடமும் நல்லுறவை வளர்க்கும் திருநாள்.

    புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர விரத பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.



    ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லட்சுமி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விசேஷம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

    கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

    மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

    தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நட்சத்திரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

    மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி விரதமிருந்து பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

    பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியில் சிறப்பு.
    கால பைரவாஷ்டமி தினமான இன்று பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.



    இவருக்கு பவுர்ணமி தினத்திற்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் 5 விளக்குகளில் 5 நல்லெண்ணெய், இலுப்பு எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தனித்தனியாக தீபம் ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்நாளில் நாமும் பைரவரை விரதமிருந்து வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.
    பெண்கள் அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர்.
    விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை.

    விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை.

     வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து உங்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து விரதத்தை கடைபிடித்து வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
    சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.
    சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது.

    சாய்பாபாவை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் மிக, மிக எளிதானது. சுலபமாக கடை பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதனால் 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    பக்தர்கள் மத்தியில் பரவியுள்ள சாய்பாபா விரத கதை வருமாறு:-

    குஜராத் மாநிலத்தில் ஒரு ஊரில் மகேஷ்-கோகிலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். மகேஷ் சற்று முரட்டுக்குணம் கொண்டவர். கோபம் வந்து விட்டால் வரை முறை இல்லாமல் பேசுவார்.

    சிடுமூஞ்சியாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் அவர் சண்டையிட்டார். இதனால் அவர் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நல்ல உறவு இல்லாமல் இருந்தது. இது மகேஷ் செய்து வந்த வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் அவர் வருமானம் இல்லாமல் தவித்தார். குடும்பத்தில் அமைதியே இல்லாமல் போய்விட்டது. மகேஷ் குணத்தால் குழப்பம் அதிகரித்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர்கள் வீட்டு முன்பு சாது ஒருவர் வந்து நின்றார். அவர் கோகிலாவிடம், சாதம், பருப்பு கேட்டு வாங்கினார். பிறகு அவர், ஆசீர்வாதம் செய்தார்.

    அப்போது கோகிலா, “என் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் உள்ளது” என்று கூறினார். அவர் கண்ணீர் விட்டதால் இரக்கப்பட்ட அந்த சாது, “சாய்பாபாவை வேண்டிக் கொண்டு 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நீ நினைத்தது நடக்கும்” என்றார். அதோடு 9 வாரம் வியாழக்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.



    மேலும், “இந்த விரதம் கலியுகத்துக்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதத்தை தூய மனதுடன், நம்பிக்கையோடு யார் இருக்கிறார்களோ, அவர்களது அத்தனை ஆசைகளையும் பாபா நிறைவேற்றி வைப்பார். ஆனால் விரதம் இருப்பவர்கள் சாய்பாபா மீது உறுதியான நம்பிக்கையும், பொறுமையும் வைக்க வேண்டியது மிக, மிக அவசியம்” என்றும் தெரிவித்தார்.

    அந்த சாது கூறியபடி கோகிலா 9 வாரம் வியாழக்கிழமை விரதம் இருந்தார். அதன் பிறகே மகேஷ் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் குணம் மாறியது. அவர் கடையில் வியாபாரம் அதிகரித்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

    இந்த நிலையில், கோகிலாவின் உறவினர்கள் சூரத்தில் இருந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக படிப்பது இல்லை என்றும் இதனால் தேர்வில் தோற்று விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டனர்.

    அவர்களிடம் கோகிலா தான் மேற்கொண்ட 9 வார வியாழக்கிழமை விரதம் பற்றி கூறி அந்த விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றார். சூரத் குடும்பத்தினரும் அந்த விரதத்தை கடைபிடித்தனர். 9 வார முடிவில் அவர்களின் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது.

    இதற்கிடையே சூரத் குடும்பத்தினர் மூலம் தோழி ஒருவர் குடும்பத்தினருக்கு சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் தெரிய வந்தது. அவர்களுக்கும் வெற்றி கிடைத்தது. சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் இப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக பரவி நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் இரண்டற கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விரதம் இருப்பவர்கள் 9 வாரம் வியாழக்கிழமையும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருக்க வேண்டும். பழவகைகள், குளிர் பானங்கள் சாப்பிடலாம் என்றெல்லாம் விரதத்துக்கு விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர். இது தவிர மேலும் சில விதிமுறைகள் உள்ளன.

    ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் துணியை விரித்து, சாய் பாபா படத்தை வைக்க வேண்டும். சந்தனம் பூச வேண்டும். மஞ்சள் நிறப்பூ சாத்த வேண்டும். பிறகு பாபாவுக்கு விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். இதையடுத்து பாபாவின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.



    இந்த விரதத்தை ஆண்-பெண் இரு பாலரும் கடை பிடிக்கலாம். விரதம் இருக்கும் 9 வியாழக்கிழமைகளில் காலை- மாலை இரு நேரமும் ஆலயத்துக்குச் சென்று பாபாவை வழிபடுவது நல்லது. வெளியூர் பயணம் செய்ய நேரிட்டாலும் இந்த விரதத்தை தொடரலாம்.

    பெண்களுக்கு விலக்கு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டால் அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. இப்படி 9 வார விரதத்துக்கு சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    9-வது வாரம் விரதம் நிறைவு பெறும் போது, 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் நிறைய பேரால் நேரடியாக உணவு அளிக்க முடிவதில்லை.

    அத்தகைய நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம் என்று விரத விதிமுறைகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகளின் படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும் என்பது சாய் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    சில பக்தர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நாள் முழுக்க பாபா நினைவுடன் இருக்க முடிகிறது. எனவே பாபாவை நெருங்குவதற்கு இந்த விரதம் உதவியாக இருக்கிறது என்கிறார்கள்.

    ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விரதம் இருங்கள் என்று பாபா சொன்னதே இல்லை. எனவே பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது.
    மாத சிவராத்திரி தினங்களில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும். அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.

    அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

    அன்றையதினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும். முக்தி கிடைக்கும்.

    சிவராத்திரியில் யோக சிவ ராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவ ராத்திரி, மாத சிவ ராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு. மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும். அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
    பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதம் அனந்த பத்மநாப விரதமாகும். இதை அனுஷ்டிப்பவர்களுக்கு செல்வம் பெருகும்.
    ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் இந்த விரதம் வரும். பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதமாகும் இது. இதை அனுஷ்டிப்பவர்களுக்கு செல்வம் பெருகும்.

    அனந்த பத்மநாப விரத தினத்தன்று பெருமாள் படத்தை வைத்து முறைப்படி பூஜை, பாராயணம் முதலியன செய்ய வேண்டும். இனிப்புப் பண்டங்களைச் சமர்ப்பிக்கலாம். தூப நைவேத்தியங்கள் உகந்தது.

    பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் தோய்த்து பத்மநாப சுவாமியிடம் வைத்து பின் எடுத்து இடது மணிக்கட்டில் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டு அன்னதானம் செய்ய வேண்டும். பின்னர் ஆயுள் முழுவதும் அனுசரிக்கலாம். இந்த விரதம் அனுஷ்டிப்போர் இழந்த செல்வங்களையும், சக்திகளையும் மீண்டும் பெறுவார்கள்.
    அன்னாபிஷேகத்தை விரதம் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
    3-11-2017 அன்னாபிஷேக விழா

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

    அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

    தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.

    இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.



    சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

    சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

    சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.



    இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

    அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

    ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.
    ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும். ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
    ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமியாகும். இது ஆண்டுதோறும் சித்திரை மாதம் நவமியும் புனர்வசு நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளில் வரும்.
    ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும். பத்து நாட்கள், முன் பத்து எனப் பெறும். பிறந்த தினத்திலிருந்து கொண்டாடப்பெறும் பின் பத்து நாட்கள், பின் பத்து எனப்பெறும். சில வைணவத் தலங்களில் இத்தினங்களை முன்பத்து, பின்பத்து என்று மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

    இந்நாட்களில் விரதம் இருந்து ராமாயணம் படிப்பதும், சொற்பொழிவுகள் செய்வதும் உண்டு. பூஜைகளும் நிகழும். ராமாயணம் படித்துப் பட்டாபிஷேகம் செய்து ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து பூர்த்தி செய்வார்கள்.

    பானகம், நீர்மோர், சந்தனம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வினியோகங்களாக அமையும். விளக்கு ஏற்றும்பொழுது நாராயணனுக்கு உரிய நல்லெண்ணை ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும்.

    ராம நவமி விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். இதுதவிர புரட்டாசி மாதத்திலும் ராமாயணம் முழுவதையும் ஒரு மாத காலத்திற்குப் படித்துப் பொருள் சொல்வதுண்டு.
    முருகனுக்கு உகந்த விரதங்களுள் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று இந்த விரத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்க்கலாம்.
    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர்.  

    கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர்.

    ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக்கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,

    “நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
    தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”

    என்கிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.
    திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.
    திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.

    ஞாயிற்றுக்கிழமை : (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண விரதமிருந்து மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் (4.30--6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

    திங்கட்கிழமை : (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

    செவ்வாய்க்கிழமை : (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.



    குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

    வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

    புதன்கிழமை : (மிதுனம், கன்னி ராசிக் காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

    வியாழக்கிழமை : (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

    வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

    சனிக்கிழமை : (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.
    ×