என் மலர்tooltip icon

    மற்றவை

    • ‘எச்சரிக்கை சங்கிலி’ என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது.
    • எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும்.

    வெறும் ஒரு சங்கிலியைப் பிடித்து இழுத்து அத்தனை பெட்டிகள் கொண்ட ரெயிலையும் நிறுத்த முடிவது எப்படி?

    ரெயில் என்ற தொடர் பெட்டிகள், எஞ்சின் என்ற இயந்திரத்தால் இழுக்கப்படுகின்றன. அதை இயக்கும் ஓட்டுநர் எஞ்சின் பெட்டியில் இருப்பார். தொடர் வண்டி சரியான பாதையில் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க கடைசி பெட்டியில் கார்டு எனப்படும் பாதுகாவலர் இருப்பார். ஆனால் இடையிலுள்ள பெட்டிகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு அவசரம் ஏற்பட்டாலோ என்ன செய்வது? இதன் காரணமாகத்தான், ஒவ்வொரு பெட்டியிலும் 'எச்சரிக்கை சங்கிலி' வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஆபத்து நேரங்களிலும், உரிய காரணத்துடனும் ரெயில் நிறுத்தப்படலாம். ஆனால் விளையாட்டுக்காகவோ, காரணமின்றியோ ரெயில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    சரி, ஒரு சங்கிலியின் மூலமாக ரெயில் எப்படி நின்றுவிடுகிறது?

    'எச்சரிக்கை சங்கிலி' என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது. இதற்காக எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும். முதன்மை காற்றுக் கொள்கலனுக்குச் செல்லும் காற்றை இந்த கம்ப்ரெசர் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். அந்த கொள்கலனில் இருந்து அனைத்து பெட்டிகளுக்கும் முதன்மை பிரேக் குழாய் செல்லும். ஒவ்வொரு பெட்டியின் கீழும் உள்ள பிரேக்கை கட்டுப்படுத்தும் துணை காற்றுக் கொள்கலன்களுக்கும் இந்த கம்ப்ரெசரே காற்றை அனுப்புகிறது. ஒவ்வொரு பிரேக் கருவியிலும் பிரேக்கை நிறுத்தும் வகையில் அழுத்தப்பட்ட காற்று பிரேக் சிலிண்டருக்குச் செல்வதை, ஒரு சிறிய வால்வு தடுத்துக் கொண்டிருக்கும். இதனால் சக்கரத்தை நிறுத்தும் வேலையை பிரேக் சிலிண்டர்கள் செய்வதில்லை.

    ஆனால் அதேநேரம் ஆபத்து எச்சரிக்கை சங்கிலியை யாராவது பிடித்து இழுத்தால், அது முதன்மை பிரேக் குழாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக, வால்வு பிஸ்டன் திறந்து பிரேக் சிலிண்டருக்குள் அழுத்தப்பட்ட காற்று வரும். இதனால் பிரேக் பிஸ்டன் இழுக்கப்பட்டு சக்கரங்களின் மீது பிரேக் கட்டை அழுத்த, சக்கரங்கள் நின்று விடுகின்றன. ஒட்டுமொத்த ரெயிலும் நின்றுவிடுகிறது.

    உடனடியாக எஞ்சின் ஓட்டுநரும், கார்டும் எந்தப் பெட்டியில் சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அந்தப் பெட்டிக்கு ஓடி வருவார்கள். ஏன் சங்கிலியைப் பிடித்து இழுத்தார் என்று சம்பந்தப்பட்டவர் விளக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம்தான்.

    -அருண்நாகலிங்கம்

    • ஒரு ஆண்டில், 4 மாதங்கள் மட்டும் சூரிய எழுகைக்குச் சற்றுமுன் புதன் கீழ்த்திசையில் எழுவதால் அது நம் கண்களுக்குச் சில மணித்துளிகள் மட்டும் தெரியும்.
    • சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!

    ஒரு ஏழை பொன் (தங்கம்) வாங்க நினைத்தால், அவனால் முடிவதில்லை. காரணம் அவன் வாங்கும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் அதன் விலை. எனவே பொன் அவனுக்குக் கிடைக்காது !

    ஆனால் அவன் விரும்பும் ஒரு செயலை நிறைவேற்றிக் கொள்வதற்கு புதன்கிழமை தான் நல்ல நாள் ; புதன் தான் வேண்டும் என்று நினைத்தால் அவனுக்குப் புதன் கிடைத்துவிடும்.

    அப்படியென்றால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு என்ன பொருள் ?

    சூரியக் குடும்பத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கோள்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். புதனும் அவற்றில் ஒன்று !

    கோள்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவற்றின் ஒளி (வடிவம்) சூரிய ஒளிக்கு முன் எடுபடுவதில்லை. புதன் 29 பாகைகளுக்கு மேல் விலகிச் செல்வதில்லை என்பதால் அது சூரியனுக்கு அருகிலேயே எப்போதும் இருக்கிறது. எனவே அதன் ஒளி சூரிய ஒளியால் அமுக்கப்பட்டு விடுகிறது. ஆகையால் புதனை நாம் பார்க்க முடிவதில்லை!

    ஒரு ஆண்டில், 4 மாதங்கள் மட்டும் சூரிய எழுகைக்குச் சற்றுமுன் புதன் கீழ்த்திசையில் எழுவதால் அது நம் கண்களுக்குச் சில மணித்துளிகள் மட்டும் தெரியும். சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!

    ஆண்டின் கடைசி 4 மாதங்களில் சூரிய மறைவுக்குச் சற்றுப் பின்பே புதன் மறைவதால் மேற்றிசையில் ஒருசில மணித் துளிகள் மட்டும் புதன் நமது கண்களுக்குத் தெரியும் !

    ஒரு ஆண்டில் நான்கு மாதங்களுக்குப் புதனைப் பார்க்கவே முடியாது. காரணம் புதனின் உலா சூரியனுடனேயே நிகழ்கிறது; எட்டு மாதங்களில் சில நிமிடங்களுக்கு மட்டுமே பார்க்கலாம். அந்த சில நிமிடங்களிலும் மேகம், பனி, மழை போன்றவை குறுக்கிட்டால் வாய்ப்பிருந்தும் பார்க்க முடியாது !

    இதனால் தான் பணமிருந்தால் பொன் கூட கிடைத்துவிடும். ஆனால் புதன் கிடைப்பது அரிது என்னும் பொருளில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று நம்முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் !

    -வை.வேதரெத்தினம்.

    • குரு, சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் இளமையில் காதல் வயப்படுவார்.
    • மீனத்தில் மட்டும் குரு, சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது குருவுக்கும் ஆட்சி வீடு!

    ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை இரண்டு அணிகள் உண்டு!

    குரு பகவான் தலைமையில் உள்ளவர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது.

    சுக்கிரன் தலைமையில் இருப்பவர்கள் சனி, புதன், ராகு.

    குரு பகவான் அருளணியை சேர்ந்தவர்!

    சுக்கிரன் பொருளணியை சேர்ந்தவர்!

    குரு, ஞானம், வாக்கு, ஆசிரியர், ஆன்மிகம் போன்ற விசயங்களுக்கு அதிபதி!

    சுக்கிரன் அதற்கு நேர் எதிர் அதாவது சுகபோகம், காமம், காதல், உல்லாசம், ஆடம்பரம், கலை, நாட்டியம், நடனம் இவற்றிற்கு அதிபதி.

    இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்ளாது!

    சுக்கிரன் குரு வீட்டில் இருந்தால் குரு ரொம்ப இடைஞ்சல் செய்வார். ஆனால் மீனத்தில் விதிவிலக்கு உண்டு அது சுக்கிரனின் உச்ச வீடு!

    ஆனால் குரு சுக்கிர வீடுகளில் இருந்தால் சுக்கிரன் இடைஞ்சல் செய்ய மாட்டார். ஏனென்றால் குரு எதிரியாக இருந்தாலும் குருபகவான் மேல் சுக்கிரனுக்கு ஒரு மரியாதை இருக்கும்.

    குரு, சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் இளமையில் காதல் வயப்படுவார்.

    ஆனால் மீனத்தில் மட்டும் குரு, சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது குருவுக்கும் ஆட்சி வீடு!

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம்.
    • வைணவ வழிபாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

    நம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

    1. ஏலம்,

    2. இலவங்கம்,

    3. வால்மிளகு,

    4. ஜாதிப்பத்திரி,

    5. பச்சைக் கற்பூரம்

    இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கும் சேர்க்கவும்.

    முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டிலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

    இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

    இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழிபாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

    இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

    இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும்.

    -அகரமுதல்வன்

    • காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.
    • திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக்கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்லர். கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர். கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரைக்கும் யாருக்கும் பயப்படாதவர்; பணிந்து போகாதவர். அவரை எந்த நடிகரோடும் ஒப்பிடவே முடியாது.

    தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றி விழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் 'வியாபார ரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்.

    1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார் ராதா.

    நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

    அப்போதைய அரசு ராதாவின் நாடகங்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்குமாறு சிஐடிகளை அனுப்பியது. அவர்களும் நாடகம் ஆரம்பிக்கும் முன்னரே முதல் வரிசையில் வந்து குறிப்பெடுக்க அமர்ந்தார்கள். "எவன்டா அவன்? கவர்மெண்ட் ஆளு மாதிரி தெரியுது. போய் டிக்கெட்டு வாங்கியாரச் சொல்லு. முன்வரிசை டிக்கெட்15 ரூபாய்" தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பினார் ராதா. அவரும் சிஐடிக்களிடம் சொன்னார். அவர்களும் டிக்கெட் வாங்கி வந்து பின் நாடகம் பார்த்தனர்.

    மறுநாள் கமிஷனர் அருள் ராதாவைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். டிபார்ட்மெண்ட்டே அவரைப்பார்த்து தொடை நடுங்கிய காலம் அது. "நாடகத்துக்கு வந்த சிஐடிக்களை 15 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர சொன்னீங்களா?"

    " ஐயா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. சர்க்காருக்குப் புரியணும். நாங்க கலைஞர்கள். நாங்க பண்றது வியாபாரம். அந்த ஸ்தலத்திற்கு யார் வந்து உட்கார்ந்தாலும் காசு கொடுத்துத்தான் ஆகணும்"

    கமிஷனருக்கு ராதாவின் வாதம் நியாயமாகப்பட்டது. அன்றும் நாடகம் நடந்தது. இரண்டு சிஐடிகள் வந்தார்கள். முன்வரிசை டிக்கெட்டை 100 ரூபாய் ஆக உயர்த்தினார் ராதா. 200 ரூபாய் கொடுத்த பின்பே அவர்கள் உள்ளே நுழைய அனுமதித்தார் ராதா.

    குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.

    " பெரியார் வந்திருக்கார். கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க"

    " எதுக்கு?"

    " நாடகம் பார்க்கத்தான்"

    " பார்த்துட்டுப் போகட்டும்"

    " உட்கார வைக்க இடம் இல்லையே"

    " அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்"

    " இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க.." "என்னை விடப் பெரியவங்களா வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை"

    மேனேஜருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே 'இழந்த காதல்' என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.

    இடைவேளை நேரம்... மேடையேறினார் அண்ணா... "அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி" என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

    -அம்ரா பாண்டியன்

    • கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான்.
    • கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது.

    கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு கொல்லிமலை.

    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள். மலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

    கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். என்னதான் வீரிய ஒட்டுரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் ஆட்டிப்படைக்கும் சூழலில், இங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சமை ஆகிய இந்த 3 சிறுதானியங்களை பல நூறு வருடங்களாக பல நூறு ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள்.

    பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் 'பழமைப்புரட்சி' செய்து வருகிறார்கள் இந்த மக்கள். ஏரு பிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளை வைத்து தம்பு அடிப்பது, தூற்றுவது, மூட்டை பிடிப்பது, வீடு கொண்டு வருவது என்று அனைத்து விவசாயப் பணிகளையும் மனிதர்களும், மாடுகளுமே பார்த்து கொள்கின்றனர்.

    கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி, மிளகுகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மிளகு அறுவடை சீசன் மே மாதம் தொடங்கும்.

    இதேபோல் காபி சீசனும் மே, ஜீன் மாதங்களில் தொடங்கும். கொல்லிமலையில் விளையும் காபி மிகவும் சுவை மிக்கது. காபி சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கொல்லிமலைக்கு வந்து குவிகின்றனர். கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காய்த்து தொங்கும் அன்னாசி மற்றும் பலாப்பழ வகைகள், குறிப்பாக இங்கு விளையும் அன்னாசி பழங்கள் ருசியானது.

    சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொல்லி மலையில் இருந்துதான் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அன்னாசி பழங்களை வாங்கி சுவைக்க மறப்பதில்லை. இதேபோல், கொல்லிமலை பலாப்பழங்களும் சுவைமிக்கது.

    கொல்லிமலை கிராமங்களில், சீத்தாப்பழ மரங்கள் உள்ளன. மலைவாழ் மக்களிடம் இருந்து பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள ஊா்களில் விற்பனை செய்கின்றனா். கொல்லிமலை சீத்தாப்பழங்கள் சுவைமிகுந்தவை என்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. கொல்லிமலையின் ஆலத்தூர், ஆரியூர் மற்றும் வேள்ப்பூர் கிராமத்தில் அதிகளவில் அன்னாசி பழங்கள் விளைகின்றன.

    இந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலர் இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம்.

    இதேபோல், ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலைமுடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக்கூடாது, அந்த சாறுபட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.

    கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால் வாழை, இதன் பழத்தை 2 மண்டலம் (90 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்கள் என கூறுகின்றனர்.

    இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும்பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த அபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆக, இதுபோன்ற அபூர்வ மூலிகைகள் ரகசியங்கள் சொல்லத் தீராது.

    இங்கு விளையும் கொல்லிமலை சீனிமிளகாய் மானாவாரியில் இங்கு மட்டும்தான் விளைகிறது. மருத்துவக்குணம் கொண்ட வல்லாரை உள்பட கொல்லிமலையில ஏராளமான மூலிகைச்செடிகள் இயற்கையாக விளைகின்றன. பெயர் தெரியாத அநேக அரியவகை மூலிகைகளும் இங்கு உள்ளன.

    கொல்லிமலையின் மேல் உள்ள மணப்பாறை நாடு, விரவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நாவல் மரங்கள் உள்ளன. மற்ற பகுதி நாவல் பழங்களை விட கொல்லிமலையில் மூலிகை தண்ணீரில் விளைகின்ற நாவல் பழங்கள் சுவை மிகுதியாக இருக்கும். நாவல் கொட்டைகள் சர்க்கரை நோய்க்கு சிறந்தது என்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும், பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை... அதன் ரகசியமும் இதுதான். ஆயுளைக்கூட்ட ஒரு முறை அந்த அதிசய மலைக்கு போய்வரலாமே...

    • மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
    • மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும்.

    திருவள்ளுவர் ஓரிடத்தில் மனிதனை மரத்துக்கு ஒப்பிடுகிறார். பண்பில்லாதவனை மரத்துக்குச் சமமானவன் என்கிறார்.

    "அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்

    மக்கட்பண் பில்லா தவர்"

    அரம் இரும்பையும் அராவி அழிக்கும் கருவி. அதைப் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், பண்பில்லாததவர்களாக இருந்தாலும், அவர்கள் மரத்துக்குச் சமமானவர்கள் என்கிறார்.

    அறிவில்லாதது என்பதற்காக மரத்தைக் கூறுகிறாரே ஒழிய, மற்ற எல்லாவகையிலும் மரம் மனிதனிலும் சிறந்தே விளங்குகிறது.

    மரம் உயிரோடு இருக்கும்போது இலை, பூ, காய், கனி என்று பல வகைகளில் உதவுகிறது. நிழல் தருகிறது, தூய காற்று வழங்குகிறது, மழை தருகிறது.

    மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.

    ஆனால், மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும். அதனால்தான் வள்ளுவர்,

    "அன்றறிவாம் என்னாது அறம்செய்க"

    என்கிறார். எதையும் அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்திவைக்காதே என்று அறிவுறுத்துகிறார்.

    இறந்தபின் கண்தானம், உடல்தானம், அறக்கட்டளை அமைத்து உதவுதல் போன்று உதவமுடியுமே என நினைக்கலாம்.

    நம் பின்னோர் அதனை நிறைவேற்றுவதைப் பொறுத்து அது நிகழலாம், நிகழாமலும் போகலாம். வீட்டில் உள்ளோர் அதனை வழங்க மறுத்தால் நிகழமுடியாது.

    மரம் இருந்தும் கொடுக்கும், இறந்தும் கொடுக்கும்.

    எனக்குத் தெரிந்த ஒருவர், எப்போதும் யாருக்காவது கெடுதல் செய்தல் கொண்டே இருப்பார்.

    ஒருவர் வசதியாக வாழ்வதைப் பார்த்துவிட்டால் அவருக்குத் தாங்காது. காவல்துறைக்கு மொட்டைக் கடிதம் போடுவார். அவர் கள்ளநோட்டு வீட்டில் அடிக்கிறார் என்று, வீடு முழுவதையும் காவலர்கள் இடித்துப் போட்டுத் தேடிவிட்டு பொய்ப்புகார் என்று முடிவுகட்டுவார்கள். ஆனாலும் இடித்ததைக் கட்டுவது வீட்டுக்காரர் பொறுப்புதானே!

    திருடுபோன சாமி சிலைகள் ஒருவர் வீட்டில் ஒளித்துவைத்திருப்பதாக எழுதி அவருக்குத் தொல்லை தருவார்.

    'மொட்டை பெட்டிஷன் மேதாவி' என்றே ஊரில் அவருக்குப் பெயர். அந்த மேதாவியின் இறுதிக்காலம் உடல் நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தார். ஊர்ப் பெரியவர்கள் வந்து சுற்றிலும் அமர்ந்து உடல் நலம் விசாரிக்கிறார்கள்.

    அந்த மேதாவி, எல்லோரிடமும் தான் செய்த தவறுகளைக்கூறிவிட்டு "என்னைப் போன்று இனி ஒருவன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நாளை நான் இறந்ததும் என் உடலை காலில் கயிறுகட்டித் தெருவில் போட்டுச் சுடுகாட்டுக்கு இழுத்துப் போகவேண்டும். இழுத்துப் போகும்போதே எல்லோரும் இறந்த உடம்பைச் செருப்பால் அடித்தபடியே போகவேண்டும்.

    இதனைச் செய்வதாக உறுதிமொழி கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாவேன்" என்று பாவ மன்னிப்பு போலக் கேட்டார்.

    எல்லோரும் சாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே மறுநாள் மேதாவி இறந்துவிட்டார்.

    சொன்னபடியே எல்லோரும் மேதாவியின் உடலைக் தெருவில் போட்டு இழுத்தனர். செருப்பால் அடித்தனர். ஆசை ஆசையாக அதனைச் செய்தார்கள்.

    திடீரென்று போலீஸ் லாரி வந்து நின்றது, காவலர்கள் குதித்து ஓடிவந்தனர். இவர்களைப் பிடித்து உதைத்து லாரியில் ஏற்றிக் காவல் நிலையம் கொண்டுபோய் அங்கும் லத்திக் கம்பால் 'பூசை' போட்டனர்.

    அப்போது அங்கிருந்த ஆய்வாளர், 'அந்த ஆளு சரியாத்தான் தந்தி குடுத்திருக்காரு' என் உடம்பை அவமானப்படுத்தனும்னு பேசிக்கிறாங்க, போலீஸ்காரங்கதான் உடம்புக்கு அவமானம் உண்டாகாமே காப்பத்தனும்னு, அவர் நினைத்தபடியேதான் இவனுங்களும் செய்றாங்க. நல்லா அடிங்கப்பா' என்று ஆவேசமாகக் கூறினார்.

    அடிவாங்கியபடியே எல்லோரும் சொன்னார்கள். 'அவன் இருந்தும் கெடுத்தான்' செத்தும் கெடுத்தான்' என்று.

    மரம் இருக்கும்போதும் கொடுக்கிறது!

    உயிர்போன பிறகும் கொடுத்து உதவுகிறது.

    சில மனிதர்கள், இருந்தும் கெடுக்கிறார்கள், இறந்தும் கெடுக்கிறார்கள்.

    -புலவர் சண்முகவடிவேல்

    • ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி.
    • கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    கோவில்களில் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு கோள்களின் காந்த அலைக்கதிர் நிறத்திற்கு ஒத்த துணியை நவகிரகங்களுக்கு கட்டி இருப்பார்கள். சனிபகவானுக்கு சாம்பல் நிற அங்கவஸ்திரம் கட்டி இருப்பார்கள். சனியின் காந்த அலைக்கதிர்கள் சாம்பல் நிறம் என்பதை உணர்த்தவே முன்னோர்கள் அதை செய்து இருக்கிறார்கள்.

    பொதுவாக நவகோள்களின் காந்த அலை கதிர்கள், நமது உயிருக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உடையவை.

    சனி நம் நரம்புகளோடு தொடர்பு உடையது. சனியின் சாம்பல் நிற காந்த அலைக்கதிர்கள் ஆயுள், செல்வ வளம், உடல் நலம் அளிக்க வல்லது. தவத்தால் அதனோடு நட்பு பாராட்டி, அதனோடு உயிர் கலப்பு பெற்று, நமக்கு ஒத்ததாக மாற்றி கொள்ளலாம் என்று அருட்தந்தை பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் குறிப்பிடுவார்.

    ஒன்றை நாம் தொடர்ந்து நினைத்தால், இயல்பாக அதனோடு நாம் உயிர் கலப்பு பெறுவோம். இது பிரபஞ்ச நியதி. கவனிப்பதால் மனஅலை நீளமும் குறையும். இதை செய்வதற்கு உங்களுக்கு தேவை சற்று தனிமை.

    சனி என்ற கோளின் மீது மனம் செலுத்தி, அதன் சிறப்புகளை நினைவு கூர்தல், அவ்வளவுதான். உங்கள் எண்ணம் பிரபஞ்சமெல்லாம் விரிந்து, சனியோடு உறவாடி, உயிர் கலப்பு பெறும்.

    தேவையற்ற எண்ணங்களை புறந்தள்ளி விட்டு, நேரம் கிடைக்கும் போது நினைவு கூறலாம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும். உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

    இது போல வார நாட்களில் அந்தந்த கோள்களை நினைவு கூர்தல், சற்று நேரம் அந்த கோள்களின் நினைவாக இருந்து, உயிர் கலப்பு பெறுதல் என்று பழக்கப்படுத்தி கொண்டால் வாழ்வு சிறக்கும்.

    • இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க.
    • ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான்.

    பூமி இருக்கும் காலக்ஸியின் பெயர் பால்வீதி. பால்வீதியில் சுமாரா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வீதியின் நடுவே ஒரு கருந்துளை இருக்கு. ஒட்டுமொத்தமா இந்த லட்சம் கோடி நட்சத்திரங்களும் இந்த கருந்துளையை தான் சுத்தி வந்துகிட்டு இருக்கு.

    நமக்கு அருகாமையில் அன்ட்ரோமிடான்னு இன்னொரு காலக்ஸி இருக்கு. அது பால்வீதியை விட பெரியதுன்னு சொல்றாங்க. இந்த காலஸிக்கள் எல்லாமே விண்வெளியில் எங்கோ போய்கிட்டே இருக்கு. எங்கே போகுதுன்னு யாருக்கும் தெரியாது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 21 லட்சம் கிமி வேகத்தில் காலக்ஸிகள் எங்கோ பயணம் பண்ணிகிட்டு இருக்கு.

    இன்னும் சரியா 400 கோடி ஆண்டுகள் கழிச்சு அன்ட்ரோமிடாவும், பால்வீதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்னு சொல்றாங்க. ஒப்பீட்டளவில் 400 கோடி ஆண்டுகள் என்பது தொலைதூரமா தெரிஞ்சாலும், பூமியில் டைனசார்கள் உருவானது 24 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஆக இன்னும் 500 கோடியாவது ஆண்டில் மனிதர்கள் இருக்காங்களோ இல்லையோ, ஏதோ உயிரினம் பூமியில் இருக்கும்.

    தலா 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ள இரு காலக்ஸிகள் மோதிக்கொண்டால் என்ன ஆகும்?

    "பெருசா ஒன்றும் ஆகாது" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    ஏனெனில் காலக்ஸிக்களின் நட்சத்திரங்களுக்கு இடையே இருப்பது பெரும்பாலும் வெற்றுவெளிதான். அதாவது ஒரு காலக்ஸியில் 99.2% வெறும் வெளிதான். மீதம் உள்ள 0.8% தான் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள்.

    ஆக இந்த மோதல் நிகழ்கையில் விண்ணை பார்த்தால் திடீர் என வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். புதுசா ஏராளமான நட்சத்திரங்கள் விண்ணில் தோன்றும். சில நட்சத்திரங்கள் மோதி கிலோனோவா (Kilonova) எனும் வானவேடிக்கை நிகழலாம். பார்த்தால் ஒரே ஜாலியா இருக்கும்.

    அப்ப நாம மனித வடிவில் இருக்கமாட்டோம். ஆனால் ஏதோ ஒரு வடிவில் இருந்து விண்ணை உற்றுபார்த்துக்கொண்டிருப்போம்.

    ரோபாட் வடிவில் உட்கார்ந்து விண்ணைபார்த்துவிட்டு நோட்ஸ் எழுதிகிட்டு கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்?

    - நியாண்டர் செல்வன்

    • இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும்.
    • சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.

    அரசனுக்கு ஒரு சந்தேகம்!

    உலகத்திலேயே இனிமையானது எது?

    கசப்பானது எது? என்று தண்டோரா போட்டு ஊர் மக்களுக்கு அறிவிப்பு செய்தான்.

    உலகத்திலேயே மிக மிக இனிமையான பொருள் ஒன்றையும், மிகவும் கசப்பான பொருள் ஒன்றையும் எடுத்து வர வேண்டும். அரசனின் மனதிற்கு திருப்தி அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும்.

    ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்து வந்தார்கள்..

    இனிப்பிற்கு லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமூன், மைசூர்பா உள்ளிட்ட ஏராளமான இனிப்பு வகைகள்.

    கசப்பிற்கு பாகற்காய் முதல் தங்களுக்கு தெரிந்த அத்துனை கசப்பானதையும் எடுத்து வந்தார்கள்.

    அரசன் மனம் திருப்தி அடையவில்லை!

    கடைசியாக கோமாளி தோற்றத்தில் இருந்த ஒருவன் ஆட்டினுடைய "நாக்கை மட்டும்" எடுத்து வந்திருந்தான்.

    அங்கிருந்தவர்கள் பரிகாசமாக சிரித்தார்கள். பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்த ஆட்டு நாக்கை பார்த்து முகம் சுளித்தார்கள்.

    இவன் ஏதோ சொல்ல வருகிறான் என்று கருதி, அரசன் அவனை அருகில் அழைத்து என்ன இது என்று கேட்க,

    கோமாளி, நாக்குதான் உலகத்திலேயே மிகவும் இனிமையானது. கடவுள் புண்ணியத்தால் நாம் பேசுகிறோம் என்றால் அதற்கு இந்த நாக்குதான் காரணம். இனிமையான வார்த்தைகளால் பிற மக்களை நம்மால் நேசிக்க முடியும். சக மனிதர்கள் நம்முடன் உறவாட நாம் பிரயோகிக்கும் நல்ல வார்த்தைகள்தான் என்றான்.

    பேஷ்! ஃபேஷ்!

    சரி, கசப்பான பொருளை காட்டு என்று அரசன் கேட்கிறான்.

    மன்னா! உலகத்திலேயே மிகவும் கசப்பான பொருளும் இதே நாக்குதான்! நாம் கோபத்தில் பேசுவதால் எத்தனை மனிதர்களின் மனங்களை காயப்படுத்துகிறோம்.

    தெரிந்தோ தெரியாமலோ நாம் பேசும் பேச்சுக்களால் பகைமையை வளர்த்துக் கொள்கிறோம். எதிரிகளை சம்பாதிக்கிறோம்.

    இந்த நாக்கு மிக கெட்டது மன்னா! மிக மோசமானது! மிக கசப்பானது!

    -பாலு சுப்பிரமணியன்

    • பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...
    • பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!

    நடந்து பாருங்கள் நண்பர்களே...

    நடக்க நடக்க நமக்குள் நடக்கும் அற்புதங்களை உணராலாம். அனைத்தும் ஆதாரபூர்வ அறிவியல் உண்மைகள்!

    நாள் ஒவ்வொன்றையும் நலமாய்த் தொடங்கலாம்.

    நடக்கத் தொடங்கிய ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது!

    அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன் அருவி போல் குருதி பரவுகிறது!

    மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம் முற்றிலுமாகத் தளர்கிறது!

    நான்காம் நிமிடத்தில் நடை மிக எளிதாகிறது... நாடி சீராகிறது!

    ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது... யாரும் அறியாமலே!

    ஆறாம் நிமிடத்திலேயே அவசியமற்ற கொழுப்பு நீக்கம் ஆரம்பம் ஆகிறது!

    ஏழாம் நிமிடத்தில் இதயத் துடிப்பு சீராகி... இன்னிசை ஆகிறது!

    நிமிடம் எட்டில் நாளங்கள் அனைத்தும் நெகிழ்ந்து விரிகின்றன!

    ஒன்பதாம் நிமிடத்தில் உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது!

    பத்தாம் நிமிடத்தில் மொத்த உடலும் மனமும்... சுத்தமாகித் தெளிகிறது!

    பனிரெண்டாம் நிமிடத்தில் பரவுகிறது உடலெங்கும் ஓர் பதமான சூடும் சுகமும்!

    பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...

    பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!

    நிமிடம் பதினெட்டில் நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...நிகரில்லா உயிர்வளி!

    இருபதாம் நிமிடத்தில் இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்... இளகத் தொடங்குகிறது!

    இருபத்தைந்தாம் நிமிடத்தில் இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்? என்று மனம் வியக்கிறது!

    முப்பதாம் நிமிடத்தில் முழு உடலும் மனமும் முற்றிலுமாகத் தளர்கின்றன!

    முப்பந்தைந்தாம் நிமிடத்தில் மூளையின் மூலை முடுக்கெங்கும் முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள்!

    நாற்பதாம் நிமிடத்தில் நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம் நமக்கே தெரியாமல் விலகுகிறது.

    நாற்பத்தைந்தாம் நிமிடத்தில் நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து நம்மை ஆட்கொள்கிறது.

    ஐம்பதாம் நிமிடத்தில் ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும்.

    நிமிடம் ஐம்பத்தைந்தில் நினைத்துப் பார்க்க முடியாத நிம்மதி நெஞ்சில் நிறைகிறது.

    அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல் அனைத்தும் உங்களுக்குள்.

    உங்களுக்காக நீங்கள் ஒதுக்கும் இந்த உன்னத ஒரு மணி நேரத்தால் ஆனந்தமாகும் உடலும் மனமும்.

    -செல்வகுமார்

    • குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது.
    • இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன.

    1958 சீன அரசு கடும் கோபத்தில் இருந்தது. காரணம் குருவிகள் நாட்டின் ஒட்டுமொத்த தானிய உற்பத்தியில் 1% அளவை உண்பதாக அறிக்கைகள் கூறின.

    1% என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதுவும் இழப்புதானே? ஏன் அதை இழக்கவேண்டும்? இந்த குருவிகளை அப்புறப்படுத்தினால் 1% உணவு உற்பத்தி பெருகும் அல்லவா?

    நாட்டில் உள்ள குருவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல உத்தரவு வந்தது. குருவிகளை கொல்லும் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    மக்கள் குருவிகளை உண்டிவில், அம்புகள், துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி குருவி நூடில்ஸ் எல்லாம் செய்து சாப்பிட்டார்கள்.

    அதன்பின் உணவு உற்பத்தி என்ன ஆனது?

    குருவிகள் அழிந்ததும், உடனே பூச்சிகள் எண்ணிக்கை பெருகியது. இத்தனை நாளாக குருவிகளால் கட்டுப்பாட்டில் இருந்த பூச்சிகள் எண்ணிக்கை பெருகி அவை பல லட்சம் ஏக்கர் பயிர்களை அழித்தன. நாட்டில் கடுமையான உனவுப்பஞ்சம் வந்து 4.5 கோடி பேர் உயிரிழந்தார்கள். 20ம் நூற்றாண்டின் மிகக்கொடிய பஞ்சமாக அது அறியப்படுகிறது.

    ஆக உயிரினங்கள் ஒன்றை ஒன்று எப்படி சார்ந்து உள்ளன என்பதை மனித இனம் இப்படி பெருத்த விலை கொடுத்துதான் தெரிந்துகொள்கிறது.

    -நியாண்டர் செல்வன்

    ×