என் மலர்tooltip icon

    கதம்பம்

    பழமை மாறாத பாரம்பரியம்- கொல்லிமலை பழங்கள், மூலிகைகளுக்கு மவுசு அதிகரிப்பு
    X

    பழமை மாறாத பாரம்பரியம்- கொல்லிமலை பழங்கள், மூலிகைகளுக்கு மவுசு அதிகரிப்பு

    • கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான்.
    • கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது.

    கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு கொல்லிமலை.

    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள். மலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

    கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். என்னதான் வீரிய ஒட்டுரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் ஆட்டிப்படைக்கும் சூழலில், இங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சமை ஆகிய இந்த 3 சிறுதானியங்களை பல நூறு வருடங்களாக பல நூறு ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள்.

    பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் 'பழமைப்புரட்சி' செய்து வருகிறார்கள் இந்த மக்கள். ஏரு பிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளை வைத்து தம்பு அடிப்பது, தூற்றுவது, மூட்டை பிடிப்பது, வீடு கொண்டு வருவது என்று அனைத்து விவசாயப் பணிகளையும் மனிதர்களும், மாடுகளுமே பார்த்து கொள்கின்றனர்.

    கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி, மிளகுகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மிளகு அறுவடை சீசன் மே மாதம் தொடங்கும்.

    இதேபோல் காபி சீசனும் மே, ஜீன் மாதங்களில் தொடங்கும். கொல்லிமலையில் விளையும் காபி மிகவும் சுவை மிக்கது. காபி சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கொல்லிமலைக்கு வந்து குவிகின்றனர். கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காய்த்து தொங்கும் அன்னாசி மற்றும் பலாப்பழ வகைகள், குறிப்பாக இங்கு விளையும் அன்னாசி பழங்கள் ருசியானது.

    சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொல்லி மலையில் இருந்துதான் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அன்னாசி பழங்களை வாங்கி சுவைக்க மறப்பதில்லை. இதேபோல், கொல்லிமலை பலாப்பழங்களும் சுவைமிக்கது.

    கொல்லிமலை கிராமங்களில், சீத்தாப்பழ மரங்கள் உள்ளன. மலைவாழ் மக்களிடம் இருந்து பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள ஊா்களில் விற்பனை செய்கின்றனா். கொல்லிமலை சீத்தாப்பழங்கள் சுவைமிகுந்தவை என்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. கொல்லிமலையின் ஆலத்தூர், ஆரியூர் மற்றும் வேள்ப்பூர் கிராமத்தில் அதிகளவில் அன்னாசி பழங்கள் விளைகின்றன.

    இந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலர் இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம்.

    இதேபோல், ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலைமுடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக்கூடாது, அந்த சாறுபட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.

    கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால் வாழை, இதன் பழத்தை 2 மண்டலம் (90 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்கள் என கூறுகின்றனர்.

    இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும்பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த அபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆக, இதுபோன்ற அபூர்வ மூலிகைகள் ரகசியங்கள் சொல்லத் தீராது.

    இங்கு விளையும் கொல்லிமலை சீனிமிளகாய் மானாவாரியில் இங்கு மட்டும்தான் விளைகிறது. மருத்துவக்குணம் கொண்ட வல்லாரை உள்பட கொல்லிமலையில ஏராளமான மூலிகைச்செடிகள் இயற்கையாக விளைகின்றன. பெயர் தெரியாத அநேக அரியவகை மூலிகைகளும் இங்கு உள்ளன.

    கொல்லிமலையின் மேல் உள்ள மணப்பாறை நாடு, விரவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நாவல் மரங்கள் உள்ளன. மற்ற பகுதி நாவல் பழங்களை விட கொல்லிமலையில் மூலிகை தண்ணீரில் விளைகின்ற நாவல் பழங்கள் சுவை மிகுதியாக இருக்கும். நாவல் கொட்டைகள் சர்க்கரை நோய்க்கு சிறந்தது என்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும், பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை... அதன் ரகசியமும் இதுதான். ஆயுளைக்கூட்ட ஒரு முறை அந்த அதிசய மலைக்கு போய்வரலாமே...

    Next Story
    ×