என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இந்தியாவில் 5ஜி சேவை முதல் கட்டமாக 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.

    5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. 2024-க்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைப் பெற முடியும் என தெரிவித்தார்.

    • பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிப்போம்.
    • பணவீக்கம் கவலை அளிக்கிறது.

    வாஷிங்டன் :

    உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள புருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பிரபல பொருளாதார நிபுணர் ஈஸ்வர் பிரசாத்துடன் உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    அதில், அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    எரிபொருள், உரம், உணவு ஆகிய பொருட்கள் உலக அளவில் உயர்ந்து வருகின்றன. அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த சுமை, மக்களுக்கு ஏறாமல் பார்த்துக் கொள்கிறோம்.

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பின் மூலம் எரிபொருள் விலையின் சுமை, மக்களை தாக்காமல் பார்த்துக் கொண்டோம்.

    பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிப்போம். பணவீக்கம் கவலை அளிக்கிறது. அதை குறைக்க வேண்டும். அதே சமயத்தில், பொருளாதார வளர்ச்சியை எப்படி தக்க வைப்பது என்ற கேள்வி இயற்கையாகவே எழும்.

    எனவே, எனது பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதுடன், விலைவாசியை கட்டுப்படுத்தும்வகையில் கவனமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒரு இந்திய மாணவர், ''அமெரிக்காவில் இந்தியாவின் யு.பி.ஐ. (பண பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம்) சேவை கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எப்போது இந்த சேவையை தொடங்குவீர்கள்?'' என்று கேட்டார்.

    அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    இதுதொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறோம். யு.பி.ஐ. மட்டுமின்றி, இந்தியாவின் ருபே கார்டுகள், பீம் செயலி ஆகியவற்றையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு வருகிறோம்.

    சிங்கப்பூரும், ஐக்கிய அரபு அமீரகமும் ருபே கார்டை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டார்ட்அப்புடன் பேச தயார்

    மற்றொரு கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதாக நானும் கேள்விப்பட்டேன்.

    அவர்கள் அரசுடன் பேச தயாராக இருந்தால், அவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களது கவலைகளை தீர்த்து, அவர்களை இந்தியாவிலேயே செயல்பட வைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எல்லனை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவு, உலக நிலவரம், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    உலக பொருளாதாரம் பற்றியும் பேசினர். நவம்பர் 11-ந் தேதி நடக்க உள்ள அமெரிக்க-இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி உறவு கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு ஜேனட் எல்லனுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்தன.
    • இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

    நியூயார்க்

    உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

    ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. 

    முன்னாக வாக்கெடுப்பு மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஐ.நா.சபைக்கான இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், உக்ரைன்-ரஷியா இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை மட்டும் ஒரே தீர்வாக இருக்கும் என்றார்.

    இந்த பிரச்சினையில் அமைதிக்கான பாதையை உருவாக்க அனைத்து நாடுகளும் தங்களது தூதரக ரீதியான நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

    • பூமியை சுற்றி ஏராளமான சிறுகோள், விண்கற்கள் சுற்றி வருகின்றன.
    • விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை சுற்றி ஏராளமான சிறுகோள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவைகள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர். இந்த அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு 'டார்ட்' என்ற விண்கலத்தை விண் வெளிக்கு அனுப்பியது.

    இந்த விண்கலம், பூமியை நோக்கி டிடிமோஸ் பைனரி என்ற விண்கல் வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது.

    டிடிமோஸ் பைனரி விண்கல், பூமி மீது மோது வதை தடுத்து அதை திசை திருப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி அந்த விண்கல் மீது டார்ட் விண்கலத்தை கடந்த மாதம் 26-ந்தேதி நாசா மோத வைத்தது.

    விண்கலம் வெற்றிகரமாக விண்கல் மீது மோதியதால் அதன் திசையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப்பாதையானது விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைந்துள்ளது. இதன் மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விண்கல்லால் ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விண்வெளியில் முதல் முறையாக வான் பொருளின் சுற்றுப்பாதை மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான நிலைய இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன.
    • சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன.

    கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய குழு, அமெரிக்க விமான நிலைய இணைய தளங்களில் ஊடுருவியதாக குற்றம் சாட்டியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமான சேவை, தகவல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

    விமான நிலைய இணைய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன.

    இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த 'பபுள் நெபுலா' கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.
    • பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது.

    வாஷிங்டன்:

    விண்ணில் ஏராளமான அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன. அந்த மர்மங்களை கண்டறிய உலக நாடுகள் பல செயற்கை கோள்களையும், தொலை நோக்கிகளையும் அனுப்பி அரிய தகவல்களை பெற்று வருகின்றன.

    அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஹப்பின் தொலை நோக்கியை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த அதிநவீன தொலைநோக்கி பல அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

    தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவை, நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. விண்மீன்கள் கூட்டத்துக்குள் உள்ள அந்த 'பபுள் நெபுலா' கண் கவரும் வகையில் மிகவும் வண்ணமயமாக காணப்படுகிறது.

    நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். இந்த பபுள் நெபுலா வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப் பட்டுள்ளது.

    இந்த பபுள் நெபுலா மற்ற நெபுலாக்களை விட மிகவும் பிரபலமானது. இது 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இது இன்னும் 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் 'சூப்பர் நோவா' வாக மாறிவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது.

    மேலும், பபுள் நோவா 7 ஒளி ஆண்டுகள் சுற்றளவுக்கு மிகவும் பிரமாண்டமான அளவில் உள்ளது. விண்மீன்கள் வெடித்து சிதறும் நிகழ்வே சூப்பர் நோவா என்று அழைக்கப்படுகிறது. அப்போது சூரியனை போன்ற பல மடங்கு சக்தியை அது வெளியிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    இந்த படத்தை வெளியிட்ட பிறகு நாசா கூறியதாவது:-

    இந்த பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்சிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக காணப்படுகிறது.

    இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் மக்களுக்கான அமெரிக்காவின் ஆதரவை ரஷிய தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது.
    • போர்க் குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷியாவை பொறுப்பு ஏற்க வைப்போம்.

    வாஷிங்டன்:

    கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா,  உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின.

    இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ரஷியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷியாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது.

    எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷியாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷியாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம். இவ்வாறு பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • விடுதிக்கு வந்த மர்ம மனிதன் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

    புளோரிடா:

    அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. புளோரிடா மாகாணம் தம்பா என்ற இடத்தில் இரவு விடுதி இயங்கி வருகிறது.

    இந்த விடுதிக்கு வந்த மர்ம மனிதன் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் குண்டு காயம் அடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அந்த மர்ம மனிதன் வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டான்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்தார். 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தார். போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டான் என தெரியவில்லை. அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நிலவில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லோருக்கும் ஆசை இருக்கும்.
    • சூரியனால் ஒளிரும் பகுதியை மிகவும் தெளிவாக காட்டுகிறது.

    வாஷிங்டன்:

    நிலவில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லோருக்கும் ஆசை இருக்கும். அதை அறியும் வகையில் வானியல் நிபுணர் ஒருவர் துல்லியமாக நிலவை படம்பிடித்து உள்ளார். 8 அங்குல தொலைநோக்கி மூலம் அவர் இதனை மிக அழகாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

    பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கும் போது நிலவு வெண்மையாகவும். சாம்பல் நிறமாகவும் காட்சி அளிப்பதுபோன்று தெரியும் ஆனால் இந்த படத்தின்படி அது அப்படி இல்லை என்பது தெரியவருகிறது.

    மேலும் சூரியனால் ஒளிரும் பகுதியை மிகவும் தெளிவாக காட்டுகிறது. அதில் எண்ணற்ற மாற்றங்கள் மற்றும், முகடுகள் இருப்பது தெரியவருகிறது.

    இதனை இணையதளத்தில் ஏராளமானோர் பார்த்து பாராட்டி வருகின்றனர். இதில் ஒருவர் இது போன்ற அழகான நிலவின் படத்தை இதற்கு முன் பார்த்தது இல்லை என்றும் இது பிரமிக்க வைக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

    • அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
    • குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய் வாங்கப்படும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து எரி பொருள் கொள்முதல் செய்வதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கடந்த ஏப்ரல் மாதம் முதல் 50 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த கச்சா எண்ணெயில் இது 10 சதவீதமாக உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, மத்திய பெட்ரோலித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், உக்ரைனுடன் ரஷியா போர் புரிந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இந்திய குடிமக்களுக்கு தடையின்றி எரிபொருள் வழங்க வேண்டிய தார்மீகக் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள் முதல் செய்ய கூடாது என்று எந்த நாடும் இந்தியாவை நிர்பந்திக்க வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். குறைந்த விலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன.
    • ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்க மக்களுக்கு அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்று கற்பழிப்பு என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தலங்களிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் அரசு அலுவலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அளவிலோ அல்லது திடீரென்றோ தாக்குதல் நடத்தலாம் என்றும் பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

    • தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 38 பேர் பலியாகினர்.
    • தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    தாய்லாந்தின் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 குழந்தைகளும் அடங்கும். மற்ற 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள். இச்சம்பவம் அந்நாட்டையே உலுக்கி உள்ளது.

    இந்நிலையில், தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொடூர சம்பவத்தால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்தது. இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. அமெரிக்காவின் கூட்டாளியான தாய்லாந்திற்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    ×