என் மலர்
அமெரிக்கா
- அஜய் பங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.
- 5 ஆண்டுகளுக்கு உலக வங்கி தலைவர் பதவியை அஜய் பங்கா வகிப்பார்
வாஷிங்டன் :
உலக வங்கியின் அடுத்த தலைவராக, அமெரிக்காவாழ் இந்தியரான அஜய் பங்கா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'உலக வங்கியின் தலைவராக அஜய் பங்காவை உலக வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அவருடன் இணைந்து செயல்படுவதில் இயக்குனர்கள் குழு ஆர்வமாக உள்ளது. வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு உலக வங்கி தலைவர் பதவியை அஜய் பங்கா வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அரசால் அஜய் பங்கா முன்மொழியப்படுவார் என்று அதிபர் ஜோ பைடன் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார்.
இந்தியாவில் பிறந்து, படித்து, வளர்ந்த அஜய் பங்கா, மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் தலைவராக பதவி வகித்தவர். தற்போது அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கிறார். அஜய் பங்காவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.
- தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது.
- அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறையானது பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பின.
ஆனாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இன்றும் ஏற்படவில்லை. இதற்கிடையே சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த நாட்டிடம் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு செலவு களுக்கு நிதி செலுத்த போதுமான பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அரசின் கருவூலம் வெளியிட்ட அறிக்கையில், அரசின் கடன் வரம்பு அதிகரிப்பு செய்யாவிட்டால் ஜூன் மாதத்துக்கு பிறகு அரசின் செலவுகளுக்கு போதுமான பணம் இல்லாமல் போகலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க நிதி மந்திரி ஜேனட்யெல்லன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படுவதற்கு உதவுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து அதன்பின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் நாட்டின் வணிகமும், வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.
கடன் உச்சவரம்பை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் உயர்த்தவில்லை என்றால் அது பங்குச்சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுவிடும்.
ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது ஜூன் 1-ந்தேதிக்கு முன்னதாக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்க அரசு, மக்கள் சேவைகளுக்கும் பிற அனைத்து நிதி செலவுகளுக்கும் நிதியை திரட்ட முடியாது. இந்த நிதி பற்றாக்குறை பிரச்சினையை விரைவாக சரிசெய்ய வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதித்துறை 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று ஏற்கனவே அனுமதி வழங்கியது. இந்த உச்ச வரம்பு, கடந்த ஜனவரி 19-ந்தேதியே எட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் ஜூன் வரை கையிருப்பு தொகை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜூன் 1-ந்தேதி முன்பே கையிருப்பு தொகை தீர்ந்துவிடும் சூழல் உள்ளது. இதையடுத்து அதிபர் ஜோபைடன், அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெருசலேம் நகரில் தூதரக அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசு கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வருகிற 9-ந்தேதி, கடன் உச்சவரம்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி அழைத்து உள்ளார். ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவரான ஹக்கீம் ஜெப்ரீஸ், செனட்டின் பெரும்பான்மை தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசு கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கான்னல் ஆகியோரையும் இக்கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது. அமெரிக்கா, வருமானத்தைவிட அதிக அளவில் செலவழித்து வருகிறது. அதனை ஈடுகட்ட ஏராளமாக கடன் வாங்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதில் இருந்து மீண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இலங்கையில் பணவீக்கம் அதிகரித்தபடியே சென்றது. இதேபோல் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஆசியாவில் இலங்கையைவிட பாகிஸ்தானில் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டில் இதுவரை உலக அளவில் மோசமாக சரிந்துள்ள நாணயங்களில் பாகிஸ்தான் ரூபாயும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயற்சிப்பவர்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1,500 பேரை அனுப்ப அதிபர் ஜோபை டன் முடிவு செய்துள்ளார்.
அவர்களுக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. ஜோபைடன் பதவி காலத்தில் சட்ட விரோதமாக எல்லையில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே அவர், அதிபர் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மெக்சிகோ எல்லைக்கு கூடுதல் படையை அனுப்ப ஜோபைடன் முடிவு செய்து உள்ளார்.
வருகிற 11-ந்தேதியுடன் அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தினமும் 10 ஆயிரம் பேர் எல்லை வழியே நுழைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் கூறும்போது, "மெக்சிகோ எல்லைக்கு அனுப்பப்படும் 1,500 வீரர்கள் 90 நாட்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணியில் ஈடபடுவார்கள். கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கெடுக்க மாட்டார்கள்" என்றார்.
- பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
- விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இல்லினாய்ஸ்:
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது அங்கு பயங்கரமான புழுதி புயல் வீசியது. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெஞ்சாலையில் பரவியது. இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று அடுத்தடுத்து பயங்கரமாக மோதிக் கொண்டன.
சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி, கார், பஸ் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதின. இரண்டு லாரிகளில் தீப்பிடித்தது.
இந்த விபத்துகளில் 6 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
லாரிகளில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்ற வாகனங்களுக்கு பரவாமல் அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது, '60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது' என்றனர். சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப்ட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குவாயாகில்:
தென் அமெரிக்காவின் ஒரு முனையில் ஈக்வடார் என்ற குடியரசு நாடு உள்ளது.
இந்த நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில் குவாயாகில் என்ற நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் குருவியை சுடுவது போல சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் குண்டுகள் பாய்ந்து இறந்தனர். 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் கிடந்த துப்பாக்கி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
- பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
- எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மேலும் ஒரு மாற்றத்தை எலான் மஸ்க் செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களாக இருந்தது. அதை 2 வாரங்களாக எலான் மஸ்க் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
அதாவது 140 நாட்களில் இருந்து வெறும் 14 நாட்களாக விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பயனர் ஒருவர் கூறும்போது, "டுவிட்டரில் அவமானம். இரண்டு வாரங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு? இது சரியான வழி இல்லை" என்றார்.
இதேபோல்மற்ற பயனர்கள் கூறும்போது, "திவால் நிலையை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனம் மட்டுமே இதை செய்யும். இது குழந்தைகளை பெறாமல் இருந்த உங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும்" என்றனர்.
- வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
- எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்:
வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.
இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
எனவே இந்த எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
- பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன.
இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையே தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்றது. அப்போது 2 கப்பலும் மோதுவதுபோல் அருகருகே வந்தது.
பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, சீனா, அதன் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடத்தையில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவை பதிலடிக்கு தூண்டும் என்றார்.
சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
- இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர். அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.
அதன்பின் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தப்பிச் சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது.
நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த மாதம் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம்.
வாஷிங்டன்:
பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர் . சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம் என்று அந்த வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






