search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கரைந்து வரும் கையிருப்பு நிதி.. கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை
    X

    கரைந்து வரும் கையிருப்பு நிதி.. கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை

    • தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது.
    • அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறையானது பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தபிறகு அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பின.

    ஆனாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இன்றும் ஏற்படவில்லை. இதற்கிடையே சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த நாட்டிடம் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு செலவு களுக்கு நிதி செலுத்த போதுமான பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்க அரசின் கருவூலம் வெளியிட்ட அறிக்கையில், அரசின் கடன் வரம்பு அதிகரிப்பு செய்யாவிட்டால் ஜூன் மாதத்துக்கு பிறகு அரசின் செலவுகளுக்கு போதுமான பணம் இல்லாமல் போகலாம் என்று தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க நிதி மந்திரி ஜேனட்யெல்லன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படுவதற்கு உதவுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து அதன்பின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் நாட்டின் வணிகமும், வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.

    கடன் உச்சவரம்பை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் உயர்த்தவில்லை என்றால் அது பங்குச்சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுவிடும்.

    ஜூன் மாத தொடக்கத்தில் அல்லது ஜூன் 1-ந்தேதிக்கு முன்னதாக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்க அரசு, மக்கள் சேவைகளுக்கும் பிற அனைத்து நிதி செலவுகளுக்கும் நிதியை திரட்ட முடியாது. இந்த நிதி பற்றாக்குறை பிரச்சினையை விரைவாக சரிசெய்ய வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க நிதித்துறை 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வாங்கலாம் என்று ஏற்கனவே அனுமதி வழங்கியது. இந்த உச்ச வரம்பு, கடந்த ஜனவரி 19-ந்தேதியே எட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் ஜூன் வரை கையிருப்பு தொகை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஜூன் 1-ந்தேதி முன்பே கையிருப்பு தொகை தீர்ந்துவிடும் சூழல் உள்ளது. இதையடுத்து அதிபர் ஜோபைடன், அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜெருசலேம் நகரில் தூதரக அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசு கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வருகிற 9-ந்தேதி, கடன் உச்சவரம்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி அழைத்து உள்ளார். ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவரான ஹக்கீம் ஜெப்ரீஸ், செனட்டின் பெரும்பான்மை தலைவர் சக் ஷுமர் மற்றும் குடியரசு கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கான்னல் ஆகியோரையும் இக்கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    இக்கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால் முக்கியமான பில்களுக்கு அரசு பணத்தை செலுத்த முடியாது. அமெரிக்கா, வருமானத்தைவிட அதிக அளவில் செலவழித்து வருகிறது. அதனை ஈடுகட்ட ஏராளமாக கடன் வாங்க வேண்டியுள்ளது.

    அமெரிக்காவில் கடும் நிதி பற்றாக்குறை, பொருளாதார மந்தநிலையின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. ஆசியாவில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதில் இருந்து மீண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இலங்கையில் பணவீக்கம் அதிகரித்தபடியே சென்றது. இதேபோல் மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ஆசியாவில் இலங்கையைவிட பாகிஸ்தானில் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருவதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டில் இதுவரை உலக அளவில் மோசமாக சரிந்துள்ள நாணயங்களில் பாகிஸ்தான் ரூபாயும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×