என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பள்ளி விடுமுறையாக மாற்றும் மசோதா நிறைவேற்றம்
    • தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும் என்றார் மேயர்

    அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களின் முக்கியமான பண்டிகையும், தீப ஒளிகளின் பண்டிகை என அழைக்கப்படும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது நியூயார்க்கில் வசித்துவரும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்தியர்களின் இந்த பல நாள் எதிர்பார்ப்பிற்கு ஒரு இனிப்பான செய்தியாக, அங்கு இனிமேல் தீபாவளி பண்டிகை ஒரு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்துக்கள்:-

    நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், நேற்று அங்குள்ள சிட்டி ஹாலில் செய்திருக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பில், தீபாவளியை நியூயார்க் நகர பொது பள்ளி விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநில சட்டமன்றமும், மாநில செனட்டும் நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடப் போகிறார் என்று நாங்கள் நம்புகிறோம். இது இந்திய சமூகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது தீபாவளியை கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும். மேலும், இது நியூயார்க்கின் வெற்றியாக கருதலாம்'' என்றார்.

    நியூயார்க் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பெண்மணியான நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார்," இரண்டு தசாப்தங்களாக தெற்காசிய மற்றும் இந்தோ-கரீபியன் சமூகம் இந்த தருணத்திற்காக போராடி வருகிறது. இன்று, மேயரும் நானும், உலகத்தின் முன் நின்று, இனி எப்போதும் தீபாவளிக்கு நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறை என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். தீபாவளி பண்டிகை விடுமுறை சட்டத்தில் இணைக்கப்பட உள்ளது," என கூறினார்.

    அங்குள்ள காங்கிரஸின் ஆசிய-பசிபிக் அமெரிக்க காகஸ் எனும் அமைப்பின் முதல் துணைத்தலைவரான கிரேஸ் மெங், "இந்த பள்ளி விடுமுறைக்காக நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம், இப்போது எங்கள் முயற்சிகள் நனவாகும். மற்ற கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் விடுமுறை நாட்களை போலவே, இந்த முக்கியமான அனுசரிப்பை அங்கீகரித்து பாராட்ட எங்கள் பள்ளி அமைப்பு வந்துள்ளது" என கூறினார்.

    கடந்த மாதம், தீபாவளியை கூட்டாட்சி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸில் மெங் அறிமுகப்படுத்தினார். இதன்படி, "தீபாவளி தின சட்டம்" எனும் சட்டத்தின் கீழ், அமெரிக்காவில், கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற விடுமுறை தினங்களில், இனி தீபாவளி தின விடுமுறை, 12-வது விடுமுறையாக மாறும்.

    நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் கூறுகையில், "இந்த நகரம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள் மூடப்படும் என்பதை விட நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நமது மனம் திறக்கப்படும். குழந்தைகளுக்கு தீபாவளி பற்றியும் வரலாறு பற்றியும் கற்றுத் தரப்போகிறேன்" எனவும் கூறினார்.

    அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.

    • வாக்னர் கூலிப்படையால் ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது
    • பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார்

    ரஷியாவில் அந்நாட்டு தனியார் ராணுவமாகவும் கூலிப்படையாகவும் வாக்னர் அமைப்பு எனும் படை செயல்பட்டு வந்தது. சென்ற வார இறுதியில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், அவரது படை ரஷிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது.

    இக்கலகம் பெரும் ராணுவ கிளர்ச்சியாக மாறலாம் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த ரத்தக்களறியும், வன்முறையும் இல்லாமல் அது அடங்கி விட்டது.

    இக்கலகத்தின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலும், ஆதரவும் இருந்ததாக புதின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.

    இதுகுறித்து பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவிற்கோ அல்லது நேட்டோ அமைப்பிற்கோ, ரஷியாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பின் கடந்த வார குறுகிய கால கிளர்ச்சியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடந்த எழுச்சி, ரஷிய அரசாங்கத்திற்கெதிராகவும், அதிபருக்கு எதிராகவும் நீண்ட காலமாக நிலவி வரும் உள்நாட்டு அமைப்புமுறை சார்ந்த பிரச்சினை.

    அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் இது எவ்வாறு முடிவடையும் என்பதை தற்போதே அறுதியிட்டு கூற முடியாது. இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

    ரஷியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் ஃபவுல், "ரஷிய எதேச்சதிகார அமைப்பிற்கெதிரான சவால்களும், ஜனநாயக எழுச்சிகளும் தோன்றும் போதெல்லாம், உடனே அதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக பழி கூறி அத்தகைய எழுச்சிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொள்வது ரஷிய அதிபரின் வழக்கம்.

    மேலும், ரஷியாவின் சீர்குலைவின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக தவறாக சித்தரிக்கப்படுவதை அமெரிக்காவும், நேட்டோவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது" என கூறியுள்ளார்.

    ரஷியாவின் உக்ரைன் ஆக்ரமிப்பால், இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், இந்த கிளர்ச்சியும், இதை புதின் கையாண்ட விதமும், மேற்கத்திய நாடுகளின் அடுத்த நகர்வையும் உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

    • மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமை குறித்த கேள்வியால் விமர்சனம்
    • இந்திய அமைச்சர்கள் ஒபாமா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

    இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு இந்தியாவில் இன ரீதியாக பாகுபாடு இல்லை என பதில் அளித்திருந்தார்.

    இதற்கிடையே அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஜோ பைடன் மோடியிடம் இதே கருத்தை வலியுறுத்த வேண்டும் எனவும், நானாக இருந்தால் வலியுறுத்துவேன் என்றும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு முன் தெரிவித்திருந்தார்.

    ஒபாமா கூறிய அதே கருத்தை அந்த பத்திரிகையாளர் எழுப்பியதால், ஆன்லைனில் பத்திரிகையாளர் அச்சுறுத்தப்படுவதுடன், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ''பத்திரிகையாளர் ஆன்லைன் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து நாங்கள் அறிவோம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது'' எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், பத்திரிகையாளர் எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு துன்புறத்தலுக்கு உள்ளாவதை நாங்கள் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்களை துன்புறுத்துபவர்கள் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

    • துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.

    அமெரிக்காவில் உள்ள மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு காயங்களுடன் 8 பேர் கிடந்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விசாரணையில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம்.

    ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த "ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் நிறுவனத்தின் "டைட்டன்" எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் "டைட்டானிக்" கப்பலை காண, 5 பேர் கொண்ட குழு சென்றது. ஆனால், வட அட்லாண்டிக் கடலின், கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில், சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.

    நீண்ட தேடுதலுக்கும் பின்னர், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது என்று அதன் உயர் அதிகாரி ஜான் மௌகர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

    இந்த பேரழிவு குறித்தும், கப்பலில் இருந்த 5 பேரின் இறப்புகள் குறித்தும் விசாரிக்க அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரப்பூர்வமாக ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதற்கு கேப்டன் ஜேசன் நியூபாவர் தலைமை புலனாய்வாளராக இருக்கப் போகிறார். உலகளவில் கடல்சார் களத்தின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதே எனது முதன்மை குறிக்கோள். வெடிப்புக்கான காரணத்திற்கான ஆதாரங்களை சேகரிப்பதில் புலனாய்வாளர்கள் பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடலுக்கடியில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலைமைப் புலனாய்வாளர் கேப்டன் ஜேசன் நியூபாவர் கூறினார். எனினும், விசாரணைக்கான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை.

    அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரெஞ்சு கடல் விபத்து விசாரணை வாரியம் மற்றும் பிரிட்டன் கடல் விபத்து புலனாய்வு பிரிவு உட்பட பிற தேசிய மற்றும் சர்வதேச விசாரணை அதிகாரிகளுடன் அமெரிக்க புலனாய்வாளர்கள் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.

    முன்னதாக, கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், அட்லாண்டிக் பெருங்கடலில் "டைட்டன்" நீர்மூழ்கி வெடிவிபத்தில் உருக்குலைந்தது குறித்து அதிகாரிகளை கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறியது. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை, தானும் இதில் இணைந்து விசாரணையை வழி நடத்தும் என கூறியிருந்தது.

    இந்த புலனாய்வில், நீர்மூழ்கி கப்பலில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்தவர் 48 வயதான பெண் கோபாஸ். இவர் டெக்சாசில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றார். அங்கு ஓரு சூதாட்ட விடுதியில் காதலன் இருந்தார். இதனால் உபெர் வாடகை காரை கோபாஸ் புக் செய்து பயணம் செய்தார்.

    அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார்.

    இதனால் தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பீட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தன்னை கடத்தி செல்வதாக கோபாஸ் தவறாக நினைத்து டிரைவரை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.

    அவர் மீது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொடூரமான தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேனியலின் மனைவி கூறும்போது, தனது கணவர் உபெர் செயலியில் காட்டிய வழியைதான் பின் தொடர்ந்தார் என்றார்.

    • 8 மாத கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனால் தற்செயலாக சுடப்பட்டார்.
    • படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட.

    இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் லாராவின் வீட்டிற்கு சென்று பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். மகனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட லாரா, சிறுவன் தற்செயலாக சுட்டு விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும், 8 மாத கருவும் பரிதாபமாக இறந்தது.

    விசாரணையில், லாரா வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தபோது பெற்றோரின் படுக்கையறைக்குச் சென்ற சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாடும்போது துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டில் உலகின் தலைவிதியை மாற்றும்.
    • எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாஷிங்டனில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ரொனால்ட் ரீகன் மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    அமெரிக்காவுக்கான எனது அரசு முறை பயணத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பல வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முதல் விமானப் போக்குவரத்து, உற்பத்திக்கான பயன்பாட்டு பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், விண்வெளித்துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது மிகவும் நம்பகமான பங்காளிகளாக முன்னேறி வருகின்றன.

    இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டில் உலகின் தலைவிதியை மாற்றும். இரு நாட்டு உறவு என்பது வசதிக்கான விஷயம் அல்ல. உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான ஒரு நம்பிக்கை ஆகும்.

    இந்த கூட்டாண்மை ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட கருத்து ஆகும். இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர்கள், வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    இன்று இந்தியா 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்து சாதனை படைத்துள்ளது. உலகின் பிரதான முதலீட்டு இடமாக இந்தியா உள்ளது.

    நீங்கள் வேகமாக வளரும் நன்மையை பெற வேண்டிய நேரம் இதுவாகும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம்.

    உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ்மொழி. அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் மூலம் இந்தியா, 100 மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

    பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்படும். எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொரோனா தாக்கத்தால் எண்ணிலடங்கா உயிரிழப்பும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
    • ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் 2019ம் வருட இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா (Corona) எனப்படும் வைரஸ் தொற்று, மிக அதிக வேகத்துடன் உலகம் முழுவதும் பரவி, பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனால், பல நாடுகள் லாக்டவுன் எனப்படும் பொது முடக்கம் அறிவிக்கும் சூழ்நிலை உருவானது. கொரோனாவின் தாக்கத்தால் எண்ணிலடங்காத உயிர்ப்பலியும், தொழில் முடக்கமும், அளவிட முடியாத பொருளாதார இழப்பும், பல துறைகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டது.

    இதற்கு காரணம் சீனாவிலிருந்து அந்த வைரஸ் உருவானதுதான் என பல நாடுகள் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள பரிசோதனை நிலையத்தில் இருந்து இந்த வைரஸ் உருவானதா எனும் குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்கா விசாரணை செய்து வருகிறது.

    இந்நிலையில், சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடத்திய ஆய்வுகளிலிருந்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் நான்கு பக்க அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், "கொரோனா வைரஸ், இந்த ஆய்வகத்திலிருந்துதான் வந்தது என கூறும் சாத்தியக்கூறுகளை உளவுத்துறை அமைப்புகளால் இன்னும் நிராகரிக்க முடியவில்லை. இருப்பினும், தொற்றுநோயின் தோற்றத்தையும் கண்டறிய முடியவில்லை. மத்திய புலனாய்வு முகமை மற்றும் வேறொரு நிறுவனத்தால் கோவிட்-19 வைரஸின் துல்லியமான தோற்றத்தை தீர்மானிக்க முடியவில்லை, ஏனெனில் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வக) அனுமானங்களை இந்த கருத்துகள் நம்பியுள்ளன. மேலும், முரண்பட்ட அறிக்கைகளுடன் சவால்களையும் இந்த கருத்துகள் எதிர்கொள்கின்றன" என்று கூறியிருக்கிறது.

    வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கொரோனா வைரஸ்கள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தியிருந்தாலும், கொரோனா வைரஸ் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில், அங்கிருந்துதான் கசிந்துள்ளது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

    "வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் தொற்றுநோய் பரவலுக்கு முந்தையகால ஆராய்ச்சியானது, ஸார்ஸ்கோவ்-2 அல்லது அதன் முன்னோடியை உள்ளடக்கியதுதான் என்பதற்கு எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை. கோவிட் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவன பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சி தொடர்பான சம்பவம் அங்கு நிகழ்ந்தது என்பதற்கான நேரடி ஆதாரமும் இல்லை" என அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

    • இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
    • சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன.

    இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார்.

    மெட்ராசில் (சென்னை) இருந்த தாத்தா-பாட்டியை பார்க்க செல்வோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய நபர்களில் என் தாத்தா ஒருவர். என் குழந்தை பருவம் முழுவதும் நண்பர்களாக இருந்தோம்.

    எனது தாத்தா, காலை வேளையில் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது நான் அவரது கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்பேன். சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் சுதந்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். ஊழலை எதிர்த்து போராடுவதன் முக்கியத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது.

    சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது தாத்தா பி.வி.கோபாலனிடமிருந்தும் என் தாய் ஷியாமளாவின் அர்ப்பணிப்பு, உறுதி, தைரியம் ஆகியவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் நான் உங்கள் முன்பு துணை அதிபராக நிற்பதற்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமேசான் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
    • குஜராத்தில் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அங்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு ஹைடெக் ஹேண்ட்ஷேக் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள், செமிகண்டக்டர்கள், உற்பத்தி, விண்வெளி, மற்றும் ஸ்டார்ட்-அப் உட்பட பல துறைகளின் நிறுவன தலைவர்கள் மற்றும் வல்லுனர்களை மோடி சந்தித்தார். இதன் பலனாக அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருகின்றன.

    அமேசான் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன்மூலம் அதன் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும். மேலும், 10 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவும், 20 பில்லியன் டாலர் ஏற்றுமதியை செயல்படுத்தவும், 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் வேலைகளை உருவாக்கவும் அது உறுதியளித்துள்ளது. அமேசான் இந்தியா, ஏற்கனவே 6.2 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வழங்குவதற்கான முயற்சியை செய்து வருகிறது. தவிர, 7 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமருடனான சந்திப்பின்போது, மைக்ரோசாப்ட் இந்திய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அந்நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் அரசாங்க உதவிக்காக, "ஜூகல்பந்தி" (Jugalbandi) எனும் மொபைல் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உந்தப்பட்டு செயல்படும் சாட்போட் ஒன்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    கூகுள் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான நிதியில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருப்பதாகவும், குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் (GIFT) நகரத்தில் எங்கள் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

    மைக்ரான் டெக்னாலஜி நிறுவனம், 'இந்திய செமிகண்டக்டர் மிஷன்' நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தில் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதியை உருவாக்குவதாகக் கூறியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி, ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், எஃப்.எம்.சி. கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் டக்ளஸ், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மேலும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க்கை நியூயார்க்கில் பிரதமர் மோடி சந்தித்தார்.

    இந்திய தொழில்துறை வளர்வதற்கும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இந்த அறிவிப்புகள் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்.
    • நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது.

    வாஷிங்டன் :

    பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க நளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இருமுறை பேசிய இந்தியப் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    மோடியின் அமெரிக்க பயணம் குறித்து அந்த நாட்டின் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்திய-அமெரிக்க கூட்டு, இதுவரை இல்லாத வகையில் வலிமையாகி உள்ளது. நாம் இன்னும் வளமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருப்பதால், நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்" என கூறி உள்ளார்.

    மேலும், " அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையோன கூட்டு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நமது கூட்டினை, விண்வெளியில் இருந்து ராணுவம் வரை, தொழில் நுட்பம் தொடங்கி வினியோகச்சங்கிலிகள் வரை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், " நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. நானும் நமது கூட்டுறவை எதிர்காலம் சார்ந்த துறைகளில் உயர்த்துவதில் சம அளவில் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    ×