என் மலர்
உக்ரைன்
- உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.
- புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
இப்போரில் ரஷிய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா, உக்ரைன் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவுகளுக்கு ரஷிய ராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக போர் ஆய்வுக்கான நிறுவனம் ஒன்று கூறியதாவது:-
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினுக்கு ராணுவ தளபதிகளால் காட்டப்படும் கீழ்ப்படியாமை தற்போது ராணுவ வீரர்களிடமும் பரவி வருகிறது.
உக்ரைன் மீது போரை தொடங்கியதில் இருந்து, பலனற்ற கட்டமைப்புகள், குழுக்களில் நம்பிக்கையின்மை அல்லது வெளிப்படைத்தன்மை, துருப்புகளின் குறைந்த மன உறுதி ஆகியவற்றுடன் ரஷிய படைகள் போராடின.
58-வது ஒருங்கிணைந்த ஆயுத ராணுவ தளபதி கர்னல் ஜெனரல் இவான் போபோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ரஷிய ராணுவத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இதே போல் பல ராணுவ தளபதிகள் மோதல் போக்குடன் உள்ளனர்.
கர்னல் ஜெனரல் மைக்கேல் டெப்லின்ஸ்கியை கைது செய்தால், கைப்பற்றப்பட்ட கெர்சன் பிராந்தியத்தில் இருந்து வெளியேறு வோம் என்று ரஷிய ராணுவத்தின் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தளபதிகள் மத்தியில் உள்ள கீழ்ப்படியாமை அவர்களின் சில வீரர்க ளுக்கு எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகிறது. ராணுவ தளபதிகள் மத்தியில் கீழ்ப்படியாமை அதிகரித்து வருவது ரஷிய ராணுவ தலைமையை இன்னும் வெளிப்படையாக எதிர்க்க மற்ற உயர்மட்ட அதிகாரிகளை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு உதவிய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது.
இதன் மூலம் புதினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகியது. இந்த நிலையில் புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க ரஷியா மறுப்பு
- உக்ரைனில் இருந்து தானிய பொருட்கள் ஏற்றுமதி ஆவதில சிக்கல்
உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.
இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், வங்காளதேசம், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா, என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.
ரஷியாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை உறுதி செய்ய பிற நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தற்போது ரஷியாவால் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், எந்த கப்பல் நிறுவனமும் அதனை அலட்சியப்படுத்தி தானிய ஏற்றுமதியில் பங்கேற்காது என தெரிவிக்கும் வல்லுனர்கள், இந்த சிக்கல் உலகின் மிகப்பெரிய உணவு நெருக்கடியாக மாறுவதற்கு முன் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என கருத்து தெரித்தனர்.
- 70 ஆயிரம் மக்கள் வசித்த பாக்முட் ரஷிய தாக்குதலில் சீர்குலைந்தது
- எதிர்தாக்குதலில் உக்ரைன் படை ஏழு கி.மீட்டர் வரை முன்னோக்கி சென்றுள்ளது
கடந்த வருடம் பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இதனை எதிர்த்து போராடி வருகிறது. 500 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷியாவிலிருந்து கடினமான தாக்குதல்களை சந்தித்து வருவதாக கூறிய உக்ரைன் இதனை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களையும், பீரங்கிகளையும் வழங்குமாறு அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது.
ரஷிய படைகள் சென்ற மே மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான பாக்முட்டைச் சுற்றியுள்ள பல சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியது. அப்பகுதிகளை இன்று தங்கள் படைகள் மீட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பல நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனில் வேரூன்றிய ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் கடுமையாக போரிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
"கடந்த ஒரு வாரத்தில் மேம்படுத்தப்பட்ட திறனுடன் எங்கள் படைகள் பாக்முட் திசை நோக்கி சென்றது. இதன் பயனாக சுமார் 7 கிலோமீட்டர் பகுதி ரஷிய ஆக்ரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் "கார்கிவை சேர்ந்த குப்யான்ஸ்க் (Kupyansk) பகுதியில் ரஷிய படைகள் கடந்த வார இறுதியில் இருந்து தீவிரமாக முன்னேறி வருகின்றன", என்று உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
70 ஆயிரம் மக்கள் வசித்த நகரமான பாக்முட் ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகி சீர்குலைந்தது. இந்நகரம் ஒயின் மற்றும் உப்புச் சுரங்கத்திற்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
- உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.
மாஸ்கோ:
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பல நகரங்கள் உருகுலைந்து விட்டன.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
உக்ரைன் அரசு கிரீமிய தீபகற்ப பகுதிகள் அருகே 7 ஆளில்லா டிரோன்கள் மற்றும் நீருக்கடியில் 2 ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் முயற்சியில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை. 2 ஆளில்லா விமானங்களும் கருங்கடல் பகுதி அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. மற்ற டிரோன்கள் போர் படைகளை கொண்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவித்து உள்ளது.
ஆனால் இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.
கிரீமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்யாவுக்கு வர இணைப்பு மேம்பாலம் உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் அதையும் உக்ரைன் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.
- கீவ் பகுதியில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது
- எதிர்தாக்குதலில் ரஷிய டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது
ரஷிய- உக்ரைன் போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மூன்று நாட்களாக இரவுநேர தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
நேற்றிரவு உக்ரைனின் தலைநகர் கீவை சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியா டிரோன் மூலம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் பலியானார். மேலும், 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
கீவ் நகர மேயர் விடாலி க்லிட்ச்கோ, "குண்டுவீச்சிற்கு பிறகு சோலோமியான்ஸ்கி, செவ்சென்கிவ்ஸ்கி, போடில்ஸ்கி, மற்றும் டார்னிட்ஸ்கி ஆகிய நகரங்களில் மீட்பு நடவடிக்கைக்காக அவசர உதவிக்குழுவினர் விரைந்தனர்" என தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரின் மத்தியில் உள்ள சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் டிரோன் பாகங்கள் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். டார்னிட்ஸ்கி மாவட்டத்திலும் இது போன்று கீழே வீழ்ந்த ரஷிய டிரோன்களால் ஒரு வீடு சேதமடைந்தது. செவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கட்டிடத்தின் பால்கனி தீக்கிரையானது.
இந்த தாக்குதலை ஈரான் நாட்டு ஷாஹெட் டிரோன்கள் மூலம் நடைபெற்ற ஒரு "பெரும் தாக்குதல்" என விமர்சித்துள்ள கீவ் நகர ராணுவ தலைமை அதிகாரி செர்ஹி பாப்கோ, "விமானப்படையின் எதிர்தாக்குல் படை, சுமார் ரஷியாவின் 10 தாக்குதல் இலக்கை அழித்தது" என டெலிகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவையல்லாமல் உக்ரைனின் வேறு சில பகுதிகளான தென்கிழக்கில் உள்ள சபோரிழியாவிலும், தெற்கில் உள்ள மைகோலெய்வ் பகுதியிலும் மற்றும் மேற்கில் உள்ள மெல்னிட்ஸ்கி பகுதியிலும் தாக்குதல் நடந்திருக்கிறது.
நேட்டோவின் உறுப்பினராகும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ உச்சி மாநாட்டிற்காக லிதுவேனியா நாட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிர்காலத்தில்தான் இணைய முடியும் என நேட்டோ நாடுகள் அறிவிப்பு
- காலவரையறை கூறப்படாதது அபத்தமான செயல் என்கிறார் ஜெலன்ஸ்கி
நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள 31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேற்று லிதுவேனியா நாட்டின் தலைநகர் வில்னியஸ் நகரில் இரண்டு நாள் உச்சி மாநாட்டிற்காக கூடியுள்ளனர். இந்த மாநாட்டில் உக்ரைன் நாட்டை நேட்டோவில் இணைத்து கொள்ள முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உட்பட பல நாட்டினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், நேட்டோ தலைவர்கள் உக்ரைன் எதிர்காலத்தில்தான் இந்த கூட்டணியில் சேர முடியும் என்று கூறியதோடு நிறுத்தி விட்டனர். அதனை அமைப்பில் சேர எந்த முறையான அழைப்பையும் வழங்கவில்லை.
உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது என்று பிரகடனத்தில் தெரிவித்த தலைவர்கள், அதற்கான செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.
நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுப்போம்" என்று மட்டுமே கூறியிருக்கிறார்.
இந்த பின்னடைவு ஜெலன்ஸ்கியை கோபப்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டுவீட் செய்திருக்கும் அவர், "நேட்டோ உக்ரைனை சேர்க்க தயாராக இல்லை. இணைவதற்கு எந்த காலவரையறையும் கூறப்படவில்லை. இது அபத்தமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.
ரஷியாவுடன் போரில் ஈடுபடும்போது நேட்டோவில் சேர முடியாது என்பதை ஜெலன்ஸ்கி ஏற்று கொள்கிறார். ஆனால், போர் முடிந்தவுடன் கூடிய விரைவில் அதில் சேர விரும்புகிறார்.
காலக்கெடு எதுவும் வரையறுக்காததால், ரஷியாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நேட்டோ ஈடுபடும்போது உக்ரைனை உறுப்பினராக்குவதா? வேண்டாமா? என தங்கள் நிலை ஒரு பேரம் பேசும் பொருளாக மாறிவிடும் சந்தர்ப்பம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு பலவீனம் ஆகி விடலாம்" என்று அதிபர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார்.
கடந்த காலத்தில், மேற்கத்திய பாதுகாப்பு உறுதிமொழிகள், 2 ரஷிய படையெடுப்புகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்பதாலும், உக்ரைன் நேட்டோவின் ஒரு அங்கமானால் ரஷியாவிற்கு போரை நீடிக்க ஒரு ஊக்கத்தை அளிக்கலாம் என்பதாலும் சில உறுப்பு நாடுகள் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அஞ்சுகிறது.
- ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது.
- மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 500-வது நாளை தொட்டது. ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஏவுகணைகளை அழிக்கும் அமைப்பு ராக்கெட் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கிடையே கிளஸ்டர் எனப்படும் கொத்துகுண்டுகளை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இந்த நிலையில் மிக ஆபத்தான கிளஸ்டர் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும் போது, 'கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை அளிப்பது தாமதப்படுத்தப்பட்டது. ஆனால் உக்ரைனில் ஆயுத பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்து குண்டுகள், ரஷியாவால் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைவிட மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.
கொத்து குண்டு என்பது ஒரு பெரிய குண்டுக்குள் பல சிறிய குண்டுகள் இருக்கும். ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து அந்த குண்டு வீசப்படும். அந்த பெரிய குண்டு இலக்கில் வெடித்த பின் அதில் இருந்து பல சிறிய குண்டுகள் வெடித்து சிதறும். இது ஒரே இலக்கின் பரந்த பகுதியை தாக்கும் தன்மை உடையவை.
இதனால் மோசமான பாதிப்பு, உயிரிழப்புகள் ஏற்படும். கொத்து குண்டுகள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற ஐ.நா. உடன்படிக்கையில் 100 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற குண்டுகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாக ரோவா கூறும் போது, 'உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடி குண்டுகளை வழங்கும் அமெரிக்கர்களின் முடிவு விரக்தியின் செயல். இது உக்ரைனில் எதிர்தாக்குதலில் ஏற்பட்ட தோல்வியையும் பலவீனத்தையும் காட்டுகிறது' என்றார்.
- உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி இன்றோடு 500-வது நாள் ஆகியுள்ளது
- உக்ரைன் இந்த போரில் 9 ஆயிரம் பொதுக்களை இழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. பின்னர் தனது ராணுவத்தின் துணையோடு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த ரஷிய- உக்ரைன் போர் உடனே முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றோடு 500 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது.
படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் குடிமக்கள் பயங்கரமான எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு நீண்ட போரில் இன்று நாம் மற்றொரு சோகமான மைல்கல்லை அடைந்திருக்கிறோம்" என்று அந்த அமைப்பின் துணைத்தலைவர் நோயல் கால்ஹவுன் (Noel Calhoun) கூறியிருக்கிறார்.
2023-ன் தொடக்கத்தில் சராசரி உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ஐ விட குறைவாக இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகமீண்டும் ஏறத் தொடங்கியது. ஜூன் 27-ல், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பின்பு மேற்கு நகரமான லிவிவ் நகர தாக்குதலில் கட்டிடங்களின் இடிபாடுகளில் 10-வதாக ஒரு உடலை கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 37 பேர் காயமடைந்திருந்தனர் எனக்கூறிய மேயர் ஆண்ட்ரி சடோவ்யி "படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தனது நகரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்றும் கூறியிருந்தார்.
உலக பாரம்பரிய மாநாட்டின் மூலம் "பாதுகாக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் சேதமடைந்ததாகவும் யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.
பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், பொதுமக்களின் மின்சார மற்றும் தண்ணீர் தேவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
புச்சா மற்றும் மரியுபோல் நகரங்கள், கடந்த ஆண்டு ரஷிய அட்டூழியங்களுக்கு எடுத்துக்காட்டாக மாறியது. அங்கு நடந்த படுகொலைகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் படங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ரஷியாவின் மீது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய குற்றச்சாட்டுகளை அதிகரித்தது.
நீண்டு கொண்டே செல்லும் இந்த போர், விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ரஷியா அடிக்கடி உக்ரைனில் மக்கள் வாழும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்
நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போரினால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ப்பலிகளும், கட்டிட சேதங்களும் ஏற்படுகின்றன.
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரின் மீது நேற்றிரவு நடைபெற்ற ஒரு ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் ஆண்ட்ரி சடோவ்யி தெரிவித்துள்ளார். நகரின் பொதுமக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளின் மீதான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என இதனை குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதல் நடந்த பகுதியில் சுமார் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 கார்கள் சேதமடைந்துள்ளதாக கூறினார்.
உக்ரைனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் சமூக வலைதளத்தில் கிளைமென்கோ, "அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குறைந்தது 7 பேராவது மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக" பதிவு செய்திருக்கிறார்.
மேயர் சடோவ்யி, தாக்கப்பட்ட இடத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கட்டிடத்தில் உடைந்த ஜன்னல்களை காண முடிகிறது. அக்கட்டிடத்தில் 4 தளங்கள் இருப்பதாக தெரிகிறது. சேதமடைந்த கார்கள் மற்றும் குப்பைகளும் காட்சிகளில் காணப்பட்டன.
பின்னர் பேரழிவின் அளவு தெளிவாக தெரிந்த பிறகு மேயர் மீண்டும் ஒரு புதிய வீடியோ முகவரியை பதிவு செய்தார்.
அதன்படி பல கட்டிடங்களின் கூரைகள் பறந்து சென்றிருப்பதும், ஒரு பள்ளியுடன் பாலிடெக்னிக் விடுதிகளும் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
லிவிவ் பிராந்திய தலைவர் மாக்ஸிம் கோஸிட்ஸ்க்யி "உக்ரைன் மக்களை அழிப்பதே ரஷியாவின் முக்கிய இலக்கு. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம்", என்று கூறியிருக்கிறார்.
உக்ரைனின் நகரங்கள் மீது பல மாதங்களாக, ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, "ரஷிய பயங்கரவாதிகளின் இரவு தாக்குதலுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
ரஷிய ராணுவம் இத்தாக்குதல் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரஷிய தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு நபரால் அடையாளம் தெரியாத சாதனம் வெடித்துள்ளது.
- தலைநகரில் வசிப்பவர்கள் அந்த இடத்தை அணுக வேண்டாம்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், " கீவ்வின் ஷெவ்சென்கிவ்ஸ்கி நீதிமன்றத்தில் அவசரநிலை நிலவுகிறது. வெடிப்புச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணைக் குழுக்கள், சிறப்புப் படைகள், வெடிமருந்து நிபுணர்கள் மற்றும் பிற தேவையான சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
முதற்கட்ட தகவல்களின்படி, நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு நபரால் அடையாளம் தெரியாத சாதனம் வெடிக்கப்பட்டது.
தலைநகரில் வசிப்பவர்கள் அந்த இடத்தை அணுக வேண்டாம்" என்றிருந்தது.
- உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும்.
- ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.
ஸ்பெயின் பிரதமர் சுற்றுப்பயணத்தை தொடங்கிய சமயத்தில், போர் தீவிரமாக நடைபெறும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்னர்.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4 லியோபார்ட் டாங்கிகள், கவச வாகனங்கள், நடமாடும் மருத்துவமனை உட்பட உக்ரைனுக்கு அதிக அளவிலான கனரக ஆயுதங்களை ஸ்பெயின் வழங்கும். மேலும் புனரமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 55 மில்லியன் யூரோக்களை வழங்கும்.
உக்ரைன் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். மற்ற நாடுகளும் பிராந்தியங்களும் சமாதானத் திட்டங்களை முன்வைக்கின்றன. அவர்களின் அக்கறை பாராட்டத்தக்கது, ஆனால், அதே நேரத்தில், அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இது ஆக்கிரமிப்பு போர். ஆக்கிரமிப்பாளருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே நடக்கும் இந்த சண்டையில் இருவரையும் சமமாக நடத்த முடியாது. விதிகளை புறக்கணிப்பதை எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது. அதனால்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சமாதான திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரஷியாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.
- அமெரிக்கா முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உக்ரைனுக்கு திடீரென பயணித்தார்.
கீவ்:
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.
உக்ரைனுக்கு 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உள்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது.
உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான மைக் பென்ஸ், உக்ரைனுக்கு திடீரென பயணித்தார். தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனின் எதிர்காலம் குறித்தும், இருதரப்பு மக்களிடையேயான தொடர்பு, பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.






