என் மலர்
உக்ரைன்
- செவ்வாய்க்கிழமை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது
- அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றச்சாட்டு
உக்ரைன்- ரஷியா இடையிலான போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.
அடிக்கடி ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வாறு நடத்தும்போதெல்லாம், ரஷியா பதிலடியாக ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு ஏவுகணை தாக்குலை ரஷியா நடத்தியது. அதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. மீட்புப்படையினர் இடிபாடுகளை நீக்கியபோது, ஆறு பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க் கைப்பற்றிய ரஷியா, தனது பகுதியாக அறிவித்துள்ளது. இந்த பிராந்தியத்தின் மாகிவ்கா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதுவும் அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகள் மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- உக்ரைன் மீது ரஷியா ராக்கெட் தாக்குதல் நடத்தியல் 3 பேர் உயிரிழப்பு
- ரஷியாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி
ரஷியா மற்றும் உக்ரைன் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டால், பதிலடியாக அடுத்தநாள் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்துகிறது. ரஷியா தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலடியாக டிரோன் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு உக்ரைன் மாஸ்கோவை குறிவைத்து இரண்டு டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், ரஷியா அதை நடுவானில் தடுத்து அழித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு பதிலடியாக ரஷியா ஜபோரிஷியா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலை இருக்கும் நகரம் இதுவாகும்.
அதேவேளையில் மாஸ்கோவில் உள்ள செர்கிவ் பொசாட் என்ற இடத்தில் ராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவித்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயம் அடைந்துள்ளது. இந்த வெடிவிபத்தால் 38 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமைடைந்துள்ளது. அருகில் உள்ளவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொழிற்சாலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில ரஷியா மீடியாக்கல் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷியா விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தெரிவிக்கவில்லை.
- உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. அவ்வப்போது, ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது இரண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 19 போலீஸ் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
- ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா தெரிவிக்கவில்லை
ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரு தரப்பிலும் உயிர்ச் சேதமும், கட்டிட சேதங்களும் தொடர்கின்றன. ஆனாலும், பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கடல் பகுதியின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரஷியாவின் மிகப்பெரிய துறைமுகம் நோவோரோசிஸ்க் (Novorossiysk). உக்ரைனின் உளவுத்துறையும், கடற்படையும் இணைந்து நடத்திய கடல் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் பெரிய கப்பலான ஒலெனெகோர்ஸ்கி கோர்னியாக் (Olenegorsky Gornyak) தாக்கப்பட்டது.
450 கிலோ டைனமைட் வெடிப்பொருளுடன் சென்ற உக்ரைனின் ஆளில்லா சிறுகப்பல்கள் (Sea Drone) தாக்கியதில், அந்த கப்பல் பலத்த சேதமடைந்திருப்பதாகவும், அது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இனி பயன்படாது எனவும் உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.
இரு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்த ரஷியா, துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கவில்லை.
ரஷிய ஏற்றுமதிகளுக்கு நோவோரோசிஸ்க் துறைமுகம் ஒரு முக்கியமான இடம். 2-ம் உலகப் போரின்போது கட்டமைக்கப்பட்ட 'லேண்டிங் ஷிப்' எனப்படும் வகையை சேர்ந்த ஒலெனெகோர்ஸ்கி கப்பல், ராணுவ தளவாடங்களை நீர் மற்றும் நிலத்தில் இருந்து எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
எனவே இப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது.
- டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது
- உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது.
இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். ரஷிய- உக்ரைன் போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை (port of Izmail) ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் அத்துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் அத்துறைமுகத்திற்கு உள்ளே வர இருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றது.
"ஆப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் சைனா ஆகிய நாடுகளுக்காக தானியங்களை ஏற்றி செல்ல கப்பல்கள் வர இருந்தன. இத்தாக்குதல்களால் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கிறது. டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது" என்று இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் (Oleksandr Kubrakov) தெரிவித்தார்.
"உலகத்திற்கே சர்வ நாசத்தை விளைவிக்கும் ஒரு போரை ரஷியா நடத்தி வருகிறது. அவர்களின் இந்த வெறியாட்டத்தால் உலக உணவு சந்தை அழிந்துவிடும். அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள். தானிய வினியோகம் பாதிக்கப்படுவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ரஷியா, "அந்த துறைமுகம் அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், ராணுவ தளவடங்களுக்கும் புகலிடமாக திகழ்ந்தது" என கூறியிருக்கிறது.
உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும் அங்கிருந்து வெளிவரும் புகைப்படங்களில், உடைந்த கட்டிடங்களும், பெரும் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்களும் மற்றும் மிக பரவலாக சிதறிக்கிடக்கும் தானியங்களும் காணப்பட்டது.
உலகளவில் தானியங்களுக்கு தட்டுப்பாடும், தானியங்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
- சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்தது
- "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்
கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய குற்றச்சாட்டை உக்ரைன் வைத்துள்ளது.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்ஸன் பகுதி உக்ரைன் நாட்டால் மீட்கப்பட்டது. இங்கு ரஷியாவால் அடைக்கப்பட்டிருந்த போர் கைதிகளிடம் உக்ரைன் விசாரணை நடத்தியது. உக்ரைன் அதிகாரிகளுடன் இணைந்து மனித உரிமை சட்டங்களுக்கான குளோபல் ரைட்ஸ் கம்ப்ளையன்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் மொபைல் ஜஸ்டிஸ் டீம் குழுவினர் செயலாற்றினர்.
இதில் கைதிகளை ரஷியா உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கியதாக இந்த குழு கண்டுபிடித்துள்ளது.
சுமார் 97,000 போர் குற்றச்சாட்டு அறிக்கைகளை உக்ரைன் ஆராய்ந்து ரஷியாவை சேர்ந்த 220 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டவர்களை பல்வேறு விதமாக ரஷியர்கள் சித்ரவதை செய்துள்ளனர். கைதிகளை அடிப்பது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, அவர்களின் பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது மற்றும் ஒரு கைதி பாலியல் கொடுமை செய்யப்படுவதை பிற கைதிகளை பார்க்க வைப்பது போன்ற துன்புறுத்தல்களை கையாண்டனர்.
மேலும் கைதிகளின் முகத்தை மெல்லிய துணியால் மூடி மூச்சு திணறும் அளவிற்கு அதிவேகமாக நீரை பாய்ச்சும் "வாட்டர் போர்டிங்" எனப்படும் தீவிர சித்ரவதையையும் கையாண்டனர்.
இக்குற்றச்சாட்டுகளில் பெரும் குற்றம் புரிந்தவர்கள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். இந்த நீதிமன்றம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக ஏற்கனவே கைது உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவால் கைது செய்யப்பட்டவர்களில் உக்ரைன் ராணுவத்தை சேர்ந்தவர்களை தவிர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கல்வி பணியில் உள்ளவர்களும் அடங்குவர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ரஷியா மறுத்துள்ளது.
- ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- இதற்கு மறுநாளில் ரஷிய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீவ்:
உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது.
உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் ராணுவம் ரஷியாவின் மாஸ்கோ நகர் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் அமைந்துள்ள அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் மீது நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த மறுநாளில் ரஷிய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
- ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள்
2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர்பலிகளும் தொடர்கிறது.
இந்நிலையில் ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
நேற்று ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷியாவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் மூடப்பட்டது.
இத்தாக்குதல்கள் குறித்து தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:
ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷியாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷிய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள் என உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே ரஷியா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.
- ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
- உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
கிவ்:
உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.
சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் பாலம் மற்றும் ஆயுத கிடங்கு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்தப்பட்டன.
அதே போல் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
இதற்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரீமியா மற்றும் மாஸ்கோ நகரம் மீது நடந்த உக்ரைனின் டிரோன் தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும். உக்ரைனின் செயல்கள் பதற்றங்களை அதிகரிக்க செய்யும். இந்த சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன. இதனால் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை எங்களது தரப்புக்கு உள்ளது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது.
இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷியாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
கிரீமியா மற்றும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.
- கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு.
- தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.
அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது. இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்நிலையில், உக்ரைன் தானியங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகங்கள் மூலம் ஜெலென்ஸ்கி கூறுகையில், "தானியங்கள் இறக்குமதி எந்தவொரு கட்டுப்பாடும் நீட்டிப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐரோப்பா ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கு அதன் எல்லைகளை மூடுவதை விட பகுத்தறிவுடன் செயல்படும் நிறுவன திறனைக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 15 அன்று உக்ரேனிய தானியங்கள் குறைவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன்" என்றார்.
- ஒடேசாவை குறிவைத்து ரஷியா தொடர் தாக்குதல்
- உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வி என்கிறார் ரஷிய அதிபர் புதின்
கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர்கள் பலியாவதும், கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் சேதமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட ரஷியா தாக்குதலில் உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள ஒரு மிக பெரிய கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தேவாலயம் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது.
1794-ல் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயமான டிரான்ஸ்ஃபிகரேஷன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதி என வர்ணிக்கப்பட்ட நகர வளாகத்திற்குள் இந்த தேவாலயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1936-ல் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சியில் இடிக்கப்பட்ட இந்த தேவாலயம், 1990-களில் சோவியத் ஒன்றியம் உடைந்த காலத்தில் மறுசீரமைக்கப்பட்டது.
கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்திருக்கும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கெதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் தோல்வியை கண்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை போர் குற்றம் என கூறியிருக்கும் உக்ரைன், இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:-
ரஷியா இதற்கு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். உலக மக்கள் தீவிரவாத தாக்குதலை வழக்கமான சம்பவமாக பழகி கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. ரஷியாவின் இலக்கு நகரங்களோ, கிராமங்களோ அல்லது பொது மக்களோ இல்லை. மனிதகுலமும் ஐரோப்பிய கலாசாரமும்தான் அவர்களின் தாக்குதல் இலக்கு.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
அதிக அளவில் சேதம் அடைந்த தேவாலயத்தின் இடிபாடுகளிலிருந்து மொசைக் துண்டுகள் பணியாட்களால் சுத்தம் செய்யப்படுவது அங்கிருந்து வெளிவரும் காட்சிகளில் தெரிந்தது. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என தெரிகிறது.
சிலை சேதத்திற்குள்ளாகியிருக்கிறது. தேவாலயத்தின் மீது நேரடியாக நடைபெற்ற தாக்குதல் இது. மூன்று உயர்நிலைகள் சேதமடைந்திருக்கிறது என குறிப்பிட்ட பாதிரியார் ஒருவர் கூறியுள்ளார்.
ரஷியாவிற்கெதிரான தீவிரவாத செயல்களுக்கான பயிற்சி கூடமாக இந்த தேவாலயம் இருந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது.
ஆனால் அந்நகர சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுக்குமாடி கட்டிடம் மீது தாக்குதல்.
- கருங்கடல் தானிய ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் ரஷியா தொடர்ந்து தாக்குதல்.
500 நாட்களை கடந்து நடைபெறும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. அந்த தானிய ஏற்றுமதி கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் இருக்கவும் ரஷியா சம்மத்தது.
இந்த ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் நேற்றிரவு துறைமுக நகரமான உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷியா தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. தொடர்ந்து 2-வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருங்கடல் ஒப்பந்தம் காலாவதியான பின் இப்பகுதியில் ரஷியா நடத்தும் மிகப்பெரிய இரண்டாவது தாக்குதல் இது என இன்று காலை தெரிவித்த அப்பகுதி ஆளுநர் ஓலெக் கிளிப்பர், மக்களை தங்கள் வசிப்பிடங்களிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இத்தாக்குதலின் விளைவுகளை காட்டும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு தெருவில் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டு ஏராளமான கண்ணாடித் துகள்கள் சிதறிக்கிடக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தெரிகிறது.
ராணுவ தாக்குதல்களின்போது ஒலிக்கப்படும் எச்சரிக்கை சைரன்கள், உக்ரைன் முழுவதும் 10-ற்கும் மேற்பட்ட இடங்களில் ஒலிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய முன்தினம் நடைபெற்ற ரஷிய தாக்குதலில், உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்ள கட்டிடங்கள் சேதமானது.
அதற்கு பின் ரஷியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், கருங்கடல் வழியாக நடைபெறும் தானிய ஏற்றுமதியின் எதிர்காலம் குறித்து ஒரு மறைமுக எச்சரிக்கையை வெளியிட்டதுடன் ஒடேசா துறைமுகத்தை உக்ரைன் "போர் நோக்கங்களுக்காக" பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருங்கடலில் கலிப்ர் ஏவுகணைகள் ஏவப்பட்டதை கண்டறிந்ததாக உக்ரைனின் விமானப்படையும் தெரிவித்திருக்கிறது.






