என் மலர்tooltip icon

    சீனா

    • தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது.
    • சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    தைவானை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தைவானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார்.

    அதேபோல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தைவான் சென்றுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது. சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

    • நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • இந்திய மருந்துகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் சீனாவில் கள்ள மார்க்கெட்டில் போலி கொரோனா மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனாவின் பரவல் உச்சத்தை தொட்டது.இதனால் தினமும் ஏராளமானோர் கொரனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரிமொவிர், பஞ்சிஸ்டா, மல்லுநெட் ஆகிய 4 மருந்துகளுகளின் தேவை சீனாவில் அதிகமாக உள்ளது.

    அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த மருந்துகளை பயன்படுத்த சீனா இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் பலர் ஆன்லைன் மூலம் இந்த மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

    இந்திய மருந்துகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் சீனாவில் கள்ள மார்க்கெட்டில் போலி கொரோனா மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    சீனாவில் புழக்கத்தில் உள்ள இந்திய மருந்துகளில் அதிக அளவு போலியானது என சீன சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன.
    • முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும்.

    பீஜிங் :

    சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு போடப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதனால் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15 முதல் கடந்த 4-ந் தேதிக்குள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    சீனாவின் மிகவும் புகழ்பெற்ற என்ஜினீயரிங் அகாடமியான இதில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

    ஆனால் எந்தவொரு விஞ்ஞானியின் உயிரிழப்புக்கும் குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும். அங்கு கடந்த 2017-2020 ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 17 பேர் உயிரிழந்து இருந்தனர்.

    ஆனால் இந்த ஒரு மாதத்துக்குள் 20 பேர் உயிரிழந்திருப்பது நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை.

    பீஜிங்:

    கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம்அடைந்தனர்.

    கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

    • ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளன.

    இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவொ நிங் கூறுகையில், 'தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ அடிப்படை இல்லை, இந்த நடைமுறைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    லண்டன்:

    சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது. சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

    ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது.
    • உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    பீஜிங்:

    புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.
    • மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின.

    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் ஜெங்சோவ் நகரில் ஜெங்சின் ஹுவாங்கே என்கிற மிகப்பெரிய மேம்பாலம் உள்ளது.

    மஞ்சள் ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த மேம்பாலம் ஜெங்சோவ் மற்றும் அண்டை நகரான சின்சியாங்கை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை ஜெங்சோவ் நகரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலம் முழுவதையும் பனி மூடியிருந்தது.

    இதனால் அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதித்து உள்ளூர் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேம்பாலத்தின் இருதிசையில் இருந்தும் வாகனங்கள் தொடர்ந்து பயணித்தன. ஒருகட்டத்தில் முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானது.

    இதனால் மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின. அதனை தொடர்ந்து பின்னால் வந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட டஜன் கணக்கான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

    பாலத்தின் இருதிசையில் இருந்தும் வந்த வாகனங்கள் பல பாலத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதிக்கொண்டே இருந்தன. இதில் பல கார்கள் மற்றும் லாரிகள் நொறுங்கி, ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்தன.

    இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

    கிட்டத்தட்ட 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே ஜெங்சின் ஹுவாங்கே மேம்பாலத்தில் சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டதை காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

    • சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
    • சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

    இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

    ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது.

    சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது. அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.

    சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள்.

    இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

    என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் ஷாங்காய் புடன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜியாங் ஷிபோ கூறுகையில், "முதியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களுக்கு தொற்று என்பது ஆபத்தானது, அதனால் மரணமும் நேரிடக்கூடும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

    • கொரோனா கட்டுப்பாடுகளால் பலத்த பொருளாதார சிக்கலை சந்தித்த சீனா, இப்போது மீண்டும் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மீண்டும் சிக்கலை சந்தித்தது.
    • மக்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள சீன அரசு முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியது.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.

    இதையடுத்து சீன தேசிய சுகாதார ஆணையம் மக்களுக்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் வெளியூர் சென்று வந்தால் கட்டாய தனிமை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

    இதனால் சீன மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். இது அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால் பலத்த பொருளாதார சிக்கலை சந்தித்த சீனா, இப்போது மீண்டும் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மீண்டும் சிக்கலை சந்தித்தது.

    எனவே மக்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள சீன அரசு முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியது.

    அதன் முதல் கட்டமாக உள்நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை விலக்கி கொள்ள முடிவு செய்தது.

    அதன்படி வருகிற 8-ந் தேதி முதல் கட்டாய தனிமை உத்தரவு விலக்கி கொள்ளப்படும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையடுத்து இனி சீனாவுக்குள் பயணம் செய்பவர்கள் 5 நாட்கள் அரசு முகாம்களில் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்பதும், அதன்பிறகு வீடுகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் விலக்கி கொள்ளப்படுகிறது.

    • தைவானுடன் பிறநாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
    • இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த 1927-ம் ஆண்டில் தொடங்கி 1949-ல் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பின் பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தனிநாடாக உருவெடுத்தது.

    ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு தைவானுடன் பிறநாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    ஆனால் சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்து ஆழப்படுத்தி வருகிறது. அதோடு சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.

    இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அதை தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் உருவானது.

    இந்த நிலையில் தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்ற நிலையில், சீனா அதை வன்மையாக கண்டித்தது.

    மேலும் தைவானை மிரட்டும் விதமாக கடந்த புதன்கிழமை தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியது. இதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

    இந்த நிலையில் சீனா நேற்று தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், "தைவானைச் சுற்றி கூட்டு போர் தயார்நிலை ரோந்து மற்றும் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா மற்றும் தைவானில் இருந்து அதிகரித்து வரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் ஒரு உறுதியான பதில் இது. தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார்.

    சீனாவின் இந்த திடீர் போர்ப்பயிற்சியால் இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

    • சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.
    • இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. அங்கு தினமும், 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும் நாள்தோறும் 5 ஆயிரம் பேர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி முதல் 20 நாட்களில் சீனாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

    ஆனால் சீனா கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை சரியாக அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து சீன அரசாங்கம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் தாங்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

    இனி கொரோனா பாதிப்பு தகவல்கள் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணங்களை குறிப்பிடவில்லை. அதேபோல் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எப்படி கொரோனா தகவல்களை அளிக்கும் என்பது குறித்தும் கூறப்படவில்லை.

    ×