என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்ந்த திருப்பங்கள்!
    X

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் நிகழ்ந்த திருப்பங்கள்!

    • செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர்.
    • அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஆறு, ஏழு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக எதுவும் நடக்கலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏன்? என்றால் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய், ஆட்சியில் பங்கு என்று கூறியதால் அவருடன் யார் இணைவார்கள் என்று பலராலும் உற்று நோக்கப்பட்டது.

    ஆனால் நாம் நினைப்பதற்கு மாறாக தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வாரமாக நிகழும் சம்பவங்களால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை என்றால் மிகையாகாது. அது குறித்து பார்ப்போம்...

    * தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகல்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்தது. அன்றில் இருந்து அமைதியாக இருந்த டி.டி.வி. தினகரன் கடந்த வாரம் அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. அதற்கேற்ப பா.ஜ.க. செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றாக இணைய முயற்சி எடுத்த மத்திய மந்திரி அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம். கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு நயினார் நாகேந்திரனும் பதில் அளித்து இருந்தார்.

    * அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு

    எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பயணித்து வரும் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதன் காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து செப்.5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்த செங்கோட்டையன் அன்று செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் கூறுகையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். ஆனால், அதற்கு அடுத்தநாளே அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் வகித்து வந்த பொறுப்புகளில் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரித்தனர். மேலும், அ.தி.மு.க.வில் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சியே என்று தெரிவித்த செங்கோட்டையன் கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்லவில்லை என்றார்.

    ஆனால் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் ஆதரவாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசிவருகிறார்.

    * மல்லை சத்யா ம.தி.மு.க.-வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

    சில காலமாகவே ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன். 32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.

    * பா.ம.க.-வில் இருந்து அன்புமணி நீக்கம்

    பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இதனால் இருதரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர்களுடன் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை. இதையடுத்து இருதரப்பினரும் மாறிமாறி பா.ம.க.வில் இருந்து ஆதரவாளர்களை உத்தரவிட்டனர். இதனிடையே, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியுள்ளார் ராமதாஸ். இதனால் பா.ம.க. யாருடைய தலைமையின் கீழ் செயல்படுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தில் அதிக வாக்கு சதவீதம் கொண்ட அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளில் நிலவும் உட்கட்சி பூசலால் அக்கட்சி தொண்டர்களிடையே சலிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், திமுக, அதிமுக- பாஜக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசியல் நிலவரத்தால் 4 முனை என்பது இன்னும் எத்தனை முனையாகும் என்பதே அனைவர் மனதிலும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

    அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதற்கு ஏற்ப வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×