என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசியல், கொள்கை எதிரிகளுடன் கூட்டணி இல்லை... தெளிவுப்படுத்திய விஜய்... அடுத்து என்ன..?

    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது.
    • தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக எதிரெதிர் துருவங்களாக களம் காண்கின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் விரிசல் இல்லை. எனினும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

    மறுப்பக்கம் அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாகி இருக்கிறது. அதில் தற்போது பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமின்றி அமமுக இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேமுதிக கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேமுதிக தெரிவித்து இருக்கிறது.

    இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது. தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொடங்கியது முதலே திமுக மற்றும் பாஜக கட்சிகளை மட்டும் கடுமையாக சாடி வந்தார். மேலும், தவெக-வின் அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் குறிப்பிட்டார்.

    அரசியலில் களமிறங்கியதுமே மாநிலத்தில் திமுக, மத்தியில் பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்யப்போவதை தவெக தலைவர் விஜய் உறுதிப்பட தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்ற பேச்சு எழுந்தது. வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், தவெக அதில் இணையுமா என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி அல்லது தன் தலைமையிலான கூட்டணியுடன் தான் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதை தெளிவுப்படுத்தி உள்ளார்.

    மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைக்க தவெக ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது. திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார். இதுவரை தவெக தலைமையிலான கூட்டணியில் வேறு கட்சிகள் இணைந்துள்ளது பற்றி எந்த தகவலும் இல்லை.

    தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட உச்ச நடிகராக கட்சி தொடங்கியிருக்கும் விஜய், முதல் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார், தேர்தலில் அவரது தவெக கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பதை காலம் தான் சொல்லும்.

    Next Story
    ×