என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டியை டிஜிட்டலில் ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த போட்டியை ஸ்டார் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதிக அளவில் இந்த போட்டியை டெலிவி‌ஷனில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல ஐ.பி.எல். போட்டி டிஜிட்டலிலும் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த போட்டியை நேடியாக காணலாம்.

    டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஐ.பி.எல். போட்டி 6 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் போட்யின் வர்ணனையை கேட்க முடியும்.

    ஐ.பி.எல். போட்டிக்காக ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் அளித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியை டிஜிட்டலில் ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டியை நேடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு 95 சதவீத விளம்பரங்கள் பதிவாகி விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் நேரத்தைவிட தற்போது கூடுதலாக 30 நிமிட நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அலசல் குறித்த விவாதம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரியாவைச் சேர்ந்த வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ரஷியாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் டொமினிக் தீம், 6-2, 7-6, 7-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் ஆஸ்திரிய வீரர் என்ற பெருமையை தீம் பெற்றுள்ளார்.

    ‘முதல் செட்டை எளிதாக வென்றபிறகு, அடுத்த செட்களும் எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் டைபிரேக்கர் வரை நீடித்தது. கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது. இரண்டு டைபிரேக்குகளும் ஆச்சரியமாக இருந்தது’ என டொமினிக் தீம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக  நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் வீரர் பாப்லோ காரனோ பஸ்டாவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார். இதன்மூலம் 1994க்கு பிறகு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜெர்மன் வீரர் என்ற பெருமையை அலெக்சாண்டர்  பெற்றுள்ளார்.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விதிமுறைப்படி ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காலரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசின் பதிவுத்துறை அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது இந்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்துக்குள் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை ஆன்-லைன் மூலம் நடத்தக்கூடாது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
    மான்செஸ்டர்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3  விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

    ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி ரன்கள் எடுக்கத் திணறினர்.
    முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார்.
    மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    சாம் பில்லிங்ஸ் தனி ஒருவராக போராடினார். கிடைத்த பந்துகளை ரன்களாக மாற்றினார். ஆனால் அவருக்கும் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை.

    சிறப்பாக ஆடிய சாம் பில்லிங்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 100 பந்துகளில் 2 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 118 ரன்கள் குவித்து ஆட்டத்தின் இறுதி பந்தில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜேசில்வுட் தேர்வு செய்யப்பட்டார்.
    பயிற்சியின்போது பந்து தலையில் தாக்கியதால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்காக நேற்று ஆஸ்திரேலியா வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தை பவுன்சர் பந்து தலையில் பலமாக தாக்கியது.

    இதனால் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்தடுமாறினார். உடனே அவருக்கு மூளையதிர்ச்சி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்தது.

    என்றாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    2-வது போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்த பின் போட்டியில் சேர்க்கப்படுவார் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தரநிலை பெறாத அஸ்ரென்காவுடம் மோதினார்.

    முதல் செட்டை 6-1 என செரீனா வில்லியம்ஸ் எளிதில் கைப்பற்றினார். இதனால் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்ரென்கா 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பயனாக 2-வது செட்டை 6-3 என அஸ்ரென்கா கைப்பற்றினார். 3-வது செட்டிலும் அஸ்ரென்கா கையே ஓங்கியது. இதனால் அந்த செட்டையும் 6-3 எனக் கைப்பற்றி 1-, 6-3, 6-3 என செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா - அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் நவோமி ஒசாகா 7(7)-6(1), 3-6, 6-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒவோமி ஒசாகா - அஸ்ரென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    மான்செஸ்டர்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் சொதப்பிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு நாள் தொடரில் சாதிக்கும் முனைப்புடன் உள்ளார். அதே சமயம் இந்த சீசனில் உள்ளூரில் நடக்கும் கடைசி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் வேட்கையுடன் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஆயத்தமாக உள்ளது.

    ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இன்று களம் காண உள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அதிரடி வீரர் ஜாசன் ராயின் வருகை இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும். மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டுவதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்றான சூப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அணியின் வெற்றிக்கு 10 புள்ளியும், டை அல்லது முடிவு கிடைக்காமல் போனால் 5 புள்ளியும் வழங்கப்படும். அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக வாட்சன் கூறியுள்ளார்.
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) ‘யூடியூப்’ சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும். தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம். நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விரைவில் முடிந்த அளவுக்கு வேகமாக செயல்பட முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    கடந்த 4 வருடங்களாக நான் அவ்வப்போது தான் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திறமையை மேம்படுத்துவது என்பது இன்னும் சவாலானது தான். 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டி (சதம் அடித்தது) மட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் எனக்கு நன்றாக அமைந்தது. கடந்த ஆண்டில் (2019) சில ஆட்டங்களில் சரியாக ரன்கள் எடுக்காவிட்டாலும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்னை தக்கவைத்தது. மற்ற அணிகளாக இருந்தால் நிச்சயம் என்னை நீக்கி இருப்பார்கள்’ என்றார்.

    கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
    ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.

    இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில் நேற்று கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டி ர்டினிடெட் நகரில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.

    இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8 ரன்னிலும் மார்க் டியல் 29 ரன்னிலும் வெளியேறினர்.

    அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர் சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். 

    ஆனால், டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டிரிபாகோ அணியின் கேப்டனும் பந்துவீச்சாளருமான கேரன் போலாட்டு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரு வீரர்களும் எதிர் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர்.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த சிறப்பான ஆட்டத்தால் 18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157 ரன்களை எட்டியது.

    இதனால் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.

    டிராபாகோ அணியின் சிமன்ஸ் 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதேபோல் டேரன் பிராவோவும் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த டிராபாகோ அணியின் சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அந்த அணியின் கேப்டன்
    கேரன் போலாடுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், தயாராக ஏற்றுக் கொள்வேன் என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக இளம் தலைமுறையில் ஷுப்மான் கில் சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

    இதனால் கேகேஆர் அணி ஷுப்மான் கில்லை ஏலம் ஏலம் எடுத்தது. எந்தவொரு பந்து வீச்சாளரின் பந்தையும் தயங்காமல் எதிர்கொள்ளும் திறமையுள்ள ஷுப்மான் கில்லுக்கு கடந்த ஐபிஎல் சீசனில் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    பெரும்பாலான ஆட்டங்களில் பின்வரிசையில்தான் களம் இறங்கினார். இந்த முறை அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

    இந்நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தால், களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தொடக்க வீரராக களம் இறங்குவேன். நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது அந்த சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருக்கும்.

    அதனால் பேட்டிங் செய்ய வரும்போது இப்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பதில்லை. என்னுடைய மனதில் எந்த அணியில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை ஜெயித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இருக்கும்.’’ என்றார்.0
    கொரோனா பரிசோதனை பள்ளித்தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல் இருந்தது என டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

    வீரர்கள் துபாய்க்கு புறப்படுவற்கு முன்பும், துபாய் சென்ற பிறகும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடிவும் என்ற நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டனர்.

    இந்நிலையில் கொரேனா பரிசோதனை அரசுத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது போன்ற உணர்வை அளித்தது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘அணி மானேஜர் நாளை காலை கொரோனா பரிசோதனை முடிவு வரும் எனக்கூறும்போது, எங்களுக்கு கவலையாக இருக்கும். அது பள்ளி அரசுத் தேர்வு முடிவுக்கு காத்திருப்பதுபோல் உணர்ந்தேன்.

    அறைக்குள் இருப்பது எளிதான காரியம் அல்ல. வெப்பம் அதிகமான இருந்தது. ஆனால், ஓட்டல் அறையில் ஏ.சி. இருந்ததால், எல்லா நேரமும் அதை பயன்படுத்திக் கொண்டேன். இரண்டு செசன் பயிற்சிக்குப்பின் என்னுடைய ரிதம் மெதுவாக திரும்புகிறது. ஆனால், உறுதியாக திரும்பிவிடும்.

    பேட்டிங்கின் தீவிரத்தை வலைப்பயிற்சியிலும், ஆட்டத்திலும் பார்க்க முடியும். பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை வெளிப்படுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய டிரிக்கை பெற்றனர். கிரிக்கெட் விளையாட ஓய்வு நேரம், நாங்கள் கிரிக்கெட்டை எப்படி விரும்புகிறோம் என்பதை உணர வைத்தது’’ என்றார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
    அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் - 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள்.

    முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) - 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 3-வது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7) - 6(5) என கைப்பற்றினார்.

    இதன்மூலம் 3-0 என வெற்றி பெற்று டேயல் மெட்வெதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்களுக்கான அரையிறுதியில் தியெம் - மெட்வெதேவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் - கர்ரேனோ பஸ்டா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    ×