என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு படு தோல்வியை தழுவியது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் மோசமான ஸ்கோர் ஆகும்.
முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது. ஆட்டத்தின் 3-வது நாளான நேற்று (டிசம்பர் 19) இந்த மோசமான சாதனை நிகழ்ந்துள்ளது.
இதே நாளில் தான் இந்திய அணி மிகப்பெரிய சாதனையும் படைத்துள்ளது. 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்களை (கருண்நாயர் 303, ராகுல் 199) குவித்தது. 4-வது நாள் ஆட்டத்தில் அதாவது டிசம்பர் 19-ல் இந்த சாதனை படைக்கப்பட்டது.
இந்தியாவின் அதிகபட்ச ரன்னும், குறைந்தபட்ச ரன்னும் டிசம்பர் 19-ந்தேதி தான் நிகழ்ந்துள்ளது. அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே டிசம்பர் 19-ந்தேதி தான் குறைந்த பட்ச ஸ்கோரும் பதிவாகி இருப்பது சுவாரசியமானது.
பார்சிலோனா:
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - வாலன்சியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக அவர் அடித்த 643-வது கோலாகும்.
இதன்மூலம் மெஸ்சி பிரேசில் கால்பந்து சகாப்தம் பீலேயின் சாதனையை சமன் செய்தார்.
பீலே 15 வயதில் சாண்டோஸ் கிளப்புக்காக விளையாட தொடங்கினார். 1956-ல் அந்த கிளப்பில் சேர்ந்தார். 1974 வரை பிரேசிலுக்காக அவர் பல சர்வதேச போட்டிகளில் விளையாடினார். பீலே சாண்டோஸ் கிளப்புக்காக 665 ஆட்டங்களில் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார்.
மெஸ்சி தனது 17-வது வயதில் 2004-ல் பார்சிலோனா கிளப் பில் சேர்ந்தார். அவர் 748 போட்டிகளில் 643 கோல்களை அடித்து பீலேயை சமன் செய்துள்ளார்.
10 லாலீகா பட்டங்களையும், 4 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் பார்சிலோ அணி வெல்ல மெஸ்சி முக்கிய வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான நாளாக நேற்று அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்னை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வியை தழுவியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவாக நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 191 ரன்னில் இந்தியா மடக்கியது.
53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் ரன்களை குவித்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.
128 பந்துகளை மட்டுமே ஆடிய இந்திய வீரர்கள் 36 ரன்களில் சுருண்டனர். டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. 90 ரன் இலக்கை ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இந்த ஒற்றை இலக்கத்தில் அதிகபட்ச ரன் 9 (அகர்வால்) ஆகும். புஜாரா, ரகானே, அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆனார்கள்.
அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் அவுட் ஆனது இந்திய அணியின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பு 1924-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில்ஆட்டம் இழந்து இருந்தனர்.
இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்னில் சுருண்டு இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு தற்போது தான் இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு இந்தியா படுதோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த தோல்வி தொடர்பாக கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் கூறியதாவது:-
முதல் இன்னிங்சில் பேட்டிங், பந்துவீச்சை பார்த்தபோது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது போல் தெரிந்தது. 3-வது நாள் காலையில் ஆஸ்திரேலிய அணியினர் கடுமையான முறையில் மீண்டு வந்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.
போட்டி முடியும்வரை எதுவும் முடிந்து விடவில்லை. 2-வது இன்னிங்சில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே கூறும்போது, ‘கம்மின்ஸ், ஹாசல்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்துகள் இப்படிவரும் என்று இந்திய வீரர்கள் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் செயல் பாட்டை நம்பவே முடிய வில்லை’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் பிரக்யான் ஓஜா கூறும்போது, ‘இந்த டெஸ்டில் இரு அணியும் சம பலத்துடன் விளையாடின. ஒரு மணி நேர ஆட்டம் நமக்கு எதிராக மோசமாக திரும்பிவிட்டது’ என்றார்.
உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹாலை எதிர்த்து களம் இறங்க இருந்த ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யன் கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
இந்திய வீரர்கள் முகமது ஹூசாமுதீன் (57 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ) ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாக்ஷி, மனிஷா ஆகியோர் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர். இந்திய வீராங்கனை பூஜா ராணி (75 கிலோ) அரைஇறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் பெற்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார். 17 ஓவர்களை வீசி, 41 ரன்களை கொடுத்தார். விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.
முகமது ஷமி இடதுகாலில் கிழிந்த ஷூவை அணிந்து கொண்டு விளையாடிதை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக பகிர்ந்து இருந்தனர். அவர் கிழிந்த ஷூவுடன் பந்து வீசியது ஏன் என்பதற்கு, ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வியூகத்தின் அடிப்படையில் முகமது ஷமி கிழிந்த ஷூ அணிந்து விளையாடி உள்ளார். வீரரை நோக்கி பந்து வீசும் போது சரியான பிடிமானத்தில் சென்று சேர வேண்டும் என்பதால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அணிக்காக ஷமியின் அர்ப்பணிப்பை பார்த்த ரசிகர்கள் வலைதளத்தில் அவரை பாராட்டி வருகிறார்கள்.
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.
சென்னையின் எப்.சி. 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் கோவா அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
சென்னை அணி தொடக்க ஆட்டத்துக்கு பிறகு வெற்றி பெறவில்லை. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றி சென்னை அணிக்கு கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கோவா அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கோவா 7 முறையும், சென்னை அணி 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
நேற்று நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் ஜாம்செட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 10 புள்ளிகளுடன் ஜாம்செட்பூர் 5-வது இடத்தில் உள்ளது.
கவுகாத்தி அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.






